Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி - பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (11:12 IST)
இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
 
இலங்கையில் கோவிட்-19, 3ஆவது கொத்தணி மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், சீன உயர்மட்ட தூதுக்குழுவொன்று கடந்த 8ஆம் தேதி இரவு இலங்கையை அவசரமாக வந்தடைந்தது.
 
பி.சி.ஆர் பரிசோதனை தவிர்த்த வேறு எந்தவொரு தனிமைப்படுத்தல் சட்டங்களும் இந்த விசேட தூதுக்குழுவிற்கு அமலாக்கப்படாத நிலையில், அந்த குழுவின் உறுப்பினர்கள் நேரடியாகவே நாட்டிற்குள் பிரவேசித்திருந்தனர்.
 
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தலைமையிலான குழுவொன்றே இவ்வாறு நாட்டிற்கு வந்திருந்தது.
 
இவ்வாறு இலங்கையை வந்தடைந்த குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை கடந்த 9ஆம் தேதி நடத்தியிருந்தனர்.
 
இரு நாட்டு உறவுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், கொரோனா விவகாரங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக  ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இலங்கைக்கான சீன தூதரகத்தினால் நேற்றைய தினம் விசேட அறிக்கையொன்று ஊடகங்களுக்கு வெளியிட்டது.
 
அந்த அறிக்கையில் இலங்கைக்கு சீனாவினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையே இவ்வாறு  கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் வன் ஷியாஒடாமி மற்றும் இலங்கை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கடந்த 9ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை மதிப்பில் 16.5 பில்லியன் ரூபாய் நிதித் தொகை, உதவியாகவே வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொண்டுள்ள இந்த காலப் பகுதியில் கிராமிய பகுதிகளிலுள்ள மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியில், வெளிநாடொன்றினால் வழங்கப்பட்ட அதிக்கூடிய தொகையாக இது அமைந்துள்ளது.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் நடத்தப்பட்ட காணொளி ஊடாக கலந்துரையாடலின் போது, இந்தியாவினால் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க இணக்கம் எட்டப்பட்டிருந்தது.
 
இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த நிதியுதவி வழங்க இணக்கம் எட்டப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
 
இவ்வாறான பின்னணியிலேயே சீனாவினால் 16.5 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
பொருளாதார நிபுணர்களின் பார்வை
 
இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியுதவியானது, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு ஒத்துழைப்பாக அமையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து, வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக்கொள்ள முடியாத  இவ்வாறான நிலையில், நிதியுதவியொன்று கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறுகின்றார்.
 
சீனாவின் இந்த உதவியினால் இலங்கையின் அந்நிய செலாவணிக்கான இருப்பு தற்போது அதிகரித்துள்ளதாக கூறும் பேராசிரியர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு அந்த தொகை பாரியளவில் உதவியாக இருக்கும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கான வருமானம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவடைந்துள்ளமையினால், அரசாங்கத்தின் கையிருப்பு தற்போது பாரியளவில் குறைவடைந்துள்ள பின்னணியில், சீனாவினால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவி காரணமாக அரசாங்கத்தின் நிலுவை அதிகரிப்பதற்கான சாத்தியம்  ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராம பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த உதவித்திட்டம் பாரியளவில் பங்களிப்பு செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
 
இந்த உதவித்திட்டமானது, எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு சாதகமாகவே அமையும் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
எனினும், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட உயர்மட்ட குழுவினர், அரசாங்கத்துடன் எவ்வாறான விடயங்களை கலந்துரையாடி, இந்த உதவித் திட்டத்தை வழங்கியுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாமையினால் அது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
சீனாவினால் வழங்கப்படுகின்ற இந்த உதவித்திட்டத்திற்கு பதிலாக, இலங்கை சீனாவிற்கு எவ்வாறான விடயங்களை மீள செய்ய வேண்டும் என்பது தொடர்பிலான தெளிவின்மை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்திற்கு, மாற்றீடாக இலங்கை ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற உடன்பாடு இருக்குமேயானால், அது எதிர்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பேராதனை பல்கலைக் கழகத்தின் பொருளியல் பீடத்தில் பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments