காலை இரவு என்று வெவ்வேறு நேரங்களில் வேலை பார்க்கின்ற ஷிஃப்ட் முறை தொழிலாளிகளுக்கு கூடுதலான உடற்பருமன் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
அத்தொழிலாளிகளுக்கு வயது அதிகமில்லை என்றாலும்கூட அவர்கள் ஆரோக்கியம் மோசமாவதை இங்கிலாந்து மக்களின் உடல்நிலை பற்றிய தகவல் திரட்டு காட்டுகிறது.
வேலை உத்தரவாத ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளாமலேயே தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துவருவதால், அதிகம் பேர் ஷிஃப்ட் வேலை பார்க்க நேரிடுகிறது என்றும், அது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியிருந்த ரேச்சல் கிரெய்க் கூறுகிறார்.
பகல் இரவு என மாறி மாறி வேலை பார்ப்பதென்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்பது தற்போது மிகவும் தெளிவாகிவிட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் ஆண் தொழிலாளர்களில் 33 சதவீதம் பேரும் பெண் தொழிலாளர்களில் 22 சதவீதம் பேரும் ஷிஃப்ட் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள் என சுகாதார மற்றும் சமூகப் பாராமரிப்பு தகவல் மையம் செய்துள்ள ஆய்வு கூறுகிறது.
காலை எழு மணிக்கும் மாலை ஏழு மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள் வராத வேலை நேரங்களை ஷிஃப்ட் வேலையாக அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் காலை ஏழுக்கும் மாலை ஏழுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வேலைசெய்யும் மக்களில் 24 சதவீதம் பேர் உடல் எடை அதிகம் கொண்டுவர்களாக இருக்கிறார்கள் என்றால், ஷிஃப்ட் தொழிலாளிகளிடையே இது 30 சதவீதமாக உள்ளது.
அதேபோல முதுகுவலி, நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகளும் ஷிஃப்ட் தொழிலாளர்களிடையே அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.