Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (20:56 IST)
சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 
ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று Université Sorbonne Paris Cité பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது.
 
இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
சர்க்கரை மிகுந்த பானம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?
 
5 % அளவுக்கும் மேல் சர்க்கரை உள்ள பானங்களை சர்க்கரை மிகுந்த பானங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.
 
பழரச பானங்கள் (கூடுதல் சர்க்கரை சேர்க்காதவையும்), குளிர்பானங்கள், இனிப்பாக்கப்பட்ட மில்க்சேக், சத்து பானங்கள், சர்க்கரை கலந்த டீ அல்லது காபியும் இதில் அடங்கும்.
 
சர்க்கரைக்குப் பதிலாக பூஜ்யம் கலோரி செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த சத்து பானங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. ஆனால் புற்றுநோயுடன் தொடர்பு எதையும் காண முடியவில்லை.
 
புற்றுநோய் ஆபத்து எவ்வளவு பெரியது?
 
சர்க்கரை மிகுந்த பானங்களை தினமும் 100 மில்லி கூடுதலாகக் குடித்தால் - வாரத்துக்கு இரண்டு கேன்கள் அதிகமாகக் குடித்தால்- புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 18% அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
 
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 22 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது.
 
எனவே, அவர்கள் அனைவரும் ஒரு நாளுக்கு 100 மில்லி கூடுதலாகக் குடித்தால், மேலும் நான்கு பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் - ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
``இருந்தபோதிலும், சர்க்கரை மிகுந்த பானங்கள் குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இது சாதாரணமான நியாயமான தொடர்பாக இருக்கலாம். இதுபற்றி இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பில் உள்ள மூத்த புள்ளியியல் நிபுணர் டாக்டர் கிரஹம் வீலர் கூறுகிறார்.
 
ஆய்வின் போது கண்டறியப்பட்ட 2,193 புற்றுநோய் நோயாளிகளில், 693 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும், 291 பேருக்கு பிராஸ்டேட் புற்றுநோய் இருப்பதும், 166 பேருக்கு ஆசனவாய் புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இது உறுதியான ஆதாரமா?
இல்லை - இந்த ஆய்வுக்கு பின்பற்றப்பட்ட வழிமுறையானது, தகவல்களின் போக்கை கண்டறியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரக் கூடியதாக இல்லை.
 
எனவே, குறைவாக இதைக் குடிப்பவர்களை (ஒரு நாளுக்கு 30 மில்லிக்கும் குறைவாக) காட்டிலும், அதிகமாகக் குடிப்பவர்களுக்கு (ஒரு நாளுக்கு சுமார் 185 மில்லி) புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்து இருப்பதாக இது காட்டுகிறது.
 
சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கலாம்.
 
ஆனால், சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடான செயல்பாடுகள் (உதாரணமாக மற்றவற்றைவிட அதிகம் உப்பு மற்றும் கலோரிகள் எடுத்துக் கொள்வது) இருக்கும். அது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும். சர்க்கரை மிகுந்த பானங்களே தான் காரணமாக இருக்கும் என்று சொல்வது பொருத்தமற்றதாக இருக்கலாம்.
 
எனவே, சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உருவாக்குகின்றன என்று இந்த ஆய்வு கூற முடியாது.
 
``சர்க்கரை மற்றும் புற்றுநோய் குறித்து உறுதியான காரணத்தைச் சொல்வதாக இந்த ஆய்வு இல்லை. நாம் சர்க்கரை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் ஒட்டுமொத்த தகவல்களை அது அளிக்கிறது'' என்று டீஸ்ஸைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அமெலியா லேக் கூறுகிறார்.
 
``நமது உணவில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியமானது'' என்கிறார் அவர்.
 
இது உடல் பருமன் பற்றியதா?
சில புற்றுநோய்களுக்கு உடல் பருமன் காரணமாக இருக்கிறது. சர்க்கரை மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, எடை கூடுதவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
 
இருந்தபோதிலும், அது மட்டுமே முழுமையான விவரம் இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
 
``சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பது உடல் பருமன் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதற்கான முழு காரணத்தை அவர்கள் விளக்கவில்லை'' என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மாதில்டே டவ்வியர் பிபிசி செய்திப் பிரிவு செய்தியாளரிடம் கூறினார்.
 
அப்படியானால் எங்கே தவறு நடக்கிறது?
 
இந்தத் தொடர்பு `சுகர் கலப்பு என்ற அம்சத்தின் அடிப்படையில் இருக்கிறது' என்றும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவர்கள் காரணம் சொல்கிறார்கள் என்றும் பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
பானங்களுக்கு நிறத்தைக் கொடுப்பதற்காக சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் மற்றும் பானங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
 
இருந்தபோதிலும், இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க அந்த ஆய்வு முயற்சிக்கவில்லை.
 
``இதில் உயிரியல் ரீதியிலான சாத்தியத்தைக் கண்டறிவது சிரமமான விஷயம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு பாதிப்பு ஏற்படுபவர்களின் குழுக்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் அதுதான் தொடர்புடைய ஆபத்து என்கின்றனர். இந்த நிலையில் சாத்தியக்கூறுகளை கண்டறிவது கஷ்டம்'' என்று தேசிய சுகாதார சேவைகள் துறை உணவியல் நிபுணர் கேத்தரின் காலின்ஸ் கூறுகிறார்.
 
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கின்றனர்?
 
இதில் கண்டறியப்பட்ட விஷயங்களின் தொடர்பை அறிவதற்கு பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று Université Sorbonne Paris பல்கலைக்கழக குழுவினர் கூறுகின்றனர்.
 
``இருதய நோய்கள், அதிக உடல் எடை, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துக்கும் சர்க்கரை மிகுந்த பானங்களுக்கும் தொடர்பு இருக்கிறது'' என்று டாக்டர் டவ்வியர் கூறுகிறார்.
 
``ஆனால் நாங்கள் காட்டுபவை புற்றுநோய் ஆபத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்'' என்கிறார் அவர்.
 
சர்க்கரை மிகுந்த பானங்களுக்கு வரி விதிப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி, மேலும் ஓர் ஆதாரமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
``சர்க்கரை மிகுந்த 100 சதவீத பழரசங்கள், உள்ளிட்ட பானங்கள் குடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சத்துணவியல் துறை பரிந்துரைகளின் நியாயத்துக்கு ஆதரவு தருவதாக இந்தப் புள்ளிவிவரங்கள் உள்ளன. வரி விதிப்பது மற்றும் சர்க்கரை மிகுந்த பானங்களை மார்க்கெட்டிங் செய்வதில் வரையறைகள் தேவை என்பதற்கான காரணத்தை வலியுறுத்துவதாகவும் இது இருக்கிறது'' என்று அவர்களுடைய அறிக்கை தெரிவிக்கிறது.
 
2018 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு சர்க்கரை வரி விதித்தது. அதன்படி, சர்க்கரை மிகுந்த பானங்களைத் தயாரிப்பவர்கள் அதற்குத் தனியாக வரி கட்டியாக வேண்டும்.
 
பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?
 
``பாதிப்புக்கான காரணத்தை நிரூபிக்கும் ஆதாரம் இதில் காட்டப்படவில்லை. அறிக்கை தயாரித்தவர்களே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' என்று பிரிட்டன் மென்பான தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.
 
``சமச்சீரான உணவு என்ற வகையில் பாதுகாப்பான பானமாக மென்பானங்கள் இருக்கின்றன'' என்று அந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கவின் பார்ட்டிங்டன் கூறியுள்ளார்.
 
``உடல் பருமன் பிரச்சினையை சமாளிக்க உதவியாக இருப்பதில் மென்பான தயாரிப்புத் துறைக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதனால் தான் கலோரி மற்றும் சர்க்கரை குறைப்புக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்'' என்று அவர் சொல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments