Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்போடியாவுக்கு சரிபார்க்காத வேலைய நம்பி போகாதீங்க" - தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (23:54 IST)
கம்போடியாவில் 'டேட்டா என்டரி' வேலை என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனியார் நிறுவனத்தால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த ராமநாதபுரம் இளைஞர் அங்கிருந்து தப்பித்து தாயகத்துக்கு திரும்பி வந்துள்ளார்.
 
அந்த இளைஞர் கம்போடியாவில் அமர்த்தப்பட்ட வேலையின் அங்கமாக மாடல் அழகியை போல் வெளிநாட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி பண மோசடி செய்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகும் அந்தப் பணிக்காக தாம் 3 ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
 
தற்போது தாயகத்துக்கு தப்பி வந்துள்ள அந்த இளைஞர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் நீதி ராஜன். மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துள்ள இவர் கொரோனா காலத்தில் வேலையின்றி இருந்ததால், இயல்புநிலை திரும்பிய பிறகு வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில், முதுகுளத்தூர் அருகே உள்ள கொளுந்தூரை பகுதியை சேர்ந்த மகாதீர் முகம்மது என்பவர்  கம்போடியா நாட்டில் தான் வேலை செய்து வருவதாகவும், கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
 
அதை நம்பி  நீதி ராஜன் விசா கட்டணம் மற்றும் டிக்கெட் செலவுகளுக்காக மகாதீர் முகமதுவிடம் ரூ.2.50 லட்சம் மற்றும் தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) கொடுத்துள்ளார்.
 
பணத்தை பெற்றுக்கொண்ட மகாதீர் முகமது நீதி ராஜனை கடந்த ஜூன் மாதம் கம்போடியா நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்து சென்று  அங்கு 'டேட்டா என்ட்ரி' வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.
 
ஆனால், அந்த வேலைக்கு அனுப்பாமல் தன்னை 3 ஆயிரம் டாலருக்கு சீன நிறுவனம் ஒன்றிடம் மகாதீர் விற்றுள்ளதாக நீதி ராஜன் தெரிவித்தார்.
 
இவ்வாறு நீதி ராஜனை வாங்கிய கூறப்படும் சீன நிறுவனம் அவரது கடவுச்சீட்டை தன்வசம் வைத்துக் கொண்டு, அவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
 
அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தன்னைப்போல மேலும் பலர் இருப்பதாகவும் நீதி ராஜன் தெரிவித்தார். தாயகம் திரும்பிய அவர் பிபிசி தமிழிடம் விரிவாக தான் அனுபவித்த பிரச்னைகளை விவரித்தார்.
 
மியான்மரில் வேலை மோசடி: மேலும் சில தமிழர்கள் தவிப்பு - ஆயுதக்குழு பகுதியில் என்ன நடக்கிறது?
 
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி?
 
மாடல் அழகியை போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் போலியான கணக்குகளைத் தொடங்கி  அவற்றைப் பயன்படுத்தி மோசடி அழைப்புகள் மூலம் வெளிநாட்டவர்களிடம் பணத்தை பெற்று சீன நிதி நிறுவனத்திடம் முதலீடு செய்ய வைக்கும் சைபர் குற்றங்களில் தன்னையும் பிறரையும் சீன நிறுவனம் ஈடுபடுத்தியதாக நீதி ராஜன் கூறினார்.
 
ஒருவேலை அந்த நிறுவனத்தார் சொல்வதை செய்ய மறுத்தால் அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் நீதிராஜன் தெரிவித்தார்.
 
 
இந்த விவகாரம் தொடர்பாக பல கட்ட முயற்சிக்குப் பிறகு இந்திய தூதரகத்திடம் புகார் செய்த நிலையில் நீதி ராஜன் கம்போடியாவில்  இருந்து தாய்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்.
 
அதுவும் அந்த நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கூறி ரூ.2.50 லட்சம் அபராதம் செலுத்தியதும் விமான கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்கு தப்பி வந்திருக்கிறார் நீதி ராஜன்.
 
இதற்கிடையே, சொந்த ஊர் திரும்பியதும் தன்னைப் போல பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியான வேலைக்கு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைத்ததாக முகவர் மகாதீர் முகமது மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீதிராஜன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நீதி ராஜன் ,வெளிநாட்டு வேலை ஏஜெண்டாக மகாதீர் உள்ளதாகக் கூறியதை நம்பி, அவரது அம்மாவிடம்  ரூ.2.50 லட்சம் கொடுத்தேன். பின்னர் கடந்த ஜூன் மாதம்  மகாதீர் என்னை சுற்றுலா விசாவில் கம்போடியா அழைத்துச் சென்று, டேட்டா என்ட்ரி வேலை என கூறி  ஒரு சீன நிறுவனத்தில்  சேர்த்துவிட்டார்," என்று கூறினார்.
 
"அந்த சீன நிறுவனம் எனக்கு மாடல் அழகியை போல் படங்கள் பதிவேற்றப்பட்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து கொடுத்தது. அவற்றின் வழியாக வெளிநாட்டவர்களிடம் ஆபாசமாகவும் காதல் உணர்வுடனும் நட்பாகவும் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்ப வைத்தனர். அந்த மெசேஜ் மூலம் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள் வீடியோ கால் செய்யுமாறு கேட்பர். அப்போது எனக்கு ஒதுக்கப்பட்ட மாடல் அழகியிடம் சொல்லி அவர்களை அந்த வெளிநாட்டு நபரிடம் வீடியோ காலில் பேச வைப்பர்.
 
அந்த பெண் பேசுவதை நம்பி அந்த வெளிநாட்டவர், தான் பெண்ணிடம் தான் பேசுகிறேன் என நினைத்து எனக்காக தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மெசேஜ் செய்வார். அவர் எந்த விதத்தில் (காதல், காமம், நட்பு) என்னிடம் பேசுகிறாரோ அவ்வாறே பதில் அளிப்பேன்," என்கிறார் நீதி ராஜன்.
 
"இந்த உரையாடல்கள் தொடரும்போது திடீரென ஒரு நாள்  நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வெளிநாட்டவர் கேட்டால், நம் எதிர்கால வாழ்விற்கு பணம் அதிகம் தேவைப்படும். எனவே நான் ஒரு நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளேன். அதே நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்யுங்கள் என சொல்ல வேண்டும்.
 
"நான் சொன்னதை நம்பி  வெளிநாட்டவர் அமெரிக்க டாலர்களில் முதலீடு செய்வார். முதலீடு செய்யும் டாலர்களை நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். இந்திய மதிப்பிற்கு 8 கோடி, 10 கோடி ரூபாய்க்கு கூட சிலர் முதலீடு செய்வர். அப்படி டாலர் பெறும் வெளிநாட்டவரின் கணக்கை, பணப்பரிவர்த்தனை முடிந்ததும் உடனடியாக பிளாக் செய்து விடுவர்" என்கிறார் நீதி ராஜன்.
 
வெளிநாட்டவரிடம் பணம் பறிக்கும் சைபர் குற்றங்களை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அந்த நிறுவன மேலாளரிடம் எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. என்னை சொந்த ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டேன்.
 
அப்போதுதான் என்னை மகாதீர் முகமது, 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு சீன நிதி நிறுவனத்திடம் விற்றது தெரிய வந்தது.
 
அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் என நிறுவனத்தார் மிரட்டினர். அதற்கு பயந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் வேலையை செய்தேன்.
 
அப்படி வேலையை செய்ய மறுப்பவர்களை தனி அறையில் அடைத்து வைத்து அடிக்கடி கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்வர். அதற்கு பயந்தே பல இந்தியர்கள் கொடுக்கும் வேலைகளை செய்வார்கள்.
 
இது தொடரவே சீன நிதி நிறுவனத்திற்கு தெரியாமல் மோசடி நிறுவனத்தில் சிக்கியது பற்றி மின்னஞ்சலில் இந்திய தூதரகத்திற்கு  தகவல் அளித்தேன். அதன் அடிப்படையில் அங்கிருந்து மீட்கப்பட்டேன்.
 
முறையான விசா இல்லாமல் கம்போடியாவில் தங்கி இருந்தால் அபராதமாக ரூ. 2.50 லட்சம் பணம் செலுத்தி இந்தியா வந்தேன் என்கிறார் நீதி ராஜன்.
 
கம்போடியா நாட்டில் தன்னைப் போல 1,500-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இளைஞர்கள் சுற்றுலா விசாவில் செல்லக்கூடாது. வேலைக்கான விசாவை உறுதி செய்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும்.
 
கம்போடியா நாட்டில் டேட்டா என்டரி வேலை என்று அழைத்தால் போக வேண்டாம் என நீதி ராஜன் கேட்டுக் கொண்டார்.
 
வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தை ஏமாற்றிய கும்பல்
 
இது குறித்து நீதி ராஜன் தாய் மாரியம்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். வெளிநாடு சென்றால் மகன் வாழ்வில் முன்னேறி விடுவார் என நம்பி ரூ.2.50 லட்சம் வட்டிக்கு வாங்கி மகனை நீதி ராஜன் தாய்  வெளி நாடு அனுப்பி வைத்தேன்.
 
வெளிநாடு சென்ற என் மகன் அங்கு தான் ஏமாற்றப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக எனக்கு அங்கிருந்து போனில் அழைத்து அழுது கொண்டே சொன்னான்.
 
இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்ட என் மகன்  உரிய விசா இன்றி கம்போடியாவில் தங்கி இருந்ததால் மீண்டும் சொந்த ஊர் திரும்ப அபராத தொகையாக ரூ.2.50 லட்சம் கட்ட வேண்டும் என வெளி நாட்டில் இருந்து அவன்  சொன்னதால் மீண்டும் ரூ.2.50 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி என் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளேன்.
 
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடும் சிரமத்தில் இருந்து வருகிறோம்," என தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமிழ்நாடு அரசாங்கத்தை எப்படி அணுகுவது?
தமிழ்நாடு அரசு
 
மியான்மர், கம்போடியா அல்லது வேறு எந்த நாட்டிலாவது துயருரும் நிலையில் இந்தியர்கள் இருந்தால், அவர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்து வர சில நடைமுறைகளை இந்திய அரசாங்கம் பின்பற்றுகிறது.
 
அதற்கு ஏதுவாக சில வழிமுறைகளை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரும் தங்களுடைய ஊரில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.
 
முதலில் பாதிக்கப்பட்ட நபர் தங்களுடைய மகனோ, மகளோ அவரது நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு மூலம் தெரிவித்து பத்திரமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உதவிடும்படி கோர வேண்டும்.
அந்த கோரிக்கை மனுவில், மகனோ, மகளோ அவரைப் பற்றிய விவரம், அவர் தங்கியுள்ள இடம், வேலை பார்க்கும் இடம், செல்பேசி எண், கடவுச்சீட்டு விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆட்சியர் மூலமாக இல்லாமல் நேரடியாகவும் 044-28525648, ISD-044-28520059 ஆகிய தொலைபேசி, 044-28591135 என்ற தொலைநகல், nrtchennai@gmail.com மற்றும் rehabsl2013@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த மனுவை பெற்றுக் கொள்ளும் மாவட்ட ஆட்சியர், அதை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவல்பூர்வ கடிதம் மூலம் கோருவார்.
 
ஆட்சியரின் மனு கிடைத்தவுடன், அதை பரிசீலிக்கும் ஆணையரகம், மனுவில் உள்ள விவரங்களை சரிபார்த்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் வாழும் நபருடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிப்பார்.
 
டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டுள்ள அல்லது தங்கியிருக்கும் நாட்டுக்கான இந்திய தூதரை தொடர்பு கொண்டு விவரத்தை பகிர்வார்.ஒருவேளை வெளிநாட்டில் இந்தியர் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலோ தடுப்பு முகாமில் இருந்தாலோ அவரை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரும் சட்ட உதவிகளை அங்குள்ள இந்திய தூதர் வழங்குவார்.
 
அதுவே, சட்டவிரோதமான முறையில் ஏதேனும் குழுவால் இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவரை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கத்துடன் இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பேசி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பர்.
 
இதில் எந்த நடைமுறை சாத்தியமோ அதை இந்திய தூதர் மூலமாக இந்திய அரசாங்கம் கையாளும். பிறகு இந்திய தூதர் மூலம் மீட்கப்படும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்