Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் 'பாலியல் வன்கொடுமை' குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்ற உதவும் சட்டம்: புதிய மசோதா அதை தடுக்குமா?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (21:07 IST)
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் அந்தக் குற்றத்தில் இருந்து எளிதில் தப்பிவிடுவார் என்று தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று கூறுகிறார் இந்தக் கொடுமைக்கு ஆளான ஜப்பானை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மெகுமி ஓகானோ.
 
தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர் யார் என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்றும் அவருக்குத் தெரியும். ஆனால் இந்தச் சம்பவத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது, காரணம், ஜப்பானிய போலீசார் நடந்த நிகழ்வை பாலியல் வன்கொடுமையாகவே கருத வாய்ப்பில்லை என்பதையும் ஓகானோ அறிந்திருந்தார்.
 
எனவே தனக்கு நேர்ந்த அநீதி குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று அவர் முடிவெடுத்தார்.
 
“தற்போதுள்ள நடைமுறையில் சட்டப் போராட்டத்தை என்னால் தொடர முடியாது என்பதால், என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்திய நபர் மிகவும் சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடிகிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது,” என்று கூறுகிறார் ஓகானோ.
 
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை வீடியோவாக்கி விற்பனை - வக்கிர ஆண்களின் முகமூடியை கழற்றிய பிபிசி
 
 
ஆனால், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வழிவகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா குறித்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விவாதத்தால், இந்த விஷயத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த மசோதா பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது என்றாலும், பாலியல் வன்கொடுமைக்கான அர்த்தம் மறுவரையறை செய்யப்படுவதுதான் இதில் மிகவும் முக்கியமான அம்சமாக உள்ளது. பாலியல் வன்கொடுமையை ‘கட்டாய உடலுறவு’ என்றுள்ள வரையறையை ‘இணக்கமற்ற உடலுறவு’ என்று இந்த மசோதா மறுவரையறை செய்கிறது.
 
ஜப்பானில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம், ஒருவரை வலுக்கட்டாயமாக தாக்கியோ அல்லது அச்சுறுத்தியோ செய்யப்படும் அநாகரீகமான செயல் என்று பாலியல் வன்கொடுமையை வரையறுக்கிறது. இதேபோன்று ஒரு நபரின் மயக்க நிலையிலோ அல்லது அவர் எதிர்க்க இயலாத நிலையிலோ நிகழும் செயல் என்றும் இதை வரையறுக்கிறது.
 
இந்த வரையறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு எப்படி சாதகமாக உள்ளது என்பதற்கு, டோக்கியோவில் 2104இல் நடைபெற்ற ஒரு வழக்கை சமூக ஆர்வலர்கள் சான்றாகக் கூறுகின்றனர். குறிப்பிட்ட அந்த வழக்கின்படி, 15 வயது சிறுமியை ஒரு நபர் சுவற்றில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். அந்தச் செயலை சிறுமி எதிர்த்த போதும் அந்த அநாகரீகமான செயல் நிகழ்ந்தது.
 
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்தது. அவரது செயல், சம்பந்தப்பட்ட சிறுமி எதிர்க்க முடியாத அளவுக்கு மிகவும் கடினமானதாக இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அந்த நபரை வழக்கில் இருந்து விடுவித்தது.
 
ஜப்பானில் தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வன்கொடுமை சட்டங்கள், பாதிக்கப்பட்ட பெண்களை சட்டப் போராட்டம் நடத்தவிடாமல் தடுக்கும் விதத்தில் உள்ளன என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்
 
வழக்கு விசாரணையும் முடிவும்
“பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் விசாரணையும், அவற்றின் முடிவும் மாறுபட்டவையாக இருக்கின்றன” என்கிறார் இந்தக் கொடுமையில் இருந்து தப்பியவர்களின் குழுவான ஸ்ப்ரிங்கை(Spring) சேர்ந்த யூ டடோகோரா.
 
“பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்கள், இணக்கமற்ற உடலுறவை மேற்கொண்டனர் என்று நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் ‘தாக்குதல்’ அல்லது ‘அச்சுறுத்தல்’ வழக்கை எதிர்கொள்வதில்லை என்பதால், குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை,” என்கிறார் அவர்.
 
இதன் காரணமாகத்தான், சக பல்கலைக்கழக மாணவர் தன் மீது நிகழ்த்திய வன்கொடுமை தாக்குதலுக்குப் பிறகு, இதுகுறித்து தாங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறுகிறார் மாணவி மெகுமி.
 
மெகுமியும், சக மாணவரும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த மாணவர், மெகுமியிடம் பாலியல் அத்துமீறலை நிகழ்த்த முயன்றுள்ளார். அதற்கு மெகுமி மறுத்துள்ளார்.
 
அப்போது சக மாணவர் தாக்கியதில் மெகுமி அதிர்ச்சியில் உறைந்து போனார். அதற்கு முன் அவர், மாணவரின் அந்த அநாகரிகமான செயலை தம்மால் இயன்றவரை எதிர்த்துள்ளார் என்பது அவர் கூறுவதில் இருந்து அறிய முடிகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, சிறிது நாட்கள் கழித்து, ஜப்பானிய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் முன்னுதாரணமாகக் கருதப்படும் வழக்குகள் சிலவற்றை சட்ட மாணவியான மெகுமி ஆராய்ந்தார். அதில், தற்போதுள்ள சட்ட வரையறைபடி, தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை.
 
“எனக்கு நீதி கிடைப்பது அரிது எனக் கருதியதால்தான், போலீஸிடம் செல்லவில்லை. எனது குற்றச்சாட்டு ஏற்றுகொள்ளப்படுமா என்பதுகூட எனக்கு அப்போது உறுதியாகத் தெரியவில்லை,” என்று கூறுகிறார் மெகுமி.
 
பல்கலைக்கழகத்தில் புகார் அளித்த மாணவி
தமக்கு நேர்ந்த கொடுமையை போலீசிடம் கூறுவதற்குப் பதிலாக, பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரிக்கும் பல்கலைக்கழக ஆலோசனை மையத்தை அணுகினார் மெகுமி.
 
மெகுமியின் புகார் மீது விசாரணை நடத்திய மையம், குற்றம் சாட்டப்பட்ட நபர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று தீர்ப்பளித்தது.
 
இதுதொடர்பாக பிபிசி அந்த மையத்தை அணுகியபோது, சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியத்தைக் காரணம் காட்டி. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க பல்கலைக்கழக ஆலோசனை மையம் மறுத்துவிட்டது.
 
“பல்கலைக்கழக ஆலோசனை மையத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவடைந்தபோது, நான் குற்றம்சாட்டியிருந்த நபர் பட்டம் பெற்றுவிட்டார். எனவே அவர் தமது அநாகரிக செயலுக்காக விசாரணை மையத்தால் எச்சரிக்கப்பட்டார்.
 
அதுதவிர, குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம், தமது செயலுக்கு அவர் வருந்தும் அளவுக்கு சரியான தண்டனையை பெற்றுத் தர முடியவில்லையே என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன்,” என்றும் தெரிவிக்கிறார் மெகுமி.
 
 
பாலியல் வன்கொடுமை வழக்கில், 2019இல் வெற்றி பெற்ற பிரபல பத்திரிகையாளர் ஷியோரி இட்டோ
 
மாற்றத்திற்கான கூக்குரல்
 
ஜப்பானில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பலாத்கார வழக்குகளாகப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இது பிற குற்ற வழக்குகளின் எண்ணிக்கையைவிட சற்றுக் குறைவுதான். இந்த நிலை மாற வேண்டும் என்ற கூக்குரல் தற்போது ஜப்பான் மக்கள் மத்தியில் ஒலிக்க தொடங்கியுள்ளது.
 
குறிப்பாக, கடந்த 2019இல் நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்கள் ஒரே மாதத்திற்குள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளின் முடிவு ஜப்பான் மக்களை கோபமடையச் செய்தது.
 
அவற்றில், ஃபுகுவோகாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் குடிபோதையில் இருந்த ஒரு பெண்ணுடன் அங்கிருந்த ஓர் ஆண் உடலுறவு கொண்டது குறித்து ஒரு வழக்கு முக்கியமானது.
 
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர், பாலியல் அத்துமீறலுக்குப் பெயர்போன அந்த நிகழ்வில், பாலியல் செயல்களில் எளிதில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்தேன் என்று வழக்கு விசாரணையின்போது கூறியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன் அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் தம்மைத் தடுக்கவில்லை எனவும், உடலுறவின்போது ஒரு கட்டத்தில் கண்விழித்த அந்தப் பெண் கூச்சலிட்டதை, உடலுறவுக்கு அவர் இசைவு தெரிவித்ததற்கான சமிக்ஞையாக நினைத்துக் கொண்டேன் என்றும் அந்த நபர் கூறியதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நகோயாவில் நடைபெற்ற மற்றொரு வழக்கில், ஒரு தந்தை தனது பதின்ம வயது (Teenage) மகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் உறவுகொண்டிருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
 
அதில், சம்பந்தப்பட்ட சிறுமி, தமது படிப்புக்கான பள்ளியைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டதால், பாலியல் விஷயத்தில் அவரது தந்தையால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்பட்டாரா என்று நீதிமன்றம் சந்தேகித்தது. இருப்பினும் அந்தச் சிறுமி தனது தந்தையை எதிர்க்க உளவியல்ரீதியாக திறனற்றவராக இருந்தார் என்று மனநல மருத்துவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
 
நாடு தழுவிய பிரசார இயக்கம்
 
பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த வழக்கில் பெரும்பாலானவை மீண்டும் விசாரிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், ‘ஃப்ளவர் டெமோ’ எனும் நாடு தழுவிய பிரசாரத்தை சமூக ஆர்வலர்கள் தொடங்கினர்.
 
#MeToo இயக்கத்துடன், ‘ஃப்ளவர் டெமோ’ விழிப்புணர்வு பிரசாரம், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தவும், இதுதொடர்பான சட்ட சீர்திருத்தத்தைக் கொண்டு வர அரசைத் தூண்டவும் வழி வகுத்தது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
இந்த சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இதற்காக நீண்ட காலமாகப் போராடி வருபவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
“இந்த சட்டத்தின் தலைப்பைக்கூட அரசு மாற்றிக் கொண்டிருப்பதால், 'ஒப்புதல் என்றால் என்ன? சம்மதம் இல்லையென்றால் என்ன?' என்பன உள்ளிட்ட பாலியல் தொடர்பான உரையாடல்கள் ஜப்பான் மக்கள் மத்தியில் தொடங்கும் என்று நம்புகிறோம்,” என்கிறார் டோக்கியோவை சேர்ந்த மனித உரிமைகள் நல அமைப்பின் துணைத் தலைவர் கசுகோ இட்டோ.
 
ஆனால், ஜப்பான் நாடாளுமன்ற மேலவை இந்த சட்ட சீர்திருத்த மசோதாவை ஜுன் 21ஆம் தேதிக்குள் நிறைவேற்றியாக வேண்டும். ஆனால் அங்கு தற்போது குடியேற்றம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர் ஆர்வலர்கள்.
 
 
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டபட்ட நான்கு பேர் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டதையடுத்து 2019இல் நடைபெற்ற பொதுமக்களின் போராட்டத்தில் ஒரு காட்சி
 
பாலியல் பற்றிய பார்வையில் மாற்றம்
 
பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் இந்த பிரச்னையை ஓரளவுக்குத்தான் தீர்க்க முடியும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
பாலியல் கொடுமைக்கு எதிராக பத்திரிகையாளர் ஷியோரி இட்டோ நடத்திய சட்டப் போராட்டம், இந்தக் கொடுமைக்கு ஆளான ரினா கோனாய் தமக்கு நேர்ந்த அவலங்களைப் பகிரங்கப்படுத்தியது போன்றவற்றால் இந்தப் பிரச்னை தேசிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் பாலியல் வன்கொடுமை ஜப்பானில் இன்னும் தீவிரமாகக் கருதப்படாத விஷயமாகவே இருந்து வருகிறது.
 
பாலியல் மற்றும் பாலியல் சம்மதம் பற்றிய தெளிவற்ற சிந்தனையோடு ஜப்பானிய தலைமுறைகள் வளர்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் கசுவோ இட்டோ.
 
இந்த நிலை மாற, நீதிமன்றத்திற்கு வெளியே சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வரவேண்டும் என்கிறார் அவர். பாலியல் கல்வி, பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலை எனப் பல விஷயங்கள் மாற வேண்டியுள்ளது என்கிறார் இட்டோ.
 
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு ஜப்பான் அரசு அதிக நிதி உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதுபோன்று இந்தக் கொடுமையை இழைப்பவர்களுக்கும் உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் சகுரா கமிதானி.
 
“மீண்டும் மீண்டும் நிகழும் படியாக, பாலியல் குற்றங்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இதைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இந்தக் குற்றங்களுக்கு ஆள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்,” என்று எச்சரிக்கிறார் அவர்.
 
ஆனால், பாலியல் கொடுமைகள் தொடர்பான சட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதும், அதை அமல்படுத்துவதும்தான் சமூகத்தின் தற்போதைய முக்கியமான பணி என்று கூறும் ஆர்வலர்கள், அப்போதுதான் இந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை சட்டப் போராட்டம் நடத்த ஊக்குவிக்க முடியும் என்கின்றனர் அவர்கள்.
 
சட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால், தமக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து போலீசில் புகாரளிப்பது குறித்து பரிசீலிப்பதாகக் கூறுகிறார் மெகுமி. ஆனால், சட்ட சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில், முதல் நபராக இந்தப் போராட்டத்தில் இறங்க தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
 
பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சட்டம் பயின்ற மாணவியான மெகுமி ஓகானோ, “சமூகத்தில் ஏதேனும் தவறாக இருப்பதாக நீங்கள் நினைத்தால். அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுவோம்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
 
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்