தமிழ்.வெப்துனியா.காம்: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் அகில இந்தி அளவில் பார்த்ததைவிட, தமிழ்நாடு அளவில் பெரிதாகப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஜாதகம் என்று வைத்துப் பார்த்தால், அந்தக் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 63 என்பதே எண் ஜோதிடப்படி புதிரான எண். 6 சுக்ரனுடையது, 3 குருவினுடையது. சுக்ரன் என்றால் அது அசுரர்களின் தலைவன். குரு என்றால் அது தேவர்களின் தலைவன். இந்த இரண்டு எண்களுக்குரிய கிரகம் ஒன்றுக்கொன்று மோதல் போக்குடையது. ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் கூட்டு எண்ணிக்கை என்று பார்க்கும் போது 9 வருகிறது. அதுவும் சிக்கலிற்குரியது.
63 என்ற எண்ணையே எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதற்காகச் சொல்வார்கள். தொகுதி ஒதுக்கீட்டைப் பார்க்கும் போதே அது எதிர்மறையானதை உண்டாக்குகிறது. அப்படி பார்க்கும் போது சொற்ப எண்ணிக்கையில்தான் இவர்கள் வெற்றி வாய்ப்பை சந்திக்க நேரிடும். ஏனென்றால் தலைமையுனுடைய ஜாதகம் மிகவும் கடுமையாக இருக்கிறது. தலைமை என்றால் சோனியா. அகில இந்திய கட்சி என்பதால் நாம் அவரைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவருக்கு தற்போது சனி 4வது வீட்டில் இருக்கிறார். அவர் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். அவருக்கு தற்போது கண்டகச் சனி, 4வது இடத்துச் சனி அர்த்தாஷ்டம சனி நடக்கிறது. அதாவது சின்ன அவமானங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள், மன உளைச்சல்கள் போன்றெல்லாம் தரக்கூடிய காலகட்டம். இது 21.12.2011 வரைக்கும் இருக்கு 4வது இடத்தில் சனி இருக்கும்.
இந்த அமைப்பையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் சொற்ப இடங்களில்தான் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.