Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய ராணுவம் பயிற்றுவித்த 'உளவு திமிங்கலம்’ தப்பியது எப்படி? என்ன ஆனது?

Prasanth Karthick
புதன், 20 நவம்பர் 2024 (13:19 IST)

கழுத்துப் பட்டையுடன் பெலுகா திமிங்கலம் ஒன்று நார்வே கடற்கரைக்கு வந்தது எப்படி? என்ற மர்மத்திற்கு இறுதியாக தற்போது விடை கிடைத்துள்ளது.

 

 

உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹ்வால்டிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர்.

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு , கடற்கரையில் காணப்பட்ட போது இந்த திமிங்கலம் பேசுபொருளானது. இந்த வெள்ளைத் திமிங்கலம் ரஷ்யாவின் உளவாளியாக இருக்கலாம் என்றும் சில ஊகங்கள் எழுந்தன.

 

இது குறித்து "வெள்ளைத் திமிங்கல ஆய்வாளர்" முனைவர் ஓல்கா ஷபக் கூறும்போது, “இந்த திமிங்கலம் ராணுவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புவதாகவும், ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு கடற்படைத் தளத்திலிருந்து தப்பி இருக்கலாம்” எனவும் கூறினார்.

 

“ஆனால் , பெலுகா திமிங்கலம் ஒரு உளவாளியாக இருக்காது. கடற்படைத் தளத்தை பாதுகாக்க இந்த பெலுகா திமிங்கலத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கலாம்” எனவும் முனைவர் ஓல்கா ஷபக் நம்புகிறார்.

 

மேலும் ராணுவப் பயிற்சிக்கு அடங்காமல் பெலுகா திமிங்கலம் அங்கிருந்து தப்பியிருக்கலாம். மறுபுறம் அந்த பெலுகா திமிங்கலத்திற்கு பயிற்சி அளித்ததை, ரஷ்ய ராணுவம் ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவுமில்லை.

 

“ரஷ்ய ராணுவம், பெலுகா திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிக்கிறது” என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று முனைவர் ஷபக் பிபிசியிடம் கூறுகிறார்.

 

ஷபக் , 1990 களில் ரஷ்யாவில் கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சார்ந்து பணிபுரிந்த பிறகு 2022ல் தனது சொந்த நாடான யுக்ரேனுக்குத் திரும்பினார்.

 

முன்னாள் ரஷ்ய நண்பர்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, முனைவர். ஷபக்கின் கருத்து அமைகின்றது.

 

பிபிசியின் “ சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஸ்பை வேல்” என்ற ஆவணப்படத்தில் மேற்கூறிய கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஆவணப்படத்தை `BBC iPlayer’ இல் காணலாம்.

 

கழுத்துப் பட்டையுடன் வந்த திமிங்கலம்

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு நார்வே கடற்கரையில், இந்த மர்மத் திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்தனர்.

 

“பிரச்னையில் இருக்கும் விலங்குகள், தங்களுக்கு மனிதர்களின் உதவி தேவை என்பதை உணரும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இது ஒரு புத்திசாலி திமிங்கலம்’ என்று நினைத்தேன்" என்று பெலுகா திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்ட படகில் இருந்த மீனவர் ஜோர் ஹெஸ்டன் கூறினார்.

 

"இந்த திமிங்கலம் வளர்க்கப்பட்டதற்கான அறிகுறிகளோடு இருந்தன. இந்த பெலுகா திமிங்கலத்தை தெற்குப் பகுதிகளில் காண்பதும் அரிது. பெலுகா திமிங்கலத்தில் கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கேமராவைப் பொருத்திக் கொள்ளும் வசதியுடன் அதன் கழுத்துப் பட்டை அமைக்கப்பட்டிருந்தது. “ என்று விளக்கினார்.

 

மேலும் , 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உபகரணம்' ('Equipment St. Petersburg')என்று அதன் கழுத்துப் பட்டையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது." என்றும் கூறினார்.

 

பெலுகா திமிங்கலத்தின் கழுத்துப் பட்டையை அகற்ற மீனவர் ஹெஸ்டன் உதவினார்.

 

அதன் பிறகு, அந்த திமிங்கலம் அருகிலுள்ள ஹேமர்ஃபெஸ்ட் துறைமுகத்துக்கு நீந்திச் சென்று பல மாதங்கள் அங்கேயே இருந்தது.

 

உண்பதற்கு உயிருள்ள மீன்களை இந்த பெலுகா திமிங்கலத்தால் பிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் அந்த திமிங்கலம், மக்களின் கேமராக்களை பறித்து தள்ளிவிடும். அப்படி பறித்த மொபைல் போனை ஒரு முறை திருப்பி கொடுத்துள்ளது.

 

இந்த திமிங்கலம், "தனக்கு எதிரில் இலக்கு போலத் தோன்றும் பொருட்களில் எப்போதுமே கவனமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கவனம் சிதறாமல் இலக்கின் மீது குறியாக இருந்தது. அப்படிச் செய்ய முன்கூட்டியே பயிற்சியளிக்கப்பட்டிருந்தது என்பது அந்த திமிங்கலத்தின் நடவடிக்கையின் மூலம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இந்த பெலுகா எங்கிருந்து வந்தது, என்ன செய்ய அதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.", என்கிறார் நார்வே ஓர்கா சர்வேயைச் சேர்ந்த ஈவ் ஜோர்டியன்.

 

இந்த திமிங்கலத்தின் கதை தலைப்புச் செய்தியாக இருந்தது.

 

இதற்கிடையில் , இந்த பெலுகாவைக் கண்காணித்து உணவளிக்க நார்வே ஏற்பாடு செய்தது. மேலும் அந்த திமிங்கலத்திற்கு “ஹ்வால்டிமிர்” என்று பெயரிடப்பட்டது.

 

நார்வே மொழியில், “ஹ்வால்” என்றால் “திமிங்கிலம்” மற்றும் “டிமிர்” என்பது “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின்” பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. அதனை இணைத்து “ஹ்வால்டிமிர்” என்று நார்வே அந்த திமிங்கலத்திற்கு பெயரிட்டது.

 

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

 

பாதுகாப்புக் காரணங்களுக்காக, எங்கிருந்து தனக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்தன என்ற தகவலை ஷபக் குறிப்பிடவில்லை.

 

இந்த பெலுகா நார்வேயில் காணப்பட்ட போது, அது அவர்களின் சொந்த பெலுகா என்று ரஷ்யாவில் கடல்வாழ் பாலூட்டிகளிடம் பணிபுரியும் குழுக்களுக்குத் தெரியவந்தது ” என ஷபக் கூறுகிறார்.

 

"காணாமல் போன பெலுகாவின் பெயர் ஆண்ட்ருஹா என்பதை கால்நடை மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டனர்" என்றும் அவர் கூறுகிறார்.

 

ஷபக்கின் கூற்றுப்படி, ஆண்ட்ருஹா அல்லது ஹ்வால்டிமிர் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள “ஓகோட்ஸ்க்” கடலில் இருந்து பிடிபட்டது.

 

ஒரு வருடம் கழித்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு டால்பினேரியத்திற்கு ( பொழுதுபோக்கிற்க்காக டால்பின்கள் வளர்க்கப்படும் இடம்) சொந்தமான ஒரு இடத்திலிருந்து, ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சித் திட்டத்திற்கு, இந்த திமிங்கலம் அனுப்பிவைக்கப்பட்டது.

 

அங்கு இந்த பெலுகாவின் பயிற்சியாளரும் மருத்துவரும் அதனோடு தொடர்பில் இருந்தனர்.

 

"அவர்கள் இந்த திமிங்கலத்தை நம்பி, திறந்த கடலில் அதற்கு பயிற்சி அளிக்கத் தொடங்கிய போது, அது அவர்களின் பிடியில் இருந்து தப்பியதாக நான் நினைக்கிறேன்" என்று ஷபக் கூறுகிறார்.

 

“ஆண்ட்ருஹா(ஹ்வால்டிமிர்) மிகவும் புத்திசாலி” எனவும் அந்த டால்பினேரியத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் தெரிவித்தன. எனவே பயிற்சி அளிப்பதற்கான நல்ல தேர்வாக ஆண்ட்ருஹா(ஹ்வால்டிமிர்) இருந்தது. ஆனால் அந்த திமிங்கலம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அது தப்பிய போது கூட அவர்கள் மிகவும் ஆச்சரியப்படவில்லை” என்றும் ஷபக் கூறுகிறார்.

 

ரஷ்யா என்ன சொல்கிறது ?

மர்மான்ஸ்கில் உள்ள ரஷ்ய ராணுவத் தளத்திற்கு அருகில் எடுக்கப்பட்ட சில செயற்கைக்கோள் படங்கள் கிடைத்தன.

 

குகைகளின் அருகில் தண்ணீரில் இருக்கும் வெள்ளைத் திமிங்கலங்கள், அந்த படங்களில் தெளிவாகத் தெரியும்.

 

“நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கு மிக அருகில் பெலுகா திமிங்கலங்களை நிறுத்தி வைப்பது, அவை பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டுகிறது” என்று ‘தி பேரண்ட்ஸ் அப்சர்வர்’ எனும் நார்வேயின் இணையதள செய்தித்தாள் (Norwegian online newspaper The Barents Observer) ஆசிரியர் தாமஸ் நீல்சன் கூறுகிறார்.

 

ஆனாலும் ஹ்வால்டிமிருக்கு தங்கள் ராணுவம் பயிற்சியளித்தது என்பதை ரஷ்யா ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை.

 

இருப்பினும், ராணுவ நோக்கங்களுக்காக கடல்வாழ் பாலூட்டிகளுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வந்துள்ளது என்பதற்கு நீண்ட வரலாறு உள்ளது.

 

"நாங்கள் இந்த திமிங்கலத்தை உளவு பார்க்க பயன்படுத்தி இருந்தால், இந்த எண்ணிற்கு அழைக்கவும் என அந்த திமிங்கலத்தின் மேல் ஒரு மொபைல் எண்ணை எழுதி வைத்திருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “ என 2019 இல் பேசிய ரஷ்ய ரிசர்வ் கர்னல் விக்டர் பேரண்ட்ஸ் கூறினார்.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹ்வால்டிமிரின் கதை மகிழ்வாக முடியவில்லை.

 

இந்த பெலுகா திமிங்கலம் சொந்தமாக உணவு தேட கற்றுக்கொண்டது.

 

பின் தெற்குப் பகுதி நோக்கி, நார்வே கடற்கரைக்கு அருகில் பல ஆண்டுகளாக பயணித்தது. ஸ்வீடன் கடற்கரைக்கு அருகிலும் காணப்பட்டது.

 

எதிர்பாராத விதமாக செப்டம்பர் 1, 2024 அன்று, அதன் உடல் நார்வேயின் தென்மேற்கு கடற்கரையில் சிராவிகா நகருக்கு அருகில் கடலில் மிதந்தது.

 

ரஷ்யாவுக்கும் ஹ்வால்டிமிரின் இறப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது போன்ற சில கேள்விகள் எழுந்தன.

 

திமிங்கலம் சுடப்பட்டதாக பலர் கூறினாலும், இந்த சந்தேகத்தை நார்வே காவல்துறை ‘அப்படியிருக்க வாய்ப்பில்லை’ என்று கூறி நிராகரித்துள்ளது.

 

மனித நடவடிக்கைகளே இந்த திமிங்கலத்தின் மரணத்திற்கு காரணம் என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

ஹ்வால்டிமிரின் வாயில் மரத்துண்டு சிக்கி இருந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments