Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா: வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் சத்தீஸ்கர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (10:07 IST)
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்காகவும் பிற நோய்களுக்காகவும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காததால் கடுமையான நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருக்கிறது.
 
ஆனால், இந்த நெருக்கடியான கட்டத்திலும், பிற மாநிலங்களுக்கு எந்த பிரச்னையுமின்றி சத்தீஸ்கர் மாநிலம் ஆக்சிஜன் தயாரித்து விநியோகம் செய்து வருகிறது.
 
இது எப்படி சாத்தியமாகிறது என்று மாநில முதல்வர் பூபேஷ் பாகெல்லிடம் பிபிசி பேசியபோது, "சத்தீஸ்கர் ஒரு ஆக்சிஜன் தயாரிப்பு வளம் கொண்ட மாநிலம். இங்கிருந்து தடையின்றி மத்திய பிரதேசம், ஒடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்கிறோம். ஒவ்வொரு நாளும் சுமார் 386.92 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தயாரிக்கிறோம். அதில் எங்களுடைய தேவை 160 மெட்ரிக் டன். மற்றவை வெளி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன," என்றார்.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 27 ஆலைகள், பிரஷர் ஸ்விங் எனப்படும் மருத்துவ தரத்திலான ஆக்சிஜன் தயாரிப்பவை. அவை மருத்துவனைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுகின்றன.
 
ஆனால், பெரும்பாலான திரவ நிலை மருத்துவ ஆக்சிஜன், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள பிலாய் உருக்காலையில் தயாரிக்கப்படுகிறது.
 
எப்போது தொடங்கியது உற்பத்தி?
 
பிலாய் உருக்காலையில் தயாரிப்புப் பணி 1959ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரயில்வே தண்டவாளத்துக்காக நாட்டிலேயே அதிக அளவில் 31.53 லட்சம் டன் இரும்பு தயாரிக்கும் முதன்மை ஆலையாக பிலாய் உருக்காலை உள்ளது. இது தவிர ஆக்சிஜன் உற்பத்தியிலும் இந்த ஆலை முன்னிலை வகிக்கிறது.
 
கடந்த ஆண்டு கொரோனா பரவல் நாட்டில் தீவிரமானபோது, தனது ஆக்சிஜன் உற்பத்தித் திறனை இந்த ஆலை அதிகரித்தது. இந்த ஆலையின் தரவுகளின்படி கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை 13,002 மெட்ரிக் டன் திரவநிலை மருத்துவ ஆக்சிஜன் இந்த ஆலையில் இருந்து நாட்டின் பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
அந்த காலகட்டத்தில் தெலங்கானாவுக்கு 5,921 மெட்ரிக் டன், மத்திய பிரதேசத்துக்கு 2,640 மெட்ரிக் டன், சத்தீஸ்கருக்கு 999 மெட்ரிக் டன், ஆந்திர பிரதேசத்துக்கு 665 மெட்ரிக் டன், உத்தர பிரதேசத்துக்கு 389 மெட்ரிக் டன், ஒடிஷாவுக்கு 154 மெட்ரிக் டன், கர்நாடகாவுக்கு 89 மெட்ரிக் டன் என்ற அளவில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிலாய் உருக்காலை 279.35 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது. அதே சமயம், 75.60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் வாரத்துக்கு பிந்தைய வாரத்தில் இந்த விநியோக அளவு 142.35 மெட்ரிக் டன் ஆக உயர்ந்தது.
 
இந்த விநியோக அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிய வேளையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆக்சிஜன் விநியோக அளவு, 293.12 மெட்ரிக் டன் ஆக உயர்ந்தது.
 
சமீபத்திய தரவுகளின்படி கடந்த 21ஆம் தேதி பிலாய் உருக்காலையில் இருந்து மட்டும் 364.82 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
எனினும், சொந்த மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம் என கருதப்படுவதால், வெளி மாநிலங்களுக்கு தங்கு, தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டுமா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
 
இந்த மாநிலத்தின் சுகாதார தரவுகளின்படி, கடந்த மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி 2,880 கொரோனா ஆக்டிவ் நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வீட்டுத்தனிமைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டிருந்தனர்.
 
அதன் பிறகு இரு வாரங்கள் கடந்த நிலையில், கொரோனா நோயாளிகள் உள்பட ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை 197 ஆக இருந்தது. இந்த 197 நோயாளிகளுக்கும் சேர்த்து 3.68 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது.
 
இதுவே கடந்த 15ஆம் தேதி நிலவரப்படி, ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 5,898 ஆக உயர்ந்தது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 110.30 மெட்ரிக் டன் ஆனது.
 
தொடரும் தட்டுப்பாடு - முன்னாள் முதல்வர் கேள்வி
 
இன்றைய நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் அதன் சொந்த தேவைக்கான மருத்துவ ஆக்சிஜன் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு சராசரியாக தினமும் 160 மெட்ரிக் டன், மாநில நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 
இது குறித்து முன்னாள் முதல்வர் ரமண் சிங் பிபிசியிடம் பேசுகையில், "இந்தியாவிலேயே மிகப்பெரிய உருக்காலையான பிலாய் உருக்காலை சத்தீஸ்கரில் உள்ளபோதும், இங்கும் ஏராளமான நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயரிழக்கிறார்கள். இதை கவனிக்கும்போது அரசின் அமைப்பு முறையில் குறைபாடு இருப்பதாக தோன்றுகிறது. மாநில முதல்வர் ஒரு பாதையிலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வேறு அணுகுமுறையை கொண்டிருப்பதும்தான் இதற்கு காரணம். இருவரும் அமர்ந்து பேசி திட்டமிடுவதில்லை. ஆச்சரியமளிக்கும் வகையில் முதல்வர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. அப்படியிருக்கும்போது இந்த மாநிலத்தின் சுகாதார திட்டமிடல் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அரசிடம் என்ன சுகாதார செயல்திட்டம் உள்ளது?" என்று கூறினார்.
 
ஆனால், முன்னாள் முதல்வரின் குற்றச்சாட்டை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங்தேவ் மறுக்கிறார்.
 
ரமண் சிங் முதல்வராக ஆட்சி செலுத்திய 15 ஆண்டுகளில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணி்ககை 1,242 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு அதிகரிக்கப்பட்டு தற்போது 7.042 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் மருத்துவனைகளில் உள்ளன என்று டி.எஸ். சிங்தேவ் தெரிவித்தார்.
 
மேலும், முன்பு மாநிலத்தில் வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை கொண்டதாக இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது அத்தகைய ஆலைகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்த வாரம் மேலும் 4 ஆலைகள் திறக்கப்படும். இந்திய அரசும் மாநிலத்தில் நான்கு ஆக்சிஜன் ஆலைகளை திறக்க திட்டமிட்டிருந்ததில் ஒரு ஆலையின் உற்பத்தி பணி தொடங்கப்பட்டு விட்டது என்கிறார் டி.எஸ். சிங்.
 
பிற மாநிலங்களின் தேவைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் அதேவேளை, சொந்த மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் டி.எஸ். சிங்தேவ் கூறுகிறார். தங்களுடைய பங்களிப்பாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

ஜமைக்காவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச்சூடு! திருநெல்வேலி இளைஞர் பலி!

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு: இணையத்தில் வெளியானது பாடத்திட்டம்..!

விஜய் யார் கூட வேணாலும் போகலாம்.. அதை போட்டோ எடுத்தது யாரு? கண்டுபிடிச்சு உள்ள தள்ளுவேன்! - அண்ணாமலை அதிரடி!

பயணிகள் படகுடன் மோதிய கடற்படை அதிவேக படகு! 13 பேர் மூழ்கி பலி! - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments