Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு; ஊழியர் சங்கங்கள் அதிருப்தி

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (20:37 IST)
இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்தமாக 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.


 

 
7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
 
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகை வழங்கப்படுமென்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை சீரமைக்க அமைக்கப்படும் ஊதியக் குழு 2014ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அதன் அறிக்கையில் அடிப்படைச் சம்பளத்தில் 14.27 சதவீதம் உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
 
அந்த ஊதியக் குழுவின் முடிவுகள் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை செய்த உயர்வுக்கு அதிகமாக மத்திய அரசு ஊதிய உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊதியக் குழு பரிந்துரைத்த அளவே தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.
 
அடிப்படைச் சம்பளத்தில் 14. 27 சதவீதமும் அதற்கேற்றபடி பிற படிகளும் உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக 23.6 சதவீத உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வின் மூலம், சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.


 
 
இந்த ஊதிய உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவுபிடிக்கும். தற்போது ஆரம்ப நிலை சம்பளமான 7,000 ரூபாய் இனி 18,000 ரூபாயாக இருக்கும். கேபினட் செயலருக்குத்தான் தற்போது அதிகபட்சமாக மாதம் 90,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இனி, அது 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
 
இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையில் ஊதியக் குழுப் பரிந்துரைக்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையெனினும் ஒவ்வொரு அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டிலும் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
 
ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தாங்கள் அடிப்படைச் சம்பளமாக 26,000 ரூபாயை எதிர்பார்த்ததாகவும் மத்திய அரசு தங்களிடம் 23 ஆயிரம் ரூபாய் வழங்க முடியும் என பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ஊதியக் குழுவில் பரிந்துரைத்த 18,000 ரூபாயையே அடிப்படைச் சம்பளமாக அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் துரைப் பாண்டியன்  தெரிவித்தார்.
 
இதுவரை வழங்கப்பட்ட ஊதிய உயர்வுகளிலேயே இதுதான் மிகக் குறைவான உயர்வு என்றும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால், ஜூலை 11-ஆம் தேதி காலை முதல் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் துரைப்பாண்டியன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments