குழந்தைகள் வளர்கிறபோது பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு எதையாவது கற்றுத்தர வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தைகளோடு முதலில் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிக ஆனந்தமாக இருக்கிறீர்கள், நீங்களா… உங்கள் குழந்தைகளா? உங்களைவிட உங்கள் குழந்தை ஆனந்தமாக இருக்கிறது என்றால், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்கிற தகுதி குழந்தைக்குத்தானே இருக்கிறது!
ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அது கற்றுக்கொடுப்பதற்கான நேரம் அல்ல, நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம். நீங்கள் எப்படிச் சிரிப்பது என்பதையே மறந்துவிட்டீர்கள், எப்படி விளையாடுவது என்பதையும் மறந்துவிட்டீர்கள். ஒரு குழந்தை வருகிறபோது, இவற்றை நீங்கள் மறுபடியும் கற்றுக்கொண்டு அற்புதமான மனிதராக மலரலாம். மாறாக, மனிதர்கள் குழந்தைகளைப் பெரியவர்கள்போல நடந்து கொள்ள வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொண்ட விதங்களில் உங்கள் குழந்தைகளை வளர்க்க முற்படாதீர்கள். அவர்கள் என்னவாக வேண்டுமோ, அப்படி ஆகட்டும்!
வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு குழந்தைக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுத்துவிட முடியும்? பிழைப்புக்கு என்று சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, அந்தத் தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவை உங்களை எந்த விதத்திலும் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கவில்லை. உங்களைவிட உங்கள் குழந்தை, வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதற்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதில் நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், அன்பும் ஆதரவும் கனிந்த ஒரு வலிமையான உறவை அந்தக் குழந்தையுடன் வளர்த்துக்கொண்டால், அதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம்!
நீங்கள் வளர்ந்து வந்த பருவத்தில் உங்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால், நீங்கள் உங்கள் பெற்றோரை அணுகினீர்களா அல்லது நண்பர்களை அணுகினீர்களா? உங்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்களைத்தான் அணுகியிருப்பீர்கள். ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு எதுவும் புரியவே இல்லை. அவர்களும் அதே அபத்தங்களை 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்து வந்திருப்பார்கள். ஆனால் அவற்றை மறந்துவிட்டு ஏதோ வேறொரு கிரகத்தில் இருந்து வந்தது போல் விசித்திரமாக நடந்துகொள்வார்கள்.