Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?
, வியாழன், 18 மார்ச் 2010 (13:23 IST)
இன்றைக்கு பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிடரின் ஆலோசனையை மக்கள் நாடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி/விஷயம் ஏதாவது இருக்கிறதா? அல்லது ஜோதிடத்தில் சொல்லக் கூடாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?

பதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை கேட்கக் கூடாத கேள்வி அல்லது சொல்லக் கூடாத விஷயம் என்று எதுவும் கிடையாது. ஜாதகத்தைக் கொண்டு வருபவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் கிரக நிலைகளை ஆராய்ந்து உண்மையான பதிலைக் கூறுவதே ஜோதிடரின் கடமை.

என்னைப் பொறுத்தவரை ஜாதகம் பார்க்க வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முதலில் கருத்தில் கொள்வேன். சில வருத்தமான விஷயங்களை தாங்கும் மனப்பக்குவத்தை அவர் பெற்றுள்ளாரா? சந்தோஷமான செய்தியையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று யோசிப்பேன். அதன் பின்னரே எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் கூறுவேன்.

ஒரு ஜோதிடரைப் பொறுத்தவரை பலன் கூறுவது என்பது வாய்ச்சொல்; ஆனால் ஜாதகரைப் பொறுத்தவரை அது தலைச்சுமை என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது நாம் பலன் கூறிவிட்டு முடித்துக் கொள்வோம். ஆனால் அதில் உள்ள நல்லது, தீயவைகளை அவர்கள் மனதளவில் ஏற்று நினைவில் (தலையில்) வைத்துக் கொள்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் என்னிடம் வந்திருந்த தம்பதி தங்கள் குழந்தையின் ஜாதகத்திற்கு தற்போது என்ன பலன் எனக் கேட்டனர். அந்தக் குழந்தையின் (6 வயது) ஜாதகத்தை பார்த்த பின்னர் அவர்களிடம் பேசிய நான், “இந்தக் குழந்தையால் நீங்கள் பிரிய (விவாகரத்து) நேரலாம” என்றேன்.

உடனே அந்தப் பெண்ணின் கணவர், “எந்தக் காரணத்திற்காக நாங்கள் பிரிய நேரிடும் எனக் கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “தவறாக நினைக்காதீர்கள். உங்களுக்கு மனைவி மீது சந்தேகம” என்றேன். உடனே அவரது மனைவி கதறி அழத்துவங்கி விட்டார்.

ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய அந்தப் பெண், “இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது எனக் கடந்த 5 ஆண்டுகளாகவே என்னிடம் கேட்டு, என்னை மனதளவில் சித்ரவதை செய்கிறார். ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனி மனிதர்களாகவே வாழ்கிறோம். உலகிற்கு மட்டும் நாங்கள் தம்பதிகள். வீட்டிற்குள் எதிரிகள் போல் இருக்கிறோம” என்று தன் மனதில் உள்ளவற்றைக் கொட்டினார்.

ஜோதிட ரீதியாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னம்/லக்னாதிபதி அல்லது சந்திரனை குரு பார்த்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை அவருடையதுதான் என உறுதியாகக் கூற முடியும். இதேபோல் பூர்வ புண்ணியாதிபதியை குரு பார்த்தாலும் அந்த ஜாதகர் குழந்தையின் பிறப்பில் களங்கம் இருக்காது. இதுபோல் பல வகையான அமைப்புகள் மூலம் ஒரு குழந்தை அந்த ஜாதகருக்குதான் பிறந்தது என்று ஜோதிட ரீதியாக உறுதிபடக் கூறிவிட முடியும்.

அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அந்தக் கணவர்தான் தந்தை என்பதை அவரது மனதில் பதியும்படி, சில நிகழ்வுகளைக் கூறி (குழந்தை பிறந்த பின்னர்) அதுபோன்று உங்கள் வாழ்வில் நடந்ததா? எனக் கேட்டேன். சிறிது தயக்கத்திற்குப் பின்னர் நான் கூறிய நிகழ்வுகள் நடந்ததாக ஒப்புக் கொண்டதுடன், குழந்தையும் தன்னுடையதுதான் என்று வாய் விட்டுக் கூறினார்.

பிரச்சனை முடிந்தது என்று அவர்களை உடனடியாக அனுப்பிவிடாமல், தம்பதிகளை மனம்விட்டுப் பேசச் செய்து, அவர்களிடையே இருந்த மனக்கசப்பை நீக்கி அவர்களை அனுப்பி வைத்தேன்.

மற்றொரு சம்பவம்: சில மாதங்களுக்கு முன் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்துக் கொண்டு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பேத்திக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், வரன் எப்படி அமையும் எனத் தெரிந்து கொள்ள வந்ததாகவும் என்னிடம் தெரிவித்தார்.

பேத்தியின் ஜாதகத்தைக் கணித்ததில் அவருக்கு 2 முறை திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலோட்டமாக பதில் சொல்லிவிட்டு, பெண்ணின் தந்தை இங்கே வரச் சொல்லுங்கள் என்று பாட்டியிடம் கூறினேன்.

அதற்கு அந்தப் பாட்டி சற்று பதற்றமாக, “ஏன் ஏதாவது என்னிடம் சொல்லக் கூடாத பிரச்சனை இருக்கிறதா?” என்று கேட்டார்.

மணமகனைப் பார்க்கப் போவது தந்தைதான். எனவே அவரிடம் சில விஷயங்களைத் தெரிவித்தால் மாப்பிள்ளைத் தேர்வுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி சமாளித்து அனுப்பினேன். நான் அழைத்தது போல் அந்தப் பெண்ணின் தந்தையும் ஓரிரு நாட்கள் கழித்து என்னைச் சந்தித்தார்.

அப்போது அவரது மகளின் தற்போதைய ஜாதக நிலையைக் கொண்டு பார்க்கும் போது 2 திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதையும், அதனைத் தவிர்க்க வேண்டும் என விரும்பினால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைப் பரிகாரங்களையும் கூறினேன். அதாவது வசதியான குடும்பத்தில் உள்ள அந்தப் பெண்ணுக்கு வசதி குறைந்த இடத்தில் மாப்பிள்ளை பார்த்தால் பரிகாரமாக அமையும் என்றேன். அதனை அரைமனதுடன் அப்பெண்ணின் தந்தை ஏற்றுக் கொண்டார். இதே விஷயத்தை அந்தப் பெண்ணின் பாட்டியிடம் நான் கூறியிருந்தால் அவரது மனம் அதனைத் தாங்காது.

எனவே, அந்தக் காலத்தில் ஒளிவு மறைவாக இருந்த விடயங்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அந்த வகையில் ஜோதிட பலன்களைக் கூறுதிலும் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிப்பதே ஜோதிடரின் கடமையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil