Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பல ஆயுதக் குழுக்களை ஹமாஸ் ஒன்றிணைத்தது எப்படி?

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (20:51 IST)
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வேறு ஐந்து ஆயுதமேந்திய குழுக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் 2020-ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலுக்கான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
 
இந்தக் குழுக்கள் அக்டோபர் 7 நடத்தப்பட்டத் தாக்குதலைப் போலவே சில பயிற்சித் தாக்குதல்களை மேற்கொண்டு அதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்தப் பயிற்சிகள் இஸ்ரேல் எல்லையிலிருந்து 1கிமீ-க்கும் குறைவான தொலைவில் நடந்தன.
 
இப்பயிற்சிகளின் போது அவர்கள் பணயக்கைதிகளை கைப்பற்றுதல்,வசிப்பிடங்களைத் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பை மீறிச் செல்லுதல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். கடைசிப் பயிற்சி தாக்குதலுக்கு 25 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
 
பிபிசி அரபு சேவை மற்றும் பிபிசி வெரிஃபை ஆகியவை, ஹமாஸ் எவ்வாறு காஸாவின் ஆயுதமேந்திய குழுக்களின் பிரிவுகளை ஒன்றிணைத்து, தனது போர் முறைகளை மேம்படுத்தியது என்பதைக் காட்டும் ஆதாரங்களைத் தொகுத்துள்ளன.
 
இந்தச் பயிற்சிகளுக்கு ‘வலுவான தூண்’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்டது.
 
இவற்றில் முதல் பயிற்சியைப் பற்றி, 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அதனை காஸாவின் பல்வேறு ஆயுதப் பிரிவுகளுக்கு இடையே ‘வலுவான ஒற்றுமையின் அடையாளம்’ என்று அறிவித்திருந்தார்.
 
காஸாவின் ஆயுதக் குழுக்களிலேயே மிகவும் சக்திவாய்ந்ததான ஹமாஸ்தான் இந்தக் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தியது. 10 பாலத்தீன ஆயுதக் குழுப்பிரிவுகளை ஒன்றிணைத்த இந்தப் பயிற்சிகளை ஒரு ‘கூட்டுச் செயல்பாட்டு அறை’ மேற்பார்வை செய்தது.
 
இந்த அறை, காஸாவின் ஆயுதப் பிரிவுகளை ஒரு மத்திய கட்டளையின் கீழ் ஒருங்கிணைக்க 2018-இல் அமைக்கப்பட்டது.
 
அடையாளம் காணப்பட்ட 10 குழுக்கள்
 
2018-க்கு முன்னர், ஹமாஸ், காஸாவின் இரண்டாவது பெரிய ஆயுதக் குழுவான பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. இக்குழு இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்பு.
 
இதற்கு முன்னும் ஹமாஸ் மற்ற குழுக்களுடன் இணைந்து சண்டையிட்டிருக்கிறது. ஆனால் 2020-இல் துவங்கிய இந்தப் பயிற்சி பல குழுக்கள் ஒன்றிணைக்கப்படுவதற்கான ஆதாரமாக அறிவிக்கப்பட்டது.
 
முதல் பயிற்சி, ஆயுதக் குழுக்களின் ‘நிரந்தர தயார்நிலையை’ பிரதிபலிப்பதாக ஹமாஸின் தலைவர் கூறினார்.
 
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நான்கு கூட்டுப் பயிற்சிகளில் முதலாவது 2020-இன் பயிற்சி. இவை அனைத்தும் வீடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
இவற்றில் பாலத்தீன இஸ்லாமிய ஜிகாத் உட்பட 10 ஆயுதக் குழுக்களை பிபிசி அடையாளம் கண்டுள்ளது. டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்டக் காட்சிகளில், அக்குழுவினர் தலையில் கட்டியிருந்த பட்டைகள், அவர்களின் தனித்துவமான சின்னங்களின் மூலம் அக்குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 
அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து, இவற்றில் ஐந்து குழுக்கள் தாம் தாக்குதலில் பங்கேற்றதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டன. மேலும் மூன்று குழுக்கள் தாம் பங்கேற்றதாகக் கூறி டெலிகிராமில் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டன.
 
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் இருந்து காஸாவிற்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் பல பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க ஹமாஸ் மீது அழுத்தம் அதிகரித்ததால், இந்தக் குழுக்களின் மீது கவனம் குவிந்துள்ளது.
 
பாலத்தீன இஸ்லாமிய ஜிகாத், முஜாஹிதீன் படைப்பிரிவுகள், மற்றும் அல்-நாசர் சலா அல்-தீன் படையணிகள் ஆகிய மூன்று குழுக்கள், அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலிய பணயக்கைதிகளை கைப்பற்றியதாக கூறியிருக்கின்றனர்.
 
காஸாவில் தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் முயற்சிகள் அந்தப் பணயக்கைதிகளை ஹமாஸ் கண்டுபிடிப்பதைச் சார்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 
 
 
முதல் பயிற்சியின் காட்சிகள், பதுங்குக் குழியில் முகமூடி அணிந்த தளபதிகள் பயிற்சி நடத்துவதைக் காட்டுன்கிறன
 
 
இந்தக் குழுக்கள் பல்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சில கடுமையான இஸ்லாமியவாதக் குழுக்கள், வேறு சில முதல் ஒப்பீட்டளவில் மதச்சார்பற்றவை. ஆனால் அனைவரும் இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தத் தயாராக இருந்தனர்.
 
ஹமாஸ், தனது அறிக்கைகளில், காஸாவின் ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. கூட்டுப் பயிற்சியில் அனைவரும் சம உறுப்பினர்கள் என்று கூறுகிறது. ஆனால், இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்தில் ஹமாஸ் முக்கியப் பங்கு வகித்தது.
 
முதல் பயிற்சியின் காட்சிகள், பதுங்குக் குழியில் முகமூடி அணிந்த தளபதிகள் பயிற்சி நடத்துவதைக் காட்டுன்கிறன.
 
இக்காட்சிகள் ராக்கெட் குண்டு வெடிப்புடன் துவங்குகின்றன. அடுத்து, ஒரு மாதிரி இஸ்ரேலிய டாங்கியை ஆயுதம் ஏந்திய போராளிகள் கைப்பற்றுவதையும், ஒருவரை கைதியாக இழுத்துச் செல்வதையும், கட்டிடங்களில் புகுந்து தாக்குவதையும் காட்டுகின்றன.
 
அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்களைப் பிடிக்கவும் பொதுமக்களை குறிவைக்கவும் இந்த இரண்டு தந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இது வீடியோக்கள் மூலமும், சாட்சிகளின் வாக்குமூலக்கள் வழியாகவும் அறியமுடிகிறது. இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டனர்.
 
எலி வளை சுரங்க முறை என்பது என்ன? அதன் மூலம் ஒருவர் ஊர்ந்து வரும் அளவு துளையிட்டது எப்படி?
 
இரண்டாவது பயிற்சி முதல் பயிற்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நடைபெற்றது.
 
ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி அய்மன் நோபால், 2021-ஆம் ஆண்டு, டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியின் நோக்கம், ‘எதிர்ப்புக் குழுக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும், என்றார்.
 
இந்தப் பயிற்சிகள், காஸாவின் எல்லையில் உள்ள சுவர்கள் மற்றும் கட்டுமானங்கள் இஸ்ரேலைப் பாதுகாக்காது என்பதை எதிரிகளுக்குச் சொல்கின்றன என்று அவர் கூறியிருந்தார்.
 
மற்றொரு ஹமாஸ் அறிக்கை, இந்தக் ‘கூட்டு இராணுவ முயற்சிகள்’ ‘காஸாவிவுக்கு அருகிலுள்ள குடியேற்றங்களை மீட்கப்படுவதன் மதிரிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன,’ என்று கூறுகிறது. இஸ்ரேலிய குடியிருப்புகளை ஹமாஸ் குடியேற்றங்கள் என்று குறிக்கிறது.
 
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி இந்தப் பயிற்சி மீண்டும் செய்யப்பட்டது. அப்போது மாதிரி இராணுவத் தளம் ஒன்றில் போராளிகள் கட்டிடங்களைச் சூறையாடுவது, டாங்கிகளைக் கைப்பற்றுவது ஆகிய பயிற்சிகளைச் செய்யும் காட்சிகள் வெளியிடப்பட்டன.
 
 
இந்தப் பயிற்சிகள் குறித்து இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே அவை இஸ்ரேலின் விரிவான புலனாய்வு அமைப்புகளால் கண்காணிக்கப்படவில்லை என்று கூறவே முடியாது.
 
ஹமாஸின் பயிற்சி நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் முன்னர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். ஏப்ரல் 2023-இல், அவர்கள் முதல் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட தளத்தின்மீது குண்டுவீசினர்.
 
தாக்குதல்களுக்குச் சில வாரங்களுக்கு முன்பு, காஸா எல்லைக்கு அருகே இருந்த பெண் கண்காணிப்புப் படையினர், காஸாவில் வழக்கத்தினும் அதிகமான ட்ரோன் இயக்கம் குறித்தும், ஹமாஸ் பயிற்சி நடத்தி வருவது குறித்தும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், இஸ்ரேலிய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, இந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.
 
காஸாவில் உள்ள முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அவிவி, பிபிசியிடம், ஹமாஸ் இந்தப் பயிற்சியைச் செய்கிறார்கள் என்று நிறைய உளவுத்துறை தகவல்கள் இருந்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, வீடியோக்கள் பொதுவில் இருந்ததாகவும், அவை வேலியில் இருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவில் நடந்ததாகவும் கூறினார்.
 
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்தப் பயிற்சிகள் பற்றித் தெரிந்திருந்தும், அவர்கள் எதற்காகப் பயிற்சி செய்கிறார்கள் என்பதை பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
 
மோதலின் போது கொல்லப்பட்ட முதல் மூத்த ஹமாஸ் இராணுவத் தலைவரான நோஃபாலை அக்டோபர் 17-ஆம் தேதி ‘அழித்துவிட்டதாக’ இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.
 
 
இந்த பயிற்சிகள் மிகவும் யதார்த்தமாக இருப்பதற்காக ஹமாஸ் பெரும் முயற்சிகள் எடுத்தது.
 
2022-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ராணுவ தளவாடம் போல் ஒரு மாதிரியை அமைத்து ஹமாஸ் போராளிகள் அங்கு பயிற்சி செய்தனர். அந்த இடம், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட காஸா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வழியில், எரேஸ் கடவு பாதையிலிருந்து வெறும் 2.6 கி.மீ தூரத்தில் இருந்தது.
 
இந்த இடம், காஸாவின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் தடுப்புகளிலிருந்து 800மீட்டர் தூரத்திலேயே இருந்ததை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. பயிற்சி வீடியோக்களில் உள்ள இடங்களை விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட படங்களோடு ஒப்பிட்டு பிபிசி வெரிஃபை இந்த இடத்தை கண்டறிந்துள்ளது. நவம்பர் 2023 வரை இந்த இடம் பிங் வரைபடங்களில் இருந்தன.
 
பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து இஸ்ரேல் அமைத்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் உயர்ந்த கண்காணிப்பு பெட்டகத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்தில் இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது.
 
மாதிரி தளவாடம், நிலத்திலிருந்து பல மீட்டர்கள் தாழ்வாகத் தோண்டப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது. எனவே இஸ்ரேல் ரோந்து படையினருக்கு உடனே கண்ணுக்கு தெரியும் படி இருந்திருக்காது. ஆனால், அந்த இடத்திலிருந்து வரும் புகை, கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இஸ்ரேல் அந்த பகுதியில் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
கட்டிடங்களைத் தகர்ப்பது, துப்பாக்கி முனையில் பணயகைதிகளைக் கொண்டு செல்வது, பாதுகாப்புத் தடுப்புகளைத் தகர்த்து எறிவது ஆகியவற்றுக்கான பயிற்சிகளை அங்கே தான் ஹமாஸ் எடுத்துக் கொண்டது .
 
செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளிட்ட பொது தளத்தில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி காஸாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 14 பயிற்சி தளங்களை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் உதவிகள் விநியோக மையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்தில் கூட ஒரு தளத்தில் ஹமாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோவிலும் அந்த இடம் காணப்படுகிறது.
 
மகாராணி என அழைக்கப்பட்ட ரோமானியப் பேரரசர் : பிரிட்டன் அருங்காட்சியகம் தரும் தகவல்கள்
 
இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி ஹமாஸ் தங்கள் டெலிகிராம் சேனலில் வெளியிட்ட புகைப்படத்தில், கூட்டுக் குழுவின் கட்டுப்பாட்டு அறையில், ராணுவ சீருடைகள் அணிந்து, காஸா எல்லையில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை கண்காணிக்கும் நபர்களை காணமுடிந்தது.
 
இரண்டு நாட்கள் கழித்து, நான்காவது வலுவான தூண் ராணுவ பயிற்சி தொடங்கியது. அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு தேவையான அனைத்து உத்திகளையும் அவர்கள் ஒத்திகை செய்து முடித்தனர்.
 
தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது சுற்றி திரிந்த அதே வெள்ளை டொயோடா ட்ரக்குகள், அவர்களின் பயிற்சி வீடியோக்களில் காணப்பட்டன.
 
பயிற்சி குறித்து வெளியான வீடியோக்களில், மாதிரி கட்டிடங்களின் உள்ளே சென்று ஹமாஸ் குழுவினர் டம்மி இலக்குகளை தாக்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது. அதே போன்று படகுகள் கொண்டு கடற்கரையை தாக்கும் காட்சிகளும் வீடியோக்களில் உள்ளன.
 
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் படகுகள் தங்கள் கரைகளில் வருவதை தடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
 
எனினும், மோட்டார் சைக்கிள் மற்றும் பாராகிளைடர்கள் கொண்டு செய்த பயிற்சியை ஹமாஸ் வெளியே தெரிவிக்கவில்லை.
 
அக்டோபர் 7-ஆம் தேதிக்கு மூன்று நாட்கள் கழித்து, ஹமாஸ் வெளியிட்ட பயிற்சி வீடியோவில், காஸா எல்லையில் உள்ள வேலிகள் மற்றும் தடுப்புகளை தகர்த்து மோட்டார் சைக்கிள்களில் நுழையும் காட்சிகள் உள்ளன. அக்டோபர் 7-ஆம் தேதி இதே உத்தியைப் பயன்படுத்தித்தான் ஹமாஸ் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகளை அடைந்தனர். இது போன்ற பயிற்சி வீடியோக்களை தாக்குதலுக்கு முன் அவர்கள் வெளியிடவில்லை.
 
பாராகிளைடர்களில் வந்து தாக்குதல் நடத்தும் காட்சிகளையும் அவர்கள் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்கு முன் வெளியிடவில்லை.
 
தாக்குதல் நடந்த தினத்தன்று வெளியிடப்பட்ட பயிற்சி வீடியோவில், துப்பாகிகள் ஏந்தியவர்கள், மாதிரி க்கிபுட்ஸில் ( தாக்கப்பட்ட இஸ்ரேல் குடியிருப்புகள்) தரையிறங்கும் காட்சிகள் இருந்தன. அந்த இடம், ரஃபா எல்லையிலிருந்து வடக்கே, தெற்கு காஸாவில் இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
 
2022-அோம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு முன்னர் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. மேலும் அது ‘ஈகிள் ஸ்குவாட்ரன்’ என்று பெயரிடப்பட்ட கணினி ஆவணத்தில் வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. ‘ஈகிள் ஸ்குவாட்ரன்’ என்பது ஹமாஸ் தங்கள் வான்வழி பிரிவுக்கு பயன்படுத்தும் பெயராகும். அதாவது பாராகிளைடரில் தரையிறங்கும் திட்டம் ஓராண்டுக்கு மேலாக இருந்துள்ளது என்பதை இது குறிக்கிறது.
 
மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் - எப்படி சாதித்தார்?
 
மாதிரி தளவாடம், நிலத்திலிருந்து பல மீட்டர்கள் தாழ்வாகத் தோண்டப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது
 
தாக்குதலில் எத்த்னை பேர் ஈடுபட்டனர்?
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி, அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்பு, காஸாவில் 30,000 ஹமாஸ் போராளிகள் இருப்பதாகக் கருதப்பட்டது. மேலும் சிறு சிறு குழுக்களிலிருந்து பல ஆயிரம் பேரை ஹமாஸால் திரட்ட முடியும் என நம்பப்பட்டது.
 
மற்றக் குழுக்களின் ஆதரவு இல்லாமல் பார்த்தால் கூட, பாலத்தீன ஆயுதக் குழுக்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த குழு ஹமாஸ் தான். அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல்களில் 1,500 பேர் ஈடுபட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் மதிப்பீடு கூறுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் 3,000 பேர் ஈடுபட்டிருக்கலாம் என இஸ்ரேல் தற்போது கருதுவதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
 
எது உண்மையான எண்ணிக்கையாக இருந்தாலும், காஸாவில் உள்ள ஆயுத இயக்கங்களின் சிறு பகுதி மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரிகிறது. சிறு ஆயுத குழுக்களிலிருந்து எத்தனை பேர் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலில் ஈடுபட்டனர் என்று துல்லியமாகக் கூற முடியவில்லை.
 
அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்கு முன்பாக, வேறு குழுக்களிலிருந்தும் ஹமாஸ் ஆதரவு திரட்டி வந்த நிலையில், லெபனான் ராணுவத்தின் முன்னாள் படை தளபதியும், தற்போது மத்திய கிழக்கு ஆய்வுகள் மையத்தின் பாதுகாப்பு ஆலோசகரான ஹிஷாம் ஜாபர், ஹமாஸ் மட்டுமே இறுதி திட்டம் குறித்து அறிந்திருந்தாக கூறுகிறார். மற்ற குழுக்களை தாக்குதல் தினத்தன்று உடன் அழைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
 
லண்டன் கிங்ஸ் பல்கலைகழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் பிரிவின் மூத்த விரிவுரையாளர் ஆண்டிரியாஸ் கிங், “திட்டமிடுதல் ஒரே மையத்திலிருந்து நடைபெற்றிருந்தாலும் அதை அமல்படுத்துவதில் அந்தந்த குழுக்கள் தங்களுக்கு சரியான நடைமுறைகளை பின்பற்றினர்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
 
 
இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் பலவீனத்தைக் கண்டு ஹமாஸ் குழுவினர் ஆச்சர்யபட்டதாக கூறப்படுகிறது. இணையம் அல்லாத வழிகளில் தங்களுக்குள் தொடர்பு கொண்டு இஸ்ரேலின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பித்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
 
வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் மத்திய கிழக்கு நிபுணராக இருக்கும் ஹூக் லொவாத்,கூட்டுபயிற்சி முகாம்கள் குறித்து இஸ்ரேலுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்றார். “ஆனால் அவை பாலத்தீன பகுதிகளில் நடைபெறும் வழக்கமான துணை ராணுவ பயிற்சிகள் என்றும் தவறாக கணித்திருக்கும். ஒரு பெரிய தாக்குதலுக்கான தயாரிப்பாக கருதவில்லை” என்றார்.
 
இந்த கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கும் விவகாரங்கள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளிடம் கேட்ட போது, “தற்போது எங்கள் கவனம் எல்லாம், தீவிரவாத அமைப்பான ஹமாஸிடம் இருந்து எதிர்வரும் அச்சுறுத்தலை தவிர்ப்பது மட்டுமே. உளவுத்துறை தோல்வி குறித்து எல்லாம் பின்னர் பேசப்படும் என்று தெரிவித்தனர்.
 
அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த படுகொலைகளைத் தவிர்த்திருக்க முடியுமா என்பது குறித்து இஸ்ரேல் கணிப்பதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிடும். அதன் ராணுவம், உளவுத்துறை மற்றும் அரசுக்கு ஏற்படும் விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments