Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமிக்கு அருகில் வியாழன் கோள்: நேர்க்கோட்டில் அடுத்து என்னென்ன கோள்கள் எப்போது பூமிக்கு அருகே வரும்?

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:19 IST)
ராட்சத கோள் என்றழைக்கப்படும் வியாழன் கோள் நேற்று (செப்டம்பர் 26) நள்ளிரவு முழுவதும் பூமிக்கு மிக அருகே நேர்க்கோட்டில் வந்தது. பூமியின் நேர்க்கோட்டில் மீண்டும் வியாழன் மட்டுமின்றி மற்ற கோள்களையும் பார்க்க முடியுமா? எப்போது பார்க்கலாம்?


பூமியின் மேற்பரப்பில், சூரியன் மேற்கில் அஸ்தமிக்கும்போது வியாழன் கோள் வழக்கமாக கிழக்கில் உதயமாகும். இது தினசரி நடக்கக்கூடிய நிகழ்வு தான்.

ஆம். சூரியன் மறைந்த பிறகு, வானில் கிழக்குத் திசையில் ஒரு மிகவும் பிரகாசமான நட்சத்திரத்தைப் பார்த்துள்ளீர்களா? அந்தப் பிரகாசமான பொருள் நட்சத்திரம் அல்ல. அது தான் வியாழன் கோள்.

வெள்ளி கோளுக்கு அடுத்தபடியாக பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடிகின்ற கோள் வியாழன். வழக்கமாக சூரியன் மறைந்து இரண்டு மணிநேரம் கழித்து கிழக்கில் அதைப் பார்க்கலாம்.

பூமியோடு ஒரே நேர்க்கோட்டில் வியாழன்

இந்த வியாழன் கோள் பூமிக்கு நேர்க்கோட்டில் 13 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறது. இந்த நிகழ்வின்போது, ஆண்டின் மற்ற நேரத்தைவிட பெரியதாகவும் மிகப் பிரகாசமாகவும் தெரியும்.

இப்படியாக 13 மாதங்களுக்கு ஒருமுறை என்ற சுழற்சியில் பூமிக்கு நேர்கோட்டில் வரும். ஆனால், கடைசியாக 1963ஆம் ஆண்டில் வந்தபோது தான் பூமிக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் வியாழன் கோள் வந்தது. அதற்குப் பிறகு 59 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் மிக அருகே நெருங்கி வந்துள்ளது.

பூமியின் வியாழனும் சரியாக ஒரே வட்டங்களில் சூரியனைச் சுற்றி வராததால் இது நிகழ்கிறது. இந்த முறை, வியாழன் பூமியிலிருந்து சுமார் 590 மில்லியன் கி.மீ தொலைவில் வியாழன் வந்தது.

அது 1963ஆம் ஆண்டு வியாழன் கோள் இருந்த அதே தொலைவில் இந்த முறையும் பூமிக்கு அருகில் இருக்கும். வியாழன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்போது 965 மில்லியன் கி.மீ தூரத்தில் இருக்கும்.

"சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் உள்ளது. பூமி அதன் சுற்றுவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு வெளியே வியாழன் கோளின் சுற்றுவட்டப் பாதை உள்ளது," என்று வியாழன் பூமிக்கு அருகே வருவது குறித்து விளக்கினார் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பினுடைய மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும், "அந்தப் பாதையில் இரு கோள்களும் சுற்றும்போது, சூரியனுக்கு ஒருபுறத்தில் பூமியும் இன்னொருபுறத்தில் வியாழனும் நேரெதிர் திசையில் இருக்கும்போது இரண்டும் மிக அதிகமான தொலைவில் இருக்கும். அதுவே, இந்த இரண்டு கோள்களும் சூரியனின் ஒருபுறத்தில் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது இரண்டுக்கும் இடையிலான தொலைவு மிகக் குறைவாக இருக்கும்.

வியாழன் கோள் போலவே, செவ்வாயும் 1.8 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல் வருகின்றன. அதைப் போலவே, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் போன்ற கோள்களும் அதனதன் சுற்றுவட்டப் பாதையில் குறிப்பிட்ட நேரத்தில் இப்படி பூமிக்கு நெருக்கமாக வரும்," என்றார்.

வியாழன் கோளை எப்போது வரை பார்க்கலாம்?

 "பௌர்ணமியின்போது, சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே நேர்க்கோட்டில் பூமி இருக்கும். அதைப் போலவே, சூரியனுக்கும் வியாழனுக்கும் நடுவில் நேர்க்கோட்டில் பூமி இருக்கும். பௌர்ணமி மாதிரியே தான் இந்த அமைப்பும்," என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும், அந்த நேர்க்கோட்டில் இரவு 12 மணிக்கு நம் தலைக்கு மேல் வியாழன் கோள் வந்தது. ஆனால், இதை 26ஆம் தேதி இரவு மட்டும் தான் பார்க்க முடியும் என்றில்லை. இதை 10 நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தாலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல், இன்னும் சில நாட்களுக்க்குப் பார்லையிலும் இந்த அமைப்பைப் பார்க்க முடியும்.

துல்லியமாக வியாழன் கோளின் முழு வட்டத்தையும் அந்தத் தருணத்தில் பார்க்க முடிந்தது என்பது தான் 26ஆம் தேதியின் சிறப்பு," என்கிறார்.

ஆனால், வெறும் கண்களில் பார்க்கும்போது இந்தத் துல்லியமான விவரங்கள் தெரியாது. வழக்கமாக வியாழன் கோள் எப்படித் தெரியுமே அதேபோலத் தான் தெரியும். நிலவு பௌர்ணமியில் வரக்கூடிய அதே அமைப்புக்குத் தான் வியாழன் கோள் வருகிறது. ஆனால், நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால் அது மிகப் பிரகாசமாக வெறும் கண்களிலேயே அதன் முழு வட்டத்தையும் பார்க்கும் வகையில் தெரிகிறது.

வியாழன் கோளைப் பொறுத்தவரை அப்படியில்லை. அதன் ஒளி பூமியை வந்தடையவே குறைந்தபட்சம் 32 நிமிடங்களில் இருந்து அதிகபட்சமாக 52 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. அதனால் நம் நிலவைப் போல் துல்லியமாகத் தெரியாது. ஆகவே, நாம் வெறும் கண்களில் பார்க்கும்போது பெரிய வேறுபாடு தெரியாது.

ஆனால், குறைந்தபட்சம் 4 இன்ச் வரையுள்ள தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலே முழு நிலவைப் பார்ப்பதைப் போன்ற அளவுக்குப் பார்க்கலாம் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். அதோடு, நல்ல திறன்மிக்க தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒளிப்படம் எடுத்துப் பார்க்கும்போது மற்ற நாட்களில் பார்ப்பதை விடவும் மிகத் துல்லியமாக வேறுபாட்டைப் பார்க்க முடியும் என்றார்.

எனவே தெளிவான வானிலை நிலவும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி நீங்களும் வியாழன் கோளை பார்க்க முயலுங்கள். பூமியின் நிலவுக்கு அப்பால், இரவு வானிலுள்ள நட்சத்திரங்களுக்கு நடுவே மிகப் பிரகாசமாகத் தெரியும்.

"ஒரு நல்ல தரமான பைனாகுலரில் பார்க்கும்போதே, குறைந்தபட்சம் அந்தக் கோளின் நடுவிலுள்ள பட்டையும் வியாழனின் 3 அல்லது 4 நிலவுகளும் தெரியும். கலிலியோ இந்த நிலவுகளை 17ஆம் நூற்றாண்டு காலத்திய தொலைநோக்கியின் வழியாகவே கவனித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது," என்கிறார் அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள ஹன்ட்ஸ்வில்லில் அமைந்திருக்கும் நாசாவின் மார்ஷல் விண்வெளி மையத்தின் வானியற்பியல் ஆராய்ச்சியாளர் ஆடம் கோபெல்ஸ்கி.

கோபெல்ஸ்கியின் கூற்றுப்படி, அதைத் தெளிவாகப் பார்ப்பதற்கு இருண்ட, உயரமான பகுதியில், தெளிவான வானிலை நிலவும் நேரத்தில் முயலுமாறு பரிந்துரைக்கிறார்.

கோள்களைப் பார்க்க உதவும் செயலி

இதுபோல ஒரு கோள் பூமிக்கு மிக அருகில் வருவது அந்தக் கோள்களைச் சற்று விரிவாக ஆய்வு செய்வதற்கு உதவுகிறது என்கிறார் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் அதிகாரி லெனின் தமிழ்கோவன். அதுமட்டுமின்றி, அனைவரும் இதை வெறும் கண்களில் தினசரி பார்க்கலாம் என்கிறார்.

"தினசரி சூரியன் மறைந்த பிறகு தெரியும் வியாழன், நல்ல பிரகாசமான நட்சத்திரம் போலத் தெரியும். வானில் நம் கண்களுக்குத் தெரிவதிலேயே மிகப் பிரகாசமானதாக அது தான் இருக்கும்," என்ற லெனின், "சுக்கிரன் கோளும் இதேபோல் பிரகாசமாகத் தெரியும். ஆனால், அது 20 டிகிரிக்கு மேல் மேலே வராது. அதை விடிவெள்ளி அல்லது மாலை வெள்ளி என்பார்கள். ஆனால், வியாழன் வானத்தைக் கடந்து போகும். அதை வைத்து வேறுபாடு காணலாம்," என்றார்.

வியாழன் கோள் மட்டுமின்றி, வானில் நிகழும் கோள்களின் நகர்வு குறித்த செயல்பாடுகளை நாம் அறிந்துகொள்ள, இந்தியா ஸ்கை மேப், ஸ்டார் டிராக்கர் போன்ற செயலிகள் உதவுகின்றன.

திசைகாட்டி வசதியைக் கொண்ட திறன்பேசிகளில் இவற்றைப் பயன்படுத்த முடியும். செயலியை இயக்கும்போது, வானில் எந்தெந்த திசையில் எந்தெந்த நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் அமைந்துள்ளன என்பதை திறன்பேசியை அந்தந்த திசைநோக்கித் திருப்புவதன் மூலம் நாம் அறிய முடியும்.

சான்றாக இரவு நேரத்தில் கிழக்குத் திசையில் நம்மால் வியாழன் கோளைப் பார்க்க முடியும் என்றால், செயலியைத் திறந்து வைத்து கிழக்குத் திசையில் வானைத் துளாவதைப் போல் செயலியை இயக்கித் தேடினால், வியாழன் கோள் அதில் தென்படும். அதைப் பயன்படுத்தி அதே திசையில் நாம் வானில் வியாழன் கோள் பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்க முடியும்.

"இது முன்பே பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வானியல் வரைபடத்தைப் போன்றது. அவ்வப்போது நடப்பதைக் காட்டாது என்றாலும் வானியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவும் கற்கவும் உதவும். கோள்கள், சுமார் 40,000 நட்சத்திரங்கள் போன்ற பல வானியல் தரவுகளைத் தெரிந்துகொள்ள உதவும்" என்கிறார் லெனின்.

வியாழன் போல் பூமிக்கு அருகில் வரும் மற்ற கோள்கள்

வியாழன் கோளுக்கு 53 பெயரிடப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. ஆனால், மொத்தம் 79 துணைக்கோள்கள் அதைச் சுழல்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நான்கு பெரிய நிலவுகளான ஐஓ, யூரோப்பா, கேனிமீட், காலிஸ்டோ ஆகியவற்றுக்கு, கலிலியோ 1610இல் முதன்முதலாக அவற்றைக் கவனித்ததன் நினைவாக கலிலியன் துணைக்கோள்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன.

பைனாகுலர் அல்லது தொலைநோக்கியில் பார்க்கும்போது வியாழன் கோளுக்கு இரண்டு பக்கமும் பிரகாசமான புள்ளிகளாக கலிலியன் துணைக்கோள்கள் தென்படும்.

வியாழன் கோள் மீதான ஆய்வுகள், சூரிய குடும்பத்தின் உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வியாழன் கோள் துல்லியமாக பூமிக்கு அருகே நேர்க்கோட்டில் செப்டம்பர் 26, 2022 அன்று வந்தது. அடுத்ததாக, யுரேனஸ் நவம்பர் 9, 2022 அன்று பூமிக்கு அருகே நேர்க்கோட்டில் வரும். அதற்கு அடுத்ததாக, டிசம்பர் 8, 2022 அன்று செவ்வாய் கோள் அத்தகைய அமைப்பில் பூமிக்கு அருகே வரும்.

சனி மற்றும் நெப்டியூன் கோள்கள், ஆகஸ்ட் 27, 2023 மற்றும் செப்டம்பர் 19, 2023 ஆகிய தேதிகளில் பூமிக்கு அருகே நேர்க்கோட்டில் வரும். அதைத் தொடர்ந்து, வியாழன் கோள் மீண்டும் 2023ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதியன்று பூமிக்கு அருகே நேர்க்கோட்டில் வரும். அதற்கு அடுத்ததாக மீண்டும் யுரேனஸ் நவம்பர் 13, 2023 அன்று பூமிக்கு அருகே வரும்," என்று விளக்கினார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments