Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (21:23 IST)
உன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சென்ற கார் மீது லாரி மோதியதில் அவருடன் பயணித்த உறவினர் இருவர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இந்த விபத்து நடந்தது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்குரைஞரும் விபத்தில் பெற்ற காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
விபத்துகுள்ளான பெண் உன்னாவ், பாங்கர்மவு தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு குற்றம்சாட்டியவர்.
 
மாகி கிராமத்தில் தமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுமியை வன்புணர்வு செய்ததாக குல்தீப் சிங் மீது புகார் எழுந்தது. அவர் அதற்காக சென்ற ஆண்டு ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த விபத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி, "வன்புணர்வுக்கு உள்ளான பெண் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை எந்த அளவு முடிந்துள்ளது? குற்றம் சாட்டப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் இன்னும் பாஜகவில் ஏன் நீடிக்கிறார்?" என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இன்னொருபுறம் காவல் துறை தலைமை இயக்குனர் ஒ.பி.சிங், "நாங்கள் இந்த விபத்து தொடர்பாக நடுநிலையாக விசாரணை நடத்தி வருகிறோம். முதல் கட்ட விசாரணையில் இது அதிக வேகமாக வண்டி ஓட்டியதால் நடந்த விபத்து என்று தோன்றுகிறது. எதிரே வந்த லாரி ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளோம். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் விரும்பினால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
 
உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவேந்திர பிரசாத் வர்மா, "உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது உறவினர் இருவர் மற்றும் அவர்களது வழக்கறிஞர் அனைவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரி மோதியதாக தகவல் வந்தது" என பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"இந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தி மற்றொருவர் சித்தியின் தங்கை. இந்த சம்பவத்தில் அந்த பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு லக்னோ ட்ராமா சென்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உன்னாவ் காவல்துறை அந்த பெண்ணின் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்துகொண்டிருக்கிறது." எனவும் கூறினார்.
 
குரபக்ஷங்கஜ் காவல் நிலைய அதிகாரி, "முதலில் ட்ரக் ஓட்டுநர் தப்பினாலும் பிறகு அவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என அவர் கூறினார்.
 
ரேபரேலியை சேர்ந்த செய்தியாளர் அனுபவ் ஸ்வரூப் யாதவின் கூற்றுபடி, இவர்களை விபத்துக்குள்ளாக்கிய ட்ரக்கின் நம்பர் ப்ளேட் கருப்பு பெயிண்டால் சிதைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ரேபரேலி காவல்நிலைய அதிகாரி சுனில் சிங்கிடம் கேட்டபோது, தடவியல் நிபுணர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த குடும்பத்தின் விருப்பப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
 
யார் இந்தப் பெண்?
 
குல்தீப் சேங்கர்
உன்னாவ் சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது ஜூன் 2017ல் வன்புணர்வு குற்றச்சாட்டு எழுந்தது.
 
பாதிக்கப்பட்ட சிறுமி, தான் தன் உறவினருடன் வேலைக்காக குல்தீப் சேங்கர் வீட்டிற்கு சென்ற போது தன்னை வன்புணர்வு செய்தார் என குற்றம் சாட்டினார். அந்த சிறுமிதான் இவர் என்பது ரேபரேலி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரியாது.
 
இந்த வழக்கில் அப்போது அவரின் குற்றச்சாட்டை காவல் நிலையம் ஏற்க மறுத்தது. இதனால் அந்த குடும்பம் நீதிமன்றத்தை நாடியது.
 
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாது என தாங்கள் மிரட்டப்பட்டதாக பெண்ணின் தரப்பினர் கூறினார். ஏப்ரல் 2018ல் இந்தப் பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சேங்கர் பெண்ணின் தந்தையைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
அந்த பெண்ணின் தந்தை இறப்பதற்கு முன்னால் இருந்த ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் அதுல் சேங்கர் உள்ளிட்டவர்களால் தாக்கப்படுவதாகத் தெரிந்தது.
 
அதன் பின் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குல்தீப் சிங்கை கைது செய்தது.
 
அரசியல் சர்ச்சைகள்
 
கடந்த வருடம் இந்த பாலியல் வழக்கு அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் , குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்று கூறினார்.
 
ஜூன் 2019 ல் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் சீதாப்பூர் மாவட்ட சிறையில் குல்தீப் சிங் சேங்கரை நேரில் சென்று சந்தித்தது சர்ச்சையானது.
 
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மகாராஜ், "இந்த தேர்தலுக்கு பிறகு அவரை சந்தித்து நன்றி கூற எண்ணினேன் அதனால் சந்தித்தேன்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

போர் விமானம் தயாரிப்பவர்கள் முட்டாள்கள். எலான் மஸ்க் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்