Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ
, வியாழன், 18 டிசம்பர் 2014 (16:41 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அதிக எடைகொண்ட விண்கலங்களை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.


 


இந்தியா இதுவரை விண்ணில் ஏவியதிலேயே மிகப்பெரிய ராக்கெட் இதுவாகும்.
 
விண்வெளிக்கு மனிதர்களைச் கொண்டுசெல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, திரும்பிவரக்கூடிய ஆளில்லாத கலம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து 630 டன் எடைகொண்ட இந்த ராக்கெட் இன்று காலை 9 மணி 30 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது.
 
சரியாக, 9 மணி 39 நிமிடங்களுக்கு, பூமியிலிருந்து 126.16 கி.மீ உயரத்தில் ஆளில்லாத கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்தது.
 
9.44 மணியளவில் அந்தக் கலத்திலிருந்த பாராசூட்டுகள் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகில் கலத்தை பத்திரமாக கடலில் விழச்செய்தன. இந்தக் கலம், பிறகு இந்தியக் கடலோரக் காவல் படையினர் மூலம் மீட்கப்படும்.
 
இந்தியா இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பதன் மூலம், அதிக எடை கொண்ட ஜிசாட் போன்ற விண்கலங்களை இனி தானே விண்ணில் ஏவ முயற்சிக்கும்.
 
இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நம்முடைய விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும் புத்திசாலித்தனத்திற்கும் கிடைத்த வெற்றி இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தினம் என இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இந்த ராக்கெட்டை ஏவும் முயற்சி வெற்றிபெற்றிருப்பதன் மூலம், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil