Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்

இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்
, சனி, 27 டிசம்பர் 2014 (06:45 IST)
இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.


புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா உலக மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
 
ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கம். சமீபகாலமாக புத்தகங்களுக்கு பதில் மின்னொளி உமிழும் மின்படிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
 
இப்படி அதிகரித்துவரும் மின்படிகளின் பயன்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரித்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக, மனிதர்கள் தூங்குவதற்கு முன்னர் புத்தகம் படிப்பதற்கும் இ-ரீடர்கள் எனப்படும் மின்படிகளைப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
 
 
மின்படிகள் படித்தால் ஆழ்ந்த நித்திரைகொள்ள முடியாது
 
இந்த ஆய்வின் முடிவில் தூங்கச் செல்வதற்கு முன் மின்படிகளை படிப்பவர்களுக்குத் தூக்கம் வருவதற்கு நீண்டநேரம் பிடிப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

திரை ஒளிரா மின்படிகளால் பிரச்சனையில்லை

webdunia

 
மின்படிகள் என்னும்போது முதன்முதலில் வந்த அமேசானின் கிண்டில் மின்படியில் திரையில் தெரியும் எழுத்துக்களுக்கு பின்னிருந்து எந்த ஒளியும் உமிழும் வசதியிருக்கவில்லை. அந்த முதல் தலைமுறை கிண்டில் மின்படியை நீங்கள் படிக்கவேண்டுமானால், மற்ற சாதாரண காகிதப் புத்தகங்களைப்போல சூரிய வெளிச்சம் அல்லது விளக்கு வெளிச்சத்தில் தான் அவற்றைப் படிக்கமுடியும்.
 
ஆனால் தற்போதைய மின்படிகளின் திரை ஒளிரும் திரையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் திரையைப்போல திரைக்குப் பின்னிருந்து ஒளி உமிழும் தன்மை கொண்டவையாக இவை இருக்கின்றன. இப்படி திரையில் இருந்து ஒளி உமிழும் மின்படிகள் தான் மனிதர்களின் தூக்கத்தை பாதிப்பதாக இந்த ஆய்வுக்கு தலைமைவகித்த மூத்த ஆய்வாளர் பேராசிரியர் சார்ல்ஸ் செஸ்லர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மாதிரியான ஒளிரும் மின்படிகளின் திரையில் இருந்து வெளிப்படும் கூடுதல் வெளிச்சமானது நேரடியாக கண்களுக்குள் செல்வதால், மனிதர்களின் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகார சமநிலை பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவரது தூக்கம் கெடுவதாகவும் சார்ல்ஸ் செஸ்லர் தெரிவித்திருக்கிறார்.
 
இதற்கு நேர்மாறாக, புத்தகங்கள் மற்றும் திரை ஒளிரா மின்படிகள் இப்படியான அதிகப்படியான ஒளி எதனையும் கண்களுக்குள் நேரடியாக செலுத்துவதில்லை என்பதால் அவற்றால் ஒருவரின் தூக்கம் கெடுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
எனவே ஆழ்ந்த அமைதியான தூக்கம் விரும்புபவர்கள், தாங்கள் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டுமணி நேரத்துக்கு முன்னதாகவே தங்களின் ஸ்மார்ட்போன்கள், ஒளி உமிழும் மின்படிகள் போன்ற கூடுதல் ஒளியை நேரடியாக கண்ணுக்குள் செலுத்தும் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil