Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 3

பயணத் தொடர்

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 3
, வியாழன், 10 மே 2012 (14:47 IST)

திபெத்

புல்லாங்குழலில் புறப்படும் சோக ஸ்வரங்கள்
மலை முகடுகளில் எதிரொலிக்கின்றன.
மனிதன், விலங்கு போல் உயிர்ப்புள்ளவை எனினும்
இதயங்களின் அழுகுரலுக்கு அசையாதிருக்கின்றன.
அதிர்வுகளின் உச்சாடனங்கள், அபஸ்வரங்களை
அசையாப் பாறைகள் எதிரொலிப்பதில்லை.
இரக்கமில்லாத இச்சைகளின் இரைச்சலில் ஒலிப்பதோ
என்ஜின்களின் பேரோசையும் எந்திரங்களின் சப்தமும்
விறைத்த சீருடைகள் முறைத்த விழிகள்
பேசத் தயாராய் பீரங்கிகள் துப்பாக்கிகள்
மென்மை நிரம்பிய மனிதர்கள்
உலுக்கப்படுவது இங்கேதான்!

திபெத்தைப் பற்றி இப்படிச் சொல்லிய சத்குரு, மேற்கொண்டு திபெத்தில் உள்ள ஆன்மீகக் கலாச்சாரம் பற்றிக் கூறுகிறார்:
WD

" இங்குள்ள ஆன்மிகக் கலாச்சாரம், பதஞ்சலி, அகத்தியர் போன்றவர்கள் நடைமுறைப்படுத்திய முறைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எப்படியென்றால், விண்வெளி தொழில்நுட்பத்தில் சில விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்செயலாக சில குழந்தைகள் அதைப் பார்த்துவிட்டு அவர்களே ஒரு விண்வெளி ஓடத்தைச் செய்தது போலத்தான் இங்கும் ஆன்மிக முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்கும் இங்குமாக எடுத்துச் சேர்த்தவற்றை வைத்தே, ஒரு ஆன்மிக முறையை உருவாக்கிவிட்டனர். ஆனாலும் அது வேலை செய்கிறது. தொடக்கத்தில் இருந்த குருமார்களின் பிரம்மாண்ட திறனால் பல பரிமாணங்களிலும் வேலை செய்தது என்பதால், இது முற்றிலும் தனித்துவமானது.

ஆனால், அவர்களின் மந்திரங்களையும் யந்திரங்களையும் கவனித்துப் பார்த்தால், அவை இந்து தாந்திரீகத்திலிருந்து எடுக்கப்பட்ட முறைகள் என்பது புரியும்.

webdunia
WD
குறிப்பாக அவை யோக தாந்திரீக வழிகளில் மிகவும் வளர்ச்சியுற்ற, காஷ்மீர சைவ வழியில் வந்தவை. அங்கும் இங்குமாகச் சேகரித்து ஒரு பொம்மை போல இவற்றை உருவாக்கினர். ஆனாலும் அது வேலைசெய்ததுதான் அழகே. ஆனால், அதுவே அதன் பலவீனமும்கூட.

பொருள் நிலை கடந்த பரிமாணம் அல்லது விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று நாம் கூறுவதெல்லாம் அடிப்படையாக ஆழமான புரிதலைத்தான்.

இந்த உயிர் எப்படி நிகழ்கிறது என்ற தன்மையை அறிவதுதான் அது. இதற்கு நீங்கள் முழு உலகைப்பற்றியும் படிக்கத் தேவையில்லை. இந்த உயிரே ஒரு பிரபஞ்சம்தான். இதை நீங்கள் முழுமையாக அறிந்தால், அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். படைப்பு, படைப்பின் செயல் முறை என எல்லாவற்றையும் அறிந்து கொள்வீர்கள்.

இது தவிர்த்து, படைப்பின் தன்மை, பிரபஞ்சத்தின் தன்மை பற்றி படித்துத் தெரிந்து கொள்ள எவ்வளவுதான் முயற்சித்தாலும் அது முடிவற்ற முயற்சிதான். அங்கும் இங்குமாகத் தெரிந்துகொண்ட சிலவற்றை நம்புவது முட்டாள்தனமானது என்பதை ஒருநாள் தெரிந்து கொள்வீர்கள்.

கடந்த 100 வருடங்களில் விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு மனிதன் அற்புதமான பல விஷயங்களைச் செய்திருக்கிறான். கடந்த பத்தாயிரம் வருடங்களில் செய்யாததை இந்த 100 வருடங்களில் செய்திருக்கிறான்.

பிரபஞ்சத்தில் பலவிதமான சக்திகளைக் கையாளும் ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. பொருள் சார்ந்த வசதிகள் பெருகிவிட்டன. ஆனாலும் உண்மையான அறிதல் என்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளிப்புற அறிவு சேர்ந்திருக்கிறது. ஆனால் தன்னையறிதல் நடக்கவில்லை. ஏனென்றால், விஞ்ஞானத்தைக் கொண்டு அது நடக்க வாய்ப்பு இல்லை.


எனவே, ஆன்மிகம், யோகா, தந்திரா இவையெல்லாம் வெவ்வேறு இடங்களை, வெவ்வேறு காலங்களைச் சார்ந்தே நிறம் பெறுகிறது.

எனவே, திபெத்திய ஆன்மிகம் உறுதியாகக் கட்டமைக்கப்படாவிட்டாலும் குழந்தைத்தனமாய் இருந்தாலும் செயல்படுகிறது. அதுதான் இங்கே அதிசயத்தக்க ஒன்று. இந்தியாவில் 1000க்கும் மேற்பட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவையெல்லாம் மிக ஆழமான விஞ்ஞானப் புரிதலால் உருவாக்கப்பட்டவை.

ஆனால் இங்கே உள்ளவை, ஒரு குழந்தை, நாசாவுக்குச் சென்று பார்த்துவிட்டு தானாகவே ஒரு விண்கலத்தைத் தயார்செய்து, நாசாவுக்கு முன்னதாக நிலவில் கால் வைப்பதற்கு ஒப்பானது".

மீண்டும் அடுத்த புதன்கிழமையில் பயணிப்போம்…

Share this Story:

Follow Webdunia tamil