Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசுரவதம்- திரை விமர்சனம்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (16:52 IST)
மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு, மிரட்டல், கொலை என ஒரே நேர்கோட்டில் துவக்கத்திலிருந்து முடிவுவரை பதற்றமாகவே செல்லும் த்ரில்லர் வகை திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படியான ஒரு முயற்சிதான் அசுரவதம். கொடிவீரனில் சற்று சறுக்கிய சசிக்குமார், இதில் அந்தச் சறுக்கலை சரிசெய்ய முயன்றிருக்கிறார்.



திண்டுக்கல்லில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் சமையனுக்கு ஒரு நாள் காலையில் "மிஸ்டு கால்" வருகிறது. திருப்பி அழைத்தால் பேச முடியவில்லை. பிறகு ஒருவழியாக பேச ஆரம்பிக்கும் அந்த மறுமுனை நபர், ஒரு வாரத்திற்கு பிறகு அவனைக் கொல்லப்போவதாகக்கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறான். ஏற்கனவே மனைவி சண்டைபோட்டுவிட்டு, மாமனார் வீட்டிற்குப் போயிருக்கும் நிலையில், ஒரு வாரத்திற்கு பைத்தியமாகும் அளவுக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறான் சமையன். அடியாட்களையெல்லாம் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்கிறான். முடிவில் சமையன் கொல்லப்படுகிறானா, கொன்றது யார், ஏன் கொல்கிறார்கள் என்பது மீதிக் கதை.


தொடர்ந்து 'மிஸ்டு கால்' வருவது, பிறகு பேச ஆரம்பிக்கும் அந்த மர்மக் குரல் சட்டையை ஒழுங்காக அணியும்படி சொல்வது, ஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவாய் என மிரட்டுவது என முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்காரவைப்பதோடு, படம் செல்லவிருக்கும் திசையையும் சுட்டிக்காட்டிவிடுகிறார் இயக்குனர் மருது பாண்டியன்.



சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற தனது முதல் படத்திலேயே கவனிக்கவைத்த இந்த இயக்குனர், இந்த சில காட்சிகளின் மூலம் ஒட்டுமொத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

முற்பாதியில் த்ரில்லராகத் துவங்கிய படம், பிற்பாதியில் ஒரு பழிவாங்கும் கதையாக விரியும்போது முதல் பாதியில் இருந்த கச்சிதம் மெல்ல மெல்ல குலைகிறது. முடிவில் வழக்கமாக கதாநாயகன் ஐம்பது பேரை அடித்துப்போட்டுவிட்டு, பிறகு சமையனையும் கொல்வதோடு முடிகிறது படம். இப்படி எல்லோரையும் அடித்துப்போட்டுவிட்டு, கொலைசெய்யப்போகிறார் என்றால், கிடைத்த முந்தைய வாய்ப்புகளிலேயே அதைச் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

தன்னுடைய குழந்தையை, பலாத்காரம் செய்து கொன்றவனை பழிவாங்க நினைக்கும் தந்தை குற்றவாளியிடம் இப்படி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பானா என்பது இந்தப் படத்தில் எழும் முக்கியமான கேள்வி. தவிர, கதாநாயகனால் மிரட்டப்படுபவன், யாராலும் நெருங்க முடியாத, வெல்ல முடியாத நபர் என்றால் அந்த மிரட்டலுக்கும் சித்ரவதைக்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.



கிடாரியில் அப்படிதான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு சிறிய கடை வைத்திருக்கக்கூடிய, எப்போதும் பிரச்சனையில் இருக்கும் ஒரு நபரை, முதலிலேயே கதாநாயகன் ஏதாவது செய்திருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. பிறகு, வழக்கம்போல கதாநாயகனுக்கு அழகான மனைவி, குழந்தை, அந்த அழகான குடும்பத்தின் மீது நடத்தப்படும் வன்முறை என்று ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகளே வர ஆரம்பிக்கும்போது, முதல் காட்சியில் எழுந்த எதிர்பார்ப்பு முற்றிலும் காலியாகிவிடுகிறது.


ஜாதிச் சாயம் பூசிய கதைகளிலேயே பெரும்பாலும் நடித்துவந்த சசிக்குமார், கிடாரி பாணியில் ஒரு த்ரில்லரை கையில் எடுத்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஆனால், கிடாரியில் இருந்த நுணுக்கமும் கச்சிதமான திரைக்கதையும் இதில் இல்லை. அதிலும் குறிப்பாக ஃப்ளாஷ்பேக்கிற்குப் பிறகு வரும் காட்சிகள், ஒரு வழக்கமான பழிவாங்கும் படத்திற்கே உரிய காட்சிகளாக அமைந்துவிடுகின்றன.

சமையனாக நடித்திருக்கும் வசுமித்ரவுக்கு இது குறிப்பிடத்தக்க படம். முதல் காட்சியில் எப்படி குழப்பமான, பதற்றமான மனிதராக அறிமுகமாகிறாரோ, அதே பதற்றத்தை படம் முடியும்வரை முகத்தில் தக்கவைத்திருக்கிறார். அவரது மனைவியாக நடிக்கும் ஷீலா, ஒரு ஆச்சரியமூட்டும் புதுவரவு.

எல்லாப் படங்களிலும் வருவதைப்போல இந்த பழிவாங்கும் படலத்திலும் அசால்டான, வேடிக்கையான முகபாவத்துடன் சசிகுமார் வருகிறார். அது பல சமயங்களில் படத்தில் இருக்க வேண்டிய இறுக்கத்தைக் குறைத்து, ஒன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளிலேயே வரும் நந்திதாவிடம் குறை சொல்ல ஏதுமில்லை.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள், இரண்டு பேர். ஒருவர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர். இரண்டாமவர் இசையமைப்பாளர் கோவிந்த். தனது கேமரா கோணங்களின் மூலமாகவே திகிலையும் பதற்றத்தையும் பார்வையாளர்களர்களிடம் கடத்துகிறார் கதிர். திரைக்கதையில் இருக்கும் பிரச்சனைகளையும் மீறி பார்வையாளர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது கோவிந்தின் பின்னணி இசை.

பாடல்கள் பெரிதாக இல்லாதது, திரைக்கதையோடு இணைந்த நகைச்சுவை ஆகியவை படத்தின் பிற பலமான அம்சங்கள். த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments