ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2009 (17:46 IST)
குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று குரு பெயர்ச்சி பலன்களில் கூறியிருந்தீர்கள். மனிதர்கள் அனைவரும் 12 ராசிகளில் அடைபட்டாலும், அவரவர் ஜனன ஜாதகத்தில் குரு சிறப்பாக அல்லது மோசமாக இருக்கும்.

இதில் சிறப்பாக இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுகின்றனர். ஆனால் ஜாதகத்தில் குரு மோசமாக அமைந்தவர்கள் அதனால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து தப்பிக்க பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?

பதில்: குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார்.

அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புக்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது.

பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.

அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.

மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments