Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடக்கு இலங்கையில் போரின் பின்னர் தற்கொலை வீதம் அதிகரிப்பு

வடக்கு இலங்கையில் போரின் பின்னர் தற்கொலை வீதம் அதிகரிப்பு
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (19:01 IST)
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகத்தில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறுகின்ற யாழ் பல்லைக்கழக உளவியல் துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள, சமூக ரீதியான புனர்வாழ்வும் பொருத்தமான பொருளாதாரப் புனர்வாழ்வும் அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார்.
 
யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் 1980ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை வீதம் 35 ஆக உயர்ந்திருந்தது. இந்திய இராணுவத்தின் வருகையின்போது 1987ஆம் ஆண்டளவில் யுத்தம் உக்கிரமடைந்திருந்தபோது தற்கொலை வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.
 
பின்னர் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டு, சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளை, 2004ஆம் ஆண்டில் இது 25 வீதத்தை தாண்டி, 30 வீதத்தை நெருங்கியது. பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் போர் மூண்டதும், தற்கொலை வீதம் வீழ்ச்சியடைந்து, உக்கிரமாகப் போர் நடைபெற்றபோது 15 வீதமாகக் குறைந்திருந்தது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, படிப்படியாகத் தற்கொலை வீதம் அதிகரித்து, கடந்த ஆண்டில் அது 28 வீதத்தை எட்டிப் பிடித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
போர்க்காலங்களில் நெருக்கடிகளையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கியுள்ள மக்கள், தங்களுக்குள் இணைந்திருப்பார்கள். அந்தச் சூழல் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதற்குத் தடையாக இருக்கும். இதனால் போர்க் காலங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் காணலாம் என்கிறார் அவர்.
 
போருக்குப் பின்னர் கலாசார ரீதியாகவும், சமய ரீதியாகவும் மக்கள் ஒன்றிணைவது, தற்கொலைச் சம்பவங்களைக் குறைப்பதற்கு ஓர் உந்துசக்தியாக அமைகின்றது. எனவே, அந்தச் செயற்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று பேராசிரியர் சோமசுந்தரம் குறிப்பிடுகின்றார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நேரம், மக்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளைச் சரி செய்வதற்கான செயற்பாடுகளும், அந்த மக்களுக்குப் பொருத்தமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம் கூறியுள்ளார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil