Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஜி : ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் துவங்கின

2 ஜி : ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் துவங்கின
, திங்கள், 1 பிப்ரவரி 2016 (18:42 IST)
இந்தியாவில் செல்லிட தொலைபேசிகளுக்கான இரண்டாம் தலைமுறை அலைகற்றை (2-ஜி) ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலான இறுதி வாதங்கள் இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளன.
 

முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா
 
டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் சிபிஐ தரப்பிலான இறுதி வாதம் முடிவடைந்துள்ள சூழலில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
 
இதற்காக இன்று டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கில் ஆஜராகினர்.
 
2 ஜி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கனிமொழியின் மனு 3 மாதங்களுக்கு முன்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று தள்ளுபடிசெய்யப்பட்டது.
 
கனிமொழியின் மனு போன்ற, அதே கோரிக்கைகளை கொண்டிருந்த ஷாஹித் பல்வாவின் மனுவும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
 
முன்னதாக, இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவும் உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தள்ளுபடி செய்தது.
 
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தனித்தனியாக தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
 
சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் இவர்கள் தரப்பு இறுதி வாதங்களில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுவதற்கான வாதத்தை மீண்டும் முன்வைப்பார்கள்.
 
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த வழக்கின் இறுதி வாதங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
 
கலைஞர் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் ரூ. 200 கோடி பணம் வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil