Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:12 IST)
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென்.
 
இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான்.
 
ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கதையைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? அது ஒரு திடமான வரலாற்று உண்மையா, இல்லை இறையியல் கதையா, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே உள்ள ஒன்றா?
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். யேசேப்புவும் கன்னி மேரியும் விடுதி அறை தேடுவது, அவர்களுக்கு குழந்தை பிறப்பது, மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை மேய்ப்பது, மூன்று ஞானிகள் பளபளக்கும் பரிசுகளை எடுத்துக் கொண்டு மாட்டுத் தொழுவத்திற்கு வருவது என பலரும் தெரிந்திருக்கும் கதைதான் இது.
 
ஆனால் இந்த அத்தியாயங்கள் எல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பு, சிறு சிறு ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டவை. எல்லா இலக்கியங்களிலும் இயேசுவின் கதை கொண்டாடப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அதை வரலாற்று ஆதாரங்களைக் கொண்டது என்று திட்டவட்டமாக எடுத்துக் கொள்ள முடியுமா?
 
இது பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் சிந்திக்கும், அவர்களைத் துளைத்தெடுக்கும் ஒரு கேள்வி. சுவிசேஷங்கள் அல்லது நற்செய்திகள் என அழைக்கப்படும் முழு கிறிஸ்தவத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய மிக முக்கியமான புத்தகங்களின் பக்கங்களில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க பெரும்பாலானவர்கள் முயன்றனர்.
 
சுவிசேஷங்களின் உண்மைகள்
 
மத்தேயு (Matthew), மாற்கு(Mark), லூக்கா (Luke), யோவான் (John) ஆகிய நான்கு பேர்தான் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றிய நமக்குக் கிடைத்த அறிவின் பெரும்பகுதிக்குக் காரணமானவற்றை எழுதியவர்கள். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய கதையை ஆராயும் வரலாற்றாசிரியர்களுக்கு, அவர்கள் அளித்திருக்கும் தகவல்கள் பற்றி இரண்டு முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.
 
அதில் முதலாவது, மாற்கு மற்றும் யோவான் ஆகிய இருவரின் புத்தகங்களும் இயேசுவின் பிறப்பு பற்றி குறிப்பிடவில்லை. இரண்டாவது, மத்தேயுவும் லூக்காவும் அளித்திருக்கும் தகவல்கள் பல இடங்களில் முரண்பாடாக இருக்கின்றன.
மத்தேயு மற்றும் லூக்கா இருவரும் இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார்கள். அவருடைய தாயார் மேரி பிரசவிக்கும் போது கன்னியாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறப்பு பற்றிய அத்தியாயத்தில் இதில் மட்டுமே மத்தேயுவும் லூக்காவும் ஒருமித்திருக்கிறார்கள்.
 
யோசேப்பின் கனவில் ஒரு தேவதை தோன்றியது, கிழக்கிலிருந்து நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து மூன்று ஞானிகள் வந்தார்கள், ஏரோது மன்னர் அப்பாவிகளை படுகொலை செய்தார் என்பன போன்ற தகவல்களை மத்தேயு கூறியிருக்கிறார். இவற்றில் எதையும் லூக்கா குறிப்பிடவில்லை.
 
லூக்கா இந்தத் தருணத்தை வேறு வகையாகக் கூறியிருக்கிறார். "இரவில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த" மேய்ப்பர்கள் முன் "கடவுளின் தேவதை" தோன்றியதாகவும், ரோமானிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எண்ணப்படுவதற்காக பெத்லகேமுக்குச் செல்லும்படி மேரியும் யோசேப்பும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரு தொழுவத்தில் இயேசு வைக்கப்பட்டிருந்தார் என்றும் லூக்கா கூறியிருக்கிறார்.
 
லூக்கா மற்றும் மத்தேயுவின் தகவல்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இயேசுவின் பிறப்பு மீதான வரலாற்று நம்பகத்தன்மையில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அனைவரும் சந்தேகம் கொள்ளவில்லை.
 
"சுவிசேஷகர்கள் இயேசுவின் தோற்றம் பற்றி ஒரு விரிவான கதையை உருவாக்கி வைத்திருந்தால், அவற்றில் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று கென்டக்கியில் உள்ள அஸ்பரி இறையியல் அமைப்பின் புதிய ஏற்பாட்டு அறிஞர் பென் விதரிங்டன் வாதிடுகிறார்.
 
"இருவரும் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும் தனித்தனியான சாட்சியங்கள். அடிப்படையான அம்சத்தை இருவரும் உறுதிப்படுத்துகிறார்கள்." என்கிறார் அவர்.
 
இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு உண்மை உள்ளது. மத்தேயுவும் லூக்காவும் இயேசு பிறந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தங்களது நற்செய்திகளை எழுதினார்கள். அப்போது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளை நேரில் கண்ட சாட்சிகள், வேகமாக இறந்து கொண்டிருந்தனர். அந்தக்கால கிறிஸ்தவ சமூகங்கள் ஒன்றுக்கொன்று தனித்திருந்தன. அரசியல் எழுச்சிகளால் சிதறடிக்கப்பட்டிருந்தன. இப்படியொரு காலத்தில், மத்தேயு மற்றும் லூக்காவின் தகவல்கள் ஒருமித்து இருந்தால் அது மிகப்பெரிய சாதனையாகவே இருந்திருக்கும்.
 
மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் இடையேயான தகவல் முரண்பாடுகளை டியோனீசியஸ் 'தி ஹம்பிள்' பொருள்படுத்தவில்லை. இயேசு கி.பி. ஒன்றாம் ஆண்டில்தான் பிறந்தார் என்று இந்த ரோமானியத் துறவி கி.பி ஆறாம் நூற்றாண்டில் திட்டவட்டமாக அறிவித்தார். இவர்தான் அன்னோ டோமினி அல்லது கிறிஸ்து பிறப்புக்குப் பின் என்ற சகாப்தத்தை உருவாக்கியவர். இந்தத் துணிச்சலான அறிவிப்புதான், இன்று நாம் பயன்படுத்தும் நாள்காட்டி முறைக்குக் காரணமானது.
 
டியோனீசியஸின் கணக்கீடுகள் வெறும் ஊகத்தைவிட மேம்பட்டதாக இருந்ததா? அவர் உண்மையில் இயேசு பிறந்த ஆண்டை துல்லியமாகக் கணித்திருக்க முடியுமா?
 
இரண்டாயிரம் ஆண்டுத் தொலைவில் இருந்து கொண்டு தீர்க்க முடிகிற அளவுக்கு இது எளிமையான புதிர் அல்ல. ஆனால் சுவிசேஷகர்களின் சாட்சியங்களில் உள்ள மூன்று தகவல்கள் சில தடயங்களை நமக்கு வழங்குகின்றன. ரோமானிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அப்பாவிகளின் படுகொலை, பெத்லகேமின் நட்சத்திரம் ஆகிய மூன்றும்தான் அந்த முக்கியத் தகவல்கள்.
 
அனைத்து யூதர்களும் தங்கள் பூர்விக இடத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுதான் ரோமானிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. லூக்கா குறிப்பிட்டிருக்கும் மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்று இது. சில வரலாற்றாசிரியர்கள் இந்தத் தகவலின் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். குடும்பங்களை இவ்வாறு வேரோடு மாற்றுவது ரோமானிய நடைமுறையல்ல என்று கூறுகின்றனர்.
 
இருப்பினும், மற்ற வரலாற்று ஆதாரங்களில் இருந்து சிரியாவின் ரோமானிய ஆளுநரான குய்ரினியஸ் கி.பி. ஆறாம் ஆண்டில் யூதேயாவின் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இந்த வகையில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது உண்மையெனில், இயேசு கிறிஸ்து இந்த ஆண்டில்தான் பிறந்தாரா? அதாவது இப்போது நம்பப்படுவதில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு.
 
இருக்கலாம். ஆனால் மத்தேயு அளித்திருக்கும் அப்பாவிகளின் படுகொலைகள் பற்றிய தகவலால் இதை உறுதி செய்வது கடினமாகிறது. பெத்லகேமில் "யூதர்களின் ராஜா" பிறந்தார் என்ற செய்தியால், ஏரோது மன்னர் கலக்கமடைந்து, அந்த நகரத்தில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார் என்கிறது மத்தேயுவின் சுவிசேஷம்.
 
இது கசப்பான உண்மையா? அல்லது விரிவான புனைகதையா? மீண்டும் முரண்பாடுகள் தோன்றுகின்றன. ஏரோது மன்னர் உண்மையில் கொலைகளுக்கு உத்தரவிட்டிருந்தால், யூத மன்னரின் தீவிர விமர்சகரும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரிருமான ஜோசிஃபஸ் அவரைக் குறித்த கண்டனத்தைப் பதிவு செய்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை.
 
"ஆனால் பெத்லகேமில் 1,000 க்கும் குறைவான மக்களே இருந்ததால், அப்பாவிகளின் படுகொலை வரலாற்றில் ஒரு சிறிய விவரமாக மறைந்திருக்கும். அல்லது எண்ணிக்கையில் ஆறுக்கு மேற்படாத ஒரு சில குழந்தைகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்திருக்கும்" என்கிறார் விதரிங்டன்.
 
சிறியதோ பெரியதோ, வரலாற்றில் இடம்பெற்றதோ இடம்பெறாமல் போனதோ எவ்வாறாக இருந்தாலும் குய்ரினியஸின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட கி.பி. ஆறாம் ஆண்டில் குழந்தைகள் படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் மிகவும் எளிமையானது. தொடர்புடைய ஏரோது மன்னர் கி.மு. 4-ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். அதாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே. இப்போது இயேசு பிறப்பு பற்றிய தகவல் இன்னும் மங்கலாகவும் குழப்பமாகவும் ஆகிவிட்டது.
 
பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஏரோது, பெத்லஹேமில் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதன் மூலம் வரலாற்றில் இழிவான இடத்தைப் பெற்றவர். கி.மு. 37 முதல் கி.மு. 4-ஆம் ஆண்டு வரை யூதேயாவின் மன்னராக ஆட்சி செய்தவர். 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் மோசமானவராகவே கருதப்படுகிறார். ஆனால் தனது பெயருடன் குறிப்பிடப்படும் 'மகா' என்ற பட்டத்துக்கு அவர் தகுதியானவர் என்று வாதிடும் வரலாற்றாசிரியர்களும் உள்ளனர்.
 
கட்டடக்கலை, வணிகம், அரசியல் சாதுர்யம் போன்றவற்றில் அவர் சிறந்தவர் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மத்திய தரைக்கடலை நோக்கியும் சாக்கடலை நோக்கியும் பிரமாண்டமான கோட்டைகளை எழுப்பியவர் அவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் அவரது அரசவையில் நிறைந்திருந்ததாகவும், பண்பாட்டுப் பொற்காலமாக அவரது ஆட்சிக்காலம் இருந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
 
அதற்காக, நற்பெயர் இருந்துவிட்டால் அவர் கொடூரமானவராக இருந்திருக்க முடியாது என்று உத்தரவாதமில்லை. வயதுக்கு ஏற்ப அதிகரித்த பிரமை, மனத் தளர்ச்சி போன்ற குணங்கள், இறுதியில் அவரது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்வதற்கும் காரணமாகின என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
அதிசய நட்சத்திரம்
ஆனால் பெத்லகேமின் நட்சத்திரம் எப்படித் தோன்றியது? மேகி எனப்படும் மூன்று ஞானிகள் யாவர்? இந்த விவரிக்க முடியாத புதிர்களை விடுவிக்க முடியுமா? கிறிஸ்து பிறப்பு பற்றி கதைகளிலேயே இதுதான் மிகவும் அதிகமாகக் கொண்டாடப்படக் கூடியது.
 
பல நூற்றாண்டுகளாக, கல்வியாளர்கள் இந்த நட்சத்திரத்தை ஒரு வானியல் நிகழ்வுடன் இணைக்க முயன்றனர். இதன் மூலம் அந்த நாளை உறுதி செய்யலாம். 17 ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சியுடன் தொடர்புடைய முக்கிய விஞ்ஞானியான ஜோஹன்னஸ் கெப்லர், கிமு 7-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வியாழன் மற்றும் சனி கோள்களின் நேர்கோட்டு இணைப்பு நிகழ்வுகளை மூன்று ஞானிகளும் கண்டிருக்கலாம் என்று கூறினார்.
 
கிமு 5-ஆம் ஆண்டில் சீன மற்றும் கொரியர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் அல்லது நோவாவாக அந்த அதிசய நட்சத்திரம் இருக்கலாம் என்று வேறு சிலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் நிச்சயமாகத் தெரியாது.
 
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நட்சத்திரத்தை மூன்று ஞானிகள் பின்தொடர்ந்து பெத்லகேமுக்கு வந்திருந்தால் அவர்கள் யாவர்? மேகி அல்லது ஞானிகள் என்று அறியப்படும் மனிதர்கள் இயேசுவின் காலத்தில் நிச்சயமாக இருந்திருக்கிறார்கள். இயேசுவின் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்று ஆசிரியர் ஹெரோடோடஸ் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் தற்போது ஈரான் இருக்கும் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வானியல் பற்றிய அறிவும் தீர்க்கதரிசனத்தின் விளக்கமும் இருந்திருக்கிறது. இதன் மூலம் இயேசு பிறப்புக்கான 'நேரம்' என்பதை அவர்கள் அறிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
"மேகி என்பவர்கள் ஜோதிடர்களாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தனர்" என்று விதரிங்டன் கூறுகிறார். "ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது என்பதற்கு கடவுளின் அடையாளமாக அவர்கள் நட்சத்திரத்தை எடுத்திருப்பார்கள்." என்கிறார் அவர்.
 
இப்போது இயேசு பிறப்பிட தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தை நோக்கித்தான் அந்த மூன்று ஞானிகளும் சென்றார்கள் என்று பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அவர் பிறந்த இடம் கால்நடைகள் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு குகையாக இருக்கலாம் அல்லது, கீழே கால்நடைகளும் மேலே தங்குமிடமும் அமைந்திருக்கும் விவசாயிகளின் வீடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் அத்தகைய கட்டடங்கள் சிறியதாகவும், மண் பூசப்பட்ட சுவர்களுடன் இருளடைந்தும் இருந்ததாகக் கூறுகின்றன.
 
நிச்சயமாக, டிசம்பர் 25 அன்றுதான் இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைகின்றன. லூக்கா மற்றும் மத்தேயு விவரித்த நிகழ்வுகள் நடந்த துல்லியமான தேதி இது என்று இப்போது சிலர் வாதிடுகின்றனர்.
 
ஆனால் "மந்தைகளை வயல்களில் மேய்ப்பவர்கள் பற்றிய கதையைக் கொண்டு இயேசுவின் பிறப்பு உண்மையில் வசந்த காலத்தில் நடந்தது என்றே கூறலாம்" என்கிறார் விதரிங்டன்.
 
அப்படியானால், டிசம்பர் 25 என்பது கிறிஸ்மஸ் பண்டிகையின் அதிகாரப்பூர்வ தேதியாக உலகளவில் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது?
 
ஐரோப்பா முழுவதும் உள்ள மக்கள் ஒவ்வோர் ஆண்டிலும் இந்தக் காலகட்டத்தில் தங்களது கொண்டாட்டங்களுக்குப் பழகி இருந்ததே காரணமாக இருக்கலாம். கி.பி நான்காம் நூற்றாண்டிற்குள், நடுக் குளிர்காலப் பண்டிகைகள் - சூரியன் மீண்டும் தோன்றத் தொடங்கிய தருணத்தைக் குறிப்பவை- நாட்காட்டியில் அங்கமாகி இருந்தன.
 
பிரிட்டிஷ் தீவுகள், ஸ்காண்டிநேவியா, ரோம், போன்ற பகுதிகளில் இந்தக் காலகட்டத்தில் வெவ்வேறு வகையான பண்டிகைகள் வழக்கத்தில் இருந்தன.
 
ஆக, கிறிஸ்துமஸ் நாள் என்பது முழுமையான அசல் இல்லை. ஆனால் அது அற்புதமான வெற்றியைப் பெற்றது.
 
முதன்முதலில் கிறிஸ்து பிறப்பு விருந்து என்று அழைக்கப்பட்ட இந்த திருவிழா கி.பி. 432 இல் எகிப்துக்கும் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்துக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில், இது ஸ்காண்டிநேவியா வரை கொண்டாடப்பட்டது.
 
கி.பி. 800- இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று சார்லிமேன் 'ரோமானியர்களின் பேரரசராக' முடிசூட்டப்பட்ட பிறகுதான் நாட்காட்டியில் அந்த நாளின் முக்கியத்துவம் அதிகரித்தது. 1066 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெஸ்ட்மின்ஸ்டர் கோட்டையில் வில்லியம் தி கான்குவரர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்ட காலகட்டத்தில் "பண்பாட்டின் அடையாளம்" என்ற பாதையை நோக்கி விரைவாக செல்லத் தொடங்கியிருந்தது.
 
அந்தக் காலகட்டத்தில் நேட்டிவிட்டி கதையின் வரலாற்று நம்பகத்தன்மையை வெகுசிலரே சந்தேகித்திருப்பார்கள். ஆனால், இது சந்தேகத்துக்கான காலம். அணுகுமுறைகள் நிச்சயமாக மாறிவிட்டன. இருப்பினும் பெத்லகேமின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மூன்று ஞானிகள், அதிசய நட்சத்திரம் போன்றவை உண்மையா கற்பனையா என்று கண்டறிவதுதான் முக்கியமா? இல்லை இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் தெரிவிக்கும் செய்தியில் அக்கறை காட்ட வேண்டுமா ? இந்தக் கேள்விக்கான பதில், யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
 
"வரலாறும் இறையியலும் விவிலிய வரலாற்றில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இறையியல் ரீதியான எதுவும் வரலாற்று ரீதியாக உண்மையாக இருக்க முடியாது" என்று பென் விதரிங்டன் கூறுகிறார்.
 
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ வம்சாவளியின் பேராசிரியரான டாக்டர் ஹெலன் பாண்ட் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். "அந்த விவரங்கள் அனைத்தும் வரலாற்றுப்பூர்வமானது என்று நம்புவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் 2013 இல் பிபிசி ஆவணப்படம் ஒன்றில் கூறினார்.
 
"இந்தக் கதைகளின் இறையியல்தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்"

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments