உலகிலேயே முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பெற்றவர் மரணம்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (14:58 IST)
உலகில் முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணமடைந்தார்.


மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட் 2 மாதங்கள் மட்டுமே அதனுடன் உயிர் வாழ்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவரது நிலைமை மோசமடைந்து வந்ததாகவும் மார்ச் 8ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பென்னட் உயிரிழந்ததாகவும் பால்டிமோரில் உள்ள அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின்போதே இதன் அபாயத்தை பென்னட் உணர்ந்திருந்தார். பென்னட்டிற்கு மனித இதயத்தை பொருத்துவதற்கான சாத்தியம் இருக்கவில்லை.

இதனால் அவரது உயிரை காக்க வேறு வழியின்றி பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலான்ட் மெடிகல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியது. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆறு வார காலம் கருவிகளின் உதவியுடன் பென்னட் படுக்கையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ம் தேதி பென்னட்டிற்கு பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பின் அவர் தனது குடும்பத்துடன் நேரம் கழித்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து தனது நாயை சந்திக்க வேண்டும் என்றும் எண்ணியுள்ளார். ஆனால் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.

"பென்னட் ஒரு தையரியசாலி; இறுதி வரை தனக்கு ஏற்பட்ட பிரச்னையை எதிர்கொண்ட உன்னத நோயாளி" என புகழாரம் சூட்டியுள்ளார் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் பார்ட்லி கிரிஃப்பித்.

"எனது தந்தைக்கு செய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை நம்பிக்கையின் தொடக்கமாக இருந்தது. முடிவாக அல்ல. இந்த வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொரு புதுமையான தருணத்திற்கும், ஒவ்வொரு கனவுக்கும், ஒவ்வொரு தூக்கமில்லாத இரவுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என பென்னட் மகன் டேவிட் ஜூனியர் ஏ.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

முன்னதாக டாக்டர் கிரிஃப்பித் கூறியபொழுது, அறுவை சிகிச்சை உலகில் "உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியை தீர்க்கும் வழிகளுக்கு இது ஒரு படி அருகே அழைத்துச் செல்லும் ". தற்போது அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 17 பேர் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தும், மாற்று உறுப்பு கிடைக்காமல் இறக்கின்றனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.

மாற்று அறுவை சிகிச்சையின் தேவையை பூர்த்தி செய்ய ஸெனோட்ரான்ஸ்ப்ளான்டேஷன் (xenotransplantation) என்று அழைக்கப்படும் விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்ட காலமாக கருதப்பட்டு வருகிறது. மேலும் பன்றி இதய வால்வுகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவான ஒன்றாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2021ஆம் மாதம், நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஒருவருக்கு வெற்றிகரமாக ஒரு பன்றியின் சிறுநீரகத்தை மாற்றியதாக அறிவித்தனர். அந்த நேரத்தில் அந்த அறுவை சிகிச்சை, இதுவரை மாற்று அறுவை சிகிச்சை துறையில் மிகவும் மேம்பட்ட பரிசோதனையாக இருந்தது. மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட நபர் அப்போது மூளைச்சாவு அடைந்திருந்தார். மீண்டும் அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பன்றியின் உறுப்பில் 10 மரபணு மாற்றங்கள்

ஜேம்ஸ் காலேகர், உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

முதல் பன்றி-இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல். மற்றொரு இனத்தின் உறுப்புகளைப் பயன்படுத்தும்போது, ஒருவரது சொந்த உடல் திசுக்கள் மாற்று சிகிச்சையால் பொருத்தப்பட்ட உறுப்புகளைக் கொல்ல நேரிடும். இதை "ஹைப்பர் ரிஜக்ஷன்" (hyperacute rejection) என்று கூறுவார்கள். இதை எதிர்கொள்ளும் வகையில் பன்றியின் உறுப்பில் 10 மரபணு மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

பன்றியின் இதயம் நோயாளியின் உடலுக்குள் பொருத்திய போது அது ஒரு பதற்றமான தருணம். ஆனால் மிகையான ஹைப்பர் ரிஜக்ஷன் நடக்கவில்லை.

அறுவைசிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழுவிடம் பேசியபோது, ​​அவர்கள் உறுப்பு நிராகரிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், தானம் செய்யப்பட்ட இதயம் "ஃபெராரி இன்ஜின்" போல் செயல்படுவதாகவும் கூறினர். ஆனால் அவர்கள் பென்னட் இன்னும் பலவீனமாக இருப்பதாக எச்சரித்தனர்.

அதன் பிறகு என்ன நடந்தது மற்றும் பென்னட்டின் மரணத்திற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. அந்த ஆய்வுகளின் முடிவுகள், மாற்று உறுப்புகளின் உலகளாவிய பற்றாக்குறையைத் தீர்க்க பன்றிகளைப் பயன்படுத்துவதற்கான எதிர்காலத்திற்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments