Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 12

Webdunia
புதன், 11 ஜூலை 2012 (18:19 IST)
கைலாஷ ்!

சத்சங்கம் தொடர்ந்தது. ஆன்மிகக் கலாசாரத்தைப் பற்றி சத்குரு பேசத் தொடங்கியவுடன் நாங்கள் மிகவும் ஆர்வமானோம்.

WD
‘‘தென்னிந்தியாவில் ஆன்மிகக் கலாசாரத்தை உருவாக்கியவர்களை நீங்கள் மனிதர்கள் என்றே நினைக்க முடியாது. நான் இப்படிச் சொல்வதால், மனிதர்கள் குறைந்த திறனுள்ளவர்கள் என்று அர்த்தமல்ல. மனிதர்கள் தங்களைத் தாங்களே ஓர் எல்லைக்குள் அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால், தென்னிந்திய ஆன்மிகத்துக்குக் காரணமானவர்கள் தங்களை எல்லைக்குள் அடக்கிக்கொள்ளாமல் அதைத் தாண்டிச் சென்றவர்கள். குறிப்பாக அகஸ்தியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அற்புதமான பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

அகஸ்தியர் மிகமிகத் திறமையானவர், 4000 வருடங்களுக்கும் மேலாக உடலுடன் வாழ்ந்தவர். ஏனெனில், அவ்வளவு வேலைகளை எடுத்துக் கொண்டு இருந்தார், எனவே அத்தனை காலம் அவர் வாழ வேண்டியிருந்தது. அவரை நீங்கள் மனிதர் என்றே அழைக்க முடியாது, இல்லையா?

அகஸ்தியரின் முறை உடல், மனம் மற்றும் சக்திநிலை ஆகியவற்றை மட்டுமே கையாள்கிறது. அதை மட்டுமே கையாண்டு அனைத்தையும் செய்ய முடிகிறது. சடங்குகள் எதுவும் கிடையாது. ஆனால் காஷ்மீரி சைவத்தில் நீங்கள் பை நிறைய கடவுள்களை வைத்திருக்க வேண்டும். ஆனால், அகஸ்தியக் கலாசாரத்தில் நீங்கள் நிர்வாணமாக இருந்தாலும் ஒன்றையும் இழக்கவில்லை, ஏனெனில், அனைத்துக் கருவிகளும் உங்களுடனேயே இருக்கின்றன. எனவே தான் அகஸ்தியரின் பணி இன்றைய உலகத்துக்கு மிகவும் அற்புதமான ஒன்று எனக் கருதுகிறேன். நான் அவருடைய ஒரு மிகச் சிறிய பகுதிதான்!”

அப்போது சாதகர் ஒருவர் கேட்டார், ‘‘சத்குரு, பூமிக்குச் சொந்தமில்லாத உயிர்கள் ஏன் மானசரோவருக்கு மட்டும் வந்து போகின்றன என்பதை கைலாயத்தில் அறிந்துகொள்ள முடியும் என்று கூறினீர்கள். அதைப்பற்றி சொல்ல முடியுமா?’’ என்று கேட்க, “வேற்று கிரகத்திலிருந்து அவர்கள் வருகிறார்கள் என்றால் இங்கு அவர்களைக் கவரும்படியாக ஏதாவது இருந்தாக வேண்டும், இல்லையா? மேலும் அவர்கள் இங்கு வர முடிகிறது என்றால் நிச்சயமாக அவர்கள் நாம் அறியாத பல வழிகளில் நம்மைவிட முன்னேறியவர்களாக இருக்க வேண்டும், இல்லையா? இந்தப் பூமியில் அவர்களைக் கவரும்படி ஒன்று இருக்கிறது என்றால் நிச்சயம் அது கைலாயமாகத்தான் இருக்க வேண்டும்!”.

அப்போது ஒரு சாதகர், ‘‘நேபாளத்தில் சாளக்கிராம் எளிதாகக் கிடைக்கிறதே, அதை வாங்கிச்சென்று பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?’’ என்று கேட்டபோது, “சாளக்கிராம் என்பது 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு விலங்கு. மண்ணில் புதையுண்டு இறுகி பிறகு மீண்டும் நிலத்தின் மேற்பரப்புக்கு வந்து இப்போதைய வடிவத்தில் கிடைக்கிறது. நேபாளம் எங்கும் இது கிடைக்கிறது. நானே ஆயிரக்கணக்கான சாளக்கிராம்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், லட்சத்தில் ஒன்று வேறுவிதமான சக்தியுடன் வெடித்துவிடும் போல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உள்ளவை மட்டும் மிகுந்த சக்தி அதிர்வுடன் இருக்கும். ஆனால், வீட்டுக்கு எடுத்துச் செல்வதென்றால், அதை முறைப்படி வைத்திருப்பது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், நிறையப் பிரச்னைகள் வந்து சேரும்.

என்னிடம் இப்போது ஒன்று இருக்கிறது. ஆனால் அது அரை சாளக்கிராம்தான். அதுவும் எப்படி என்னிடம் வந்து சேர்ந்தது என்று தெரியுமா? ஒரு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தன. தாங்க முடியாத பிரச்னைகள். அந்தக் குடும்பத்தில் அனைவருக்குமே பிரச்னைகள். இப்படி 10, 12 வருடங்கள கடக்க, என்ன செய்வதென்று தெரியாமல் என்னிடம் வந்தனர். வீட்டில் ஏதாவது விக்கிரகம் இருக்கிறதா என்று கேட்டேன். முதலில் இல்லை என்று சொன்னவர்கள் பிறகு ஒரு சாளக்கிராமை வழிவழியாக 150 வருடங்களாக முப்பாட்டனார் காலத்திலிருந்து வழிபட்டு வருவதாக கூறினார்கள். அவர்கள் முப்பாட்டனார் இறந்தவுடன் அதை வைத்துக் கொள்ளும் முறை தெரியாமல் இருந்தனர். ஒரு நாள் ஒரு யோகி வந்து அதை இரண்டாக உடைத்து ஒரு பாதியை எடுத்துச் சென்றுவிட்டார். அப்புறமும் மீதி பாதியை விட மனமில்லாமல் அதை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதிலிருந்து அவர்களுக்கு முடிவில்லாத துன்பங்கள்தான்.

WD
எனவே நான் அவர்களிடம் அதைக் கொண்டுவரும்படி கூறினேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே கூறினேன், ‘ஓ, இது சிவாவின் ஒரு பகுதி!’ அந்த அளவுக்கு அது சக்தியாக இருந்தது. அதை அவர்கள் வைத்திருக்கக் கூடாது என்றும் விரும்பினால் என்னிடம் தரலாம் என்றும் கூறினேன். அப்படி எனக்குக் கொடுத்தால் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன் என்றும் கூறினேன். இல்லையென்றால், அதை ஆற்றில் எறிந்து விடுங்கள். வீட்டில் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினேன். அவர்களுக்குள் மிகுந்த குழப்பம். ஏனெனில் முப்பாட்டனார் காலத்தில் இருந்துவைத்திருக்கிறார்கள். எனவே வைத்துக்கொள்வதா, எறிந்துவிடுவதா அல்லது கொடுத்துவிடுவதா என்று குழப்பம். இறுதியில் ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்பி வந்து என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.

அது எனக்குப் பல அற்புதங்களைச் செய்திருக்கிறது. குறிப்பாக, தியானலிங்கம் பிரதிட்சை முடிந்த பிறகு நான் மிகவும் சக்தி இழந்திருந்தேன். அந்தக் காலகட்டத்தில் அது என் உடல் மீது இல்லாமல் நான் வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கவில்லை. அது என்னை உயிரோடு வைத்திருந்தது. அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து கொண்டிருந்தேன். அமெரிக்க டாக்டர்கள் நான் பயணம் செய்யக் கூடாதென்றும் உடனடியாக என்னை எமர்ஜென்ஸி வார்டில் சேர்க்கவும் முயற்சி செய்தனர். ஆனால் நான் பயணத்தை நிறுத்தவில்லை. மிகுந்த சக்தி அதிர்வுடன் இருந்த அந்த சாளக்கிராம் என் உயிரைத் தக்கவைத்தது. அதை வைத்து நாம் பல செயல்கள் செய்திருக்கிறோம். பிரதிட்சையின் போதும் பிரதிட்சைக்குப் பின்னரும் பல வழிகளில் நாம் அதைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

நேபாளத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாளக்கிராம்கள் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அதைத் தினசரி பராமரிக்க வேண்டும். பூ வைக்க வேண்டும், தீர்த்தம் அல்லது பால் போன்று வைக்க வேண்டும். ஒரு நாள் நீங்கள் மறந்து விட்டாலும் அதற்குக் கோபம் வந்துவிடலாம். ஏனென்றால் அது சிவாவேதான். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை. ஏற்கனவே இந்தக் கலாசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் உருவத்தை வைத்து வழிபடுகிறீர்கள் என்றால் அதை நீங்கள் தினசரி அளவில் பராமரிக்க வேண்டும். நீங்கள் அப்படிப் பராமரிக்கவில்லை என்றால் சக்தி குறையத் தொடங்கிவிடும். அப்படி ஆகிவிட்டால் பிறகு சுற்றியுள்ள மக்களுக்கு நிறையப் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும்.

பராமரிக்க முடியாதென்றால், வாங்காதீர்கள். நீங்கள் அதை வாங்குவதை விட நன்றாக தியானம் செய்து, உங்களையே நீங்கள் சக்தியானவராக மாற்றிக்கொள்ளலாம்!’’ என்றார் சத்குரு!

மீண்டும் அடுத்த புதன்கிழமையில் பயணிப்போம்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது?

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – மீனம் | Meenam 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

Show comments