Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்': சொல்ஹெய்ம்

'தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்': சொல்ஹெய்ம்
, திங்கள், 17 நவம்பர் 2014 (08:33 IST)
இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நார்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.


 
நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
 
நோர்வேயின் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2006ஆம் ஆண்டு ஏப்ரலுடன் முறிவடைந்தது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த நிலையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.
 
போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் உச்சத்தில், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தவணைக்காக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ, இப்போது மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துவருகின்றன.
 
வடக்கு பிராந்தியத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியில், வட மேல் மாகாணத்தில் குருநாகல் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோதே மகிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் மீதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.
 
'புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சொல்ஹெய்ம் கூறினார்': மகிந்த
 
'அன்று சொல்ஹெய்ம் வந்து என்னிடம் என்ன கூறினார். உங்களின் இராணுவத்தால் எந்தவழிகளிலும் (விடுதலைப் புலிகளை) தோற்கடிக்க முடியாது என்று கூறினார். அவர் (விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்) யுத்தத்தில் மிகவும் வல்லவர், ஜீனியர்ஸ் என்று கூறினார்.
 
நான் ஒரு பதில் தான் அவரிடம் கூறினேன். அவர் வடக்கு காட்டில் பிறந்த மனிதர். நான் தெற்கு காட்டில் பிறந்த மனிதர் என்று அவருக்கு பதில் கூறினேன்' என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.
 
நார்வேயின் சாமாதானத் தூதுவர் சோல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், அது தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் சரியென்றால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி இங்கு கூறினார்.
 
1999ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், இலங்கையில் அமைதி முயற்சிகளில் முக்கிய பங்காற்றியவர் எரிக் சொல்ஹெய்ம்.
 
இலங்கையின் போர்க்கால அழிவுகள் தொடர்பில் நடத்தப்படக்கூடிய எந்தவொரு சர்வதேச விசாரணைகளுக்கும் சென்று சாட்சியம் அளிப்பதற்கு எரிக் சொல்ஹெய்ம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரை மேற்கோள்காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இலங்கை ஜனாதிபதி சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்மின் முழுமையான பதிலை உடனடியாகப் பெறமுடியவில்லை.
 
எனினும், தேர்தல் நெருங்குவதால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைப் பற்றி பொய்கூறியுள்ளதாகவும், உண்மை நிலையை தெளிவுபடுத்துவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil