Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (14:05 IST)
மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. உலகில் அதிக மக்கள் தொகையில்  இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?
ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ்  தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.
 
இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக  சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு  மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
 
மார்ச் 6 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு முந்தைய சில நாட்களில் நோய் கண்டறியப்பட்டது. அதில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 16 பேரும் அடங்குவர். பதற்றம் அதிகரித்து வருகிறது.
 
பள்ளிக்கூடங்களிலிருந்து அறிவுறுத்தல்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. சில இடங்களில் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால்,  அலுவலகங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
 
கடந்த வார நிலவரத்தின்படி நாட்டில் 21 விமான நிலையங்கள், 77 துறைமுகங்களில் 600,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருந்தார்.
 
அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.
 
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
 
இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில், இந்த வைரஸ் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்போது 15 பரிசோதனை  நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. போதிய எண்ணிக்கையில் N 95 முகக்கவச உறைகள் (மாஸ்க்) கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை  ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
``எதிர்பாராத வகையில் தீவிரமாக நோய் பரவ நேரிட்டால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழு அளவில் ஆயத்தமாக உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகிறோம், விழிப்புடன் இருக்கிறோம்'' என்று ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
 
இவையெல்லாம் நம்பிக்கையான விஷயங்களாக இருக்கின்றன. ஆனாலும் தீவிரமாக நோய் பரவினால், அதைத் தடுக்க இவை போதுமானதாக இருக்காது என்று  கூறப்படுகிறது.
 
முதலில், விமான நிலையங்கள், துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்தாலும், எந்த அளவுக்கு இதன் தொற்று பரவியிருக்கும் என்பது தெளிவாகத்  தெரியாது. வைரஸ் பெருகி நோயாக வெளிப்படுவதற்கான காலம் - தொற்று பரவி அறிகுறிகள் தென்படுவதற்கு இடைப்பட்ட காலம் - 14 நாட்கள் வரை இருக்கும்  என்கின்றனர். அது 24 நாள் வரைகூட ஆகலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளின் போது நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று ஊருக்குச் சென்றவர்கள், தொற்று பரவி  அதை தங்களுடைய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. ``விமான நிலையத்திற்கு வந்து சேருபவர்களுக்கு மருத்துவப்  பரிசோதனை செய்வது நல்ல விஷயம். அதைத் தொடர வேண்டும். ஆனால், இப்போது அது மட்டும் போதாது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள நடைமுறைகள் மூலமாக, வேறு சில கண்காணிப்பு நடைமுறைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்'' என்று உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா  சுவாமிநாதன் கூறுகிறார்.
 
பொது சுகாதார வசதிகள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தாலும், போலியோவை ஒழித்ததில் மற்றும் 2009ல் பறவைக்காய்ச்சல் தொற்று நோயை சமாளித்ததில்,  மிக சமீபத்தில் நடந்த உயிர்பலி வாங்கும் நிபா வைரஸ் தீவிர தாக்குதலை சமாளித்தது ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.  இந்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட தேசிய போலியோ கண்காணிப்புத் திட்டம் (NPSP), சமுதாய கண்காணிப்பு மற்றும் நேரடி  தொடர்பு பரிசோதனை என்ற செயல்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இப்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந்த இரண்டு  செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. (சுகாதார அலுவலர்கள் சுமார் 450 பேரை தொடர்பு கொள்கின்றனர் என்றும் அதில் 3 மாநிலங்களில் ஐந்து இந்தியர்களுக்கு  கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்)
 
இந்தியாவில் போதிய அளவில் முகக்கவச உறைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.
 
இந்தியாவில் சளிக் காய்ச்சல் கண்காணிப்புக்கான திட்டம் உள்ளது - H1N1 உள்ளிட்டநான்கு வகையான ப்ளூ வைரஸ்கள் இங்கே காணப்படுகின்றன. ப்ளூ  காய்ச்சலுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்ட பல மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை வழக்கமாக குளிர்பருவத்தில் காணப்படும் என்றாலும்,  இந்தியாவின் கோடை மற்றும் மழைக் காலங்களிலும் மக்களைத் தாக்குகிறது.
 
வைரஸ் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்த நபர்கள் மூலம், சமுதாயத்தில் அடுத்த நிலையில் இந்த வைரஸ் பரவுகிறதா என்பதை, இந்த  சளிக் காய்ச்சல் கண்காணிப்புத் திட்டம் மூலம் கண்காணிக்கலாம் என்று நச்சுயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ``இதற்கு முன்பு இப்படி செய்திருக்கிறோம்.  மீண்டும் அதுபோல செய்ய முடியும். நம்மால் விரைவாக மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும். அது சாத்தியமானது.பெரும்பாலான கொவிட் -19 தொற்றுகள்  லேசானவை'' என்று டெல்லியை சேர்ந்த தொற்று நோய்கள் துறை வல்லுநர் லலித் காந்த் கூறுகிறார்.
 
மற்ற சவால்கள்
 
எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், இந்தியாவுக்கு வேறு சவால்கள் இருக்கும். இங்குள்ள பொது சுகாதார வசதியின் தரம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக  உள்ளது. இப்போதுள்ள மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவச  உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீவிரமாக நோய் பரவினால்,  அதை சமாளிக்க இந்தியா போராட வேண்டியிருக்கும் என்று நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறுகிறார்.
 
``நாம் இன்னும் நமது நாட்டில் 21வது நூற்றாண்டுக்கான சுகாதார மேலாண்மை நடைமுறையை உருவாக்கவில்லை. எனவே, அந்த இடைவெளியின் பாதிப்பை  எதிர்கொண்டாக வேண்டியிருக்கும்'' என்று scroll.in - இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
 
மக்களை கூட்டமாக தனிமைப்படுத்துவது மற்றும் சீனாவை போல பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிப்பது ஆகியவை இந்தியாவில்  சாத்தியமானதாக இருக்காது. அதற்குப் பதிலாக `இந்தியா வழியிலான தீர்வு' ஒன்றை நச்சுயிரியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். உரிய காலத்தில் வைரஸ்  பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதி செய்துவிட்டால், லேசான தொற்று பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்யலாம்; தீவிர  நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கலாம் என்பதாக அந்தத் திட்டம் உள்ளது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நிலைகளில்  அவசரகால செயல்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகளில் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் இதில் முக்கிய கவனம் செலுத்த  வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது
 
ரயில்வே சமையல் அறைகளில், மாஸ்க் அணிந்த சமையலர்கள் உணவு தயாரிக்கின்றனர்.
 
சுகாதார சேவை தகவல் தொகுப்பு முழுமையானதாக இல்லை என்பதும் கவலைக்குரியதாக உள்ளது: மரணங்கள் மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களைப் பதிவு  செய்வதில் கூட இந்தியாவின் செயல்பாடு போதிய அளவுக்கு இல்லை - 77 சதவீத மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மரணத்துக்கான காரணத்தை டாக்டர்கள்  பல சமயங்களில் தவறாகக் கணிக்கிறார்கள் என்று டொரன்டோவை சேர்ந்த குளோபல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது சளி காய்ச்சல்  தொடர்பான மரணங்கள் பற்றி சிறு சிறு துண்டுகளாக மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன.
பழங்கதைகளும், தவறான எண்ணங்களும்
 
சமூக வலைதளங்கள் மூலம் பரவும் புரளிகள், பழங்கதைகள் மற்றும் தவறான எண்ணங்கள் இந்தத் தொற்று பற்றிய எதிர்வினையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
முகநூலுக்கு சொந்தமான வாட்ஸப் மூலம் வைரலாகப் பரவி வரும் ஒரு தகவலில் - பூண்டு, இஞ்சி, வைட்டமின் சி மற்றும் எலுமிச்சை ஆகியவை இந்த வைரஸ்  தாக்காமல் பாதுகாப்பைத் தரும் என்று சொல்கிறது என்று உண்மை கண்டறியும் Alt News Science தளத்தின் ஆசிரியர் சுமையா ஷேக் தெரிவித்தார்.
 
``இது சிக்கலானது அல்ல என்பதால் இதுதான் மிகவும் வைரலான வாட்ஸப் தகவலாக உள்ளது. ஏனென்றால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இது  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் `பெரிய மருந்து கம்பெனி ஏமாற்று வேலைகளை' முறியடிப்பதாக உள்ளன. எளிதில் கிடைக்கும் பொருட்களைக்  கொண்டோ அல்லது இயற்கை தீர்வுகள் மூலமோ மக்கள் தாங்களாக சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது என்று மருந்து நிறுவனங்கள் கூறும்'' என்று டாக்டர் ஷேக்  கூறுகிறார்.
 
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், அரசின் ஒரு துறை ஒரு ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல்  தடுப்பதற்கான இந்திய நாட்டின் ``மருந்து'' என்று அது குறிப்பிட்டுள்ளது.
 
யோகா செய்யலாம், கஞ்சா பயன்படுத்தலாம், பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் உட்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் வேகமாகப் பரவுகின்றன.  இதுபோன்ற அறிக்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் தரக் கூடாது என்று ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கைகளைக் கழுவுதல், உடல் ஆரோக்கியத்தைப்  பேணுதல், அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவமனையை நாடுதல் என்ற எளிமையான முன்னெச்சரிக்கை விஷயங்களை கடைபிடிக்குமாறு அவர்  வலியுறுத்தியுள்ளார்.
 
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்படுகின்றன.
 
இந்தியா விரைவாக செயல்பாட்டு திட்டத்தை உருவாக்கி, வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த - 24 மணி நேர ஹாட்லைன்கள் ஏற்படுத்தி, உதாரணமாக, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.
 
``நோயின் தீவிரத்தன்மை மாறி வரும் நிலையில் அதற்குப் பொருத்தமான வகையில், ஆதாரங்களின் அடிப்படையிலான, மதிப்பிடப்பட்ட பயன்கள் குறித்த விரைவான திட்டமிடல் தேவைப்படுகிறது. பரந்த நாடு என்ற வகையில், செயல்பாடுகளும் முடிவுகளும் பரவலாக்கப்பட வேண்டும், ஆனால் நன்கு ஒருங்கிணைப்பு  செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.
 
பதற்றம் கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார். ஆனால், இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக்  கட்டுப்படுத்துதல் விஷயத்தில் இந்தியா மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments