Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே.இ.தீவுகளுடன் எதிர்கால ஆட்டங்களை இடைநிறுத்த பிசிசிஐ முடிவு

மே.இ.தீவுகளுடன் எதிர்கால ஆட்டங்களை இடைநிறுத்த பிசிசிஐ முடிவு
, செவ்வாய், 21 அக்டோபர் 2014 (20:44 IST)
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது.
 
இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர்.
 
பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஒரு ஒரு நாள் ஆட்டம், ஒரு இருபது ஓவர் ஆட்டம் ஆகியவை ரத்தாக பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறும் பிசிசிஐ அதிர்ச்சியும் ஆத்திரமும் தெரிவித்திருந்தது.
 
தொடர் ரத்தானது சம்பந்தமாய் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக சக்திமிக்க பிசிசிஐ செயற்குழு செவ்வாயன்று கூடியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியா விளையாடக்கூடிய கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் இடைநிறுத்துவதாகவும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்திருப்பதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் அறிவித்துள்ளார்.
 
மேற்கிந்தியத் தீவுகள் தொடரைப் பாதியிலேயே ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், குறைந்த கால அவகாசத்தில் இந்தியாவில் வந்து விளையாட சம்மதம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.
 
நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கி ஐந்து ஒருநாள் ஆட்டங்களை இலங்கை அணி இந்தியாவில் விளையாடவுள்ளது.
 
இந்த ஐந்து ஒருநாள் ஆட்டங்களுக்கான இடங்களாக கட்டாக், ஹைதராபாத், ராஞ்சி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் தேர்வாகியுள்ளன.
போட்டியின் தேதிகளும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
 
இந்தியா வந்து விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் சட்டென சம்மதம் தெரிவித்திருப்பதற்கு இலங்கையில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
 
2015 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்த அவசர ஏற்பாட்டில் நடக்கும் இந்தியத் தொடரில் விளையாட இலங்கை சம்மதம் தெரிவித்திருப்பது புதிய பயிற்சியாளர் அட்டபட்டு செய்திருந்த ஏற்பாடுகளை குலைப்பதாக உள்ளது என பிபிசியிடம் பேசியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறினார்.
 
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு இலங்கையில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான நோக்கத்திலானதாகத் தெரியவில்லை. மாறாக பிசிசிஐயை திருப்திப்படுத்துவதற்கான முடிவாகவே தெரிகிறது என அர்ஜுன ரணதுங்க கூறினார்.
 
இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டாலும், இந்திய பிரிமியர் லீக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய வீரர்கள் பங்கேற்பது அனுமதிக்கப்படவே செய்யும் என ஐபிஎல் தலைவரான ரஞ்சிப் பிஸ்வால் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil