காபி உங்களை விழிப்புடன் வைக்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது, கிளர்ச்சியடையச் செய்கிறது, அதனால் அதற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தே ஆக வேண்டும். அதிலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே காபி குடித்தால், நீங்கள் ஆச்சரியப்படும் அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும். நீங்கள் ஏதோ வீர அபிமன்யு போல் தெம்பாகக் கூட உணர்வீர்கள்.
ஆனால் தினம் தினம் அதை அருந்தினால், நீங்கள் அதை சார்ந்து வாழ்பவர் ஆகிவிடுவீர்கள். காபியை குடித்தவுடன் உங்கள் பயம், கவலைகள் எல்லாம் விலகிவிட்டது போல் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே உங்கள் உடல் 'இன்னும் கொஞ்சம் காபி வேண்டும்' என்று அனத்தத் துவங்கிவிடும்.
ஒரு இரண்டு மாதங்கள் நீங்கள் காபியே அருந்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் காலை எழுந்தவுடன் நல்ல ஸ்ட்ராங்காக ஒரு காபி, அதிகமாக டிகாக்ஷன் சேர்த்து குடித்தீர்கள் என்றால் உங்கள் கைகள் நடுங்குவதை நீங்கள் உணர முடியும்.
இதுவே ஒரு ஆறு மாத காலம் தொடர்ந்து நீங்கள் காபி அருந்தி வந்தீர்கள், திடீரென்று ஒரு நாள் காபி வேண்டாம் என்று நிறுத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அன்று உங்கள் முடிவை ஏற்க முடியாமல் உங்கள் உடல் தவிப்பதையும், மீண்டும் மீண்டும் காபி வேண்டும் என்று அது ஏக்கமாக நச்சரிப்பதையும் நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். அப்படி என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் காபி உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கிறதுதானே?