Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமஸ்கிருத வாரம்: தமிழக முதல்வர் எதிர்ப்பு

சமஸ்கிருத வாரம்: தமிழக முதல்வர் எதிர்ப்பு
, சனி, 19 ஜூலை 2014 (15:58 IST)
பழமையான தமிழ் மொழியின் அடிப்படையில், வளமான கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது எனத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதிவரை, சமஸ்கிருத வாரத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டாட வேண்டுமென மத்தியப் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
மேலும் அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் தீவிரமான சமூக நீதி இயக்கமும் மொழி இயக்கமும் நடைபெற்றுள்ளது. ஆகவே அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரத்தைத் தமிழகத்தில் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.
 
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் மொழிப் பாரம்பரியத்தின் அடிப்படையில், செம்மொழி வாரம் கொண்டாடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்தந்த மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் வகையில், இந்தக் கடிதத்தை மாற்றும்படி இந்திய அரசின் அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்த வேண்டுமென கோருகிறேன்.
 
நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் கலாச்சார, மொழி உணர்வுகளுக்கு இதுவே பொருத்தமானதாக இருக்கும்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil