Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா?

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:23 IST)
யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.
 
யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.
 
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.
 
2007ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாகும் என இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
 
இந்த நிலையிலேயே, சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை அந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா அரசாங்கம் அதன் கவலையை இலங்கையிடம் தெரிவித்திருந்தது. மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கியிருக்கும் சூழலில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.
 
ஹம்பாந்தோட்டையில் நடைமுறையில் எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
 
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
 
முன்னதாக, சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்து வெளியிட்டது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீன கப்பல் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி தனதுஅதன் பயணத்தைத் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
 
இதையடுத்து இந்த வார தொடக்கத்தில், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு காவல்துறை அதன் எல்லைக்குட்பட்ட கடலோர பாதுகாப்பை பலப்படுத்தியது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்திய கடற்படையும் இந்திய கடலோர காவல் படையும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தின.
 
இதேவேளை, சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகலாம் என்று இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) இலங்கைக்கு எச்சரிக்கை குறிப்பை அனுப்பியது.
 
"இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டு" இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பணியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ லெப்டிணன்ட் கர்னல் புனீத் சுஷீல் மற்றும் அதிகாரிகள், இந்திய துணைத்தூதர் திபின் தலைமையில் ஹம்பந்தோட்டா துறைமுக அதிகாரிகளையும் இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். அப்போதும் இந்தியாவின் கவலை இலங்கை தரப்பிடம் பதிவு செய்யப்பட்டது.
 
இதேபோல, 'யுவான் வாங் 5' கப்பல் சீனா ராணுவத்தின் (பிஎல்ஏ) ஆதரவு அமைப்பால் இயக்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனும் கூறியது.
 
இந்த அழுத்தங்கள் காரணமாகவே, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாய்மொழி குறிப்பு மூலமும் பின்னர் எழுத்துபூர்வமாகவும் இந்த பிரச்னையில் மேலதிக ஆலோசனைகள் செய்யப்படும் வரை, யுவான் வாங் 5 கப்பலின் வருகை தேதியை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
 
ஆராய்ச்சி பணிக்காக வடிவமைக்கப்பட்ட யுவான் வாங் 5 கப்பல், 2007இல் கட்டப்பட்டது. 11 ஆயிரம் டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல், ஜூலை 13ஆம் தேதி சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டது. தற்போது தைவானுக்கு அருகே இந்த கப்பல் பயணம் செய்து வருகிறது.
 
ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, சில தினங்களுக்கு முன்பு சீன தடையை மீறி பயணம் செய்தார். அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக இதே கப்பலை தைவான் கடல் பகுதி நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சீனா.
 
 
அந்த கடல் பகுதியில் சீனா அதன் வான் படை மற்றும் கடற்படை, ராணுவ கூட்டு ஒத்திகையை கடந்த இரு தினங்களாக நடத்திய விவகாரம் சர்ச்சையானது. மரைன் டிராஃபிக் வலைதள தரவுகளின்படி, யுவான் வாங் 5 கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் தைவானின் வடகிழக்கு இடையே உள்ளது.சீன கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுகை வரைபடத்தை தயாரிக்க இந்த யுவான் வாங் 5-ஆல் முடியும். ஆனால், தரவுகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலாக இது காட்டப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ஹம்பாந்தோட்டையில் சீன கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலை நிலவுகிறது.
 
இந்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டால் அது இலங்கையுடனான சீன உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கான சீன தூதர் கூறியிருந்தார். இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கர்னல் நளின் ஹேரத், சீன கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
 
 
யுவான் வாங் 5 கப்பல், சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாட்டு வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.
 
இந்த கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து மற்ற இந்தோனீசிய ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைய திட்டமிடப்பட்டது.
 
யுவான் வாங் 5 சீன கப்பல், இந்திய பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும்.
 
இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான ஆற்றல் பற்றிய தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.
 
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேக கண்ணோட்டத்துடனேயே அணுகி வருகிறது.
 
அந்த நாட்டில் கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ள துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017இல் வழங்கியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், இலங்கையில் உள்ள துறைமுக வசதிகளை அனுபவிக்கும் வகையில் தமது செல்வாக்கை இலங்கை மீது செலுத்த இந்த கப்பல் பயணத்தை சீனா வாய்ப்பாக பயன்படுத்தலாம் என இந்தியா கருதுகிறது.
 
இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில், சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அப்போதும் இந்தியா அந்த கப்பல்கள் குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை எதுவும் பதிவாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments