Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 1

பயணத் தொடர்

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 1
, வியாழன், 26 ஏப்ரல் 2012 (14:17 IST)
FILE
"கயிலாயம் சிவனின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சிவன் அங்கே அமர்ந்திருக்கிறார் என்றோ, நடனமாடிக்கொண்டு இருக்கிறார் என்றோ பொருள் இல்லை. கயிலாயம் ஒரு ஞானக் களஞ்சியம் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.

சராசரிப் புரிதலைவிட பல மடங்கு அதிகமாய் தன்னை உணர்ந்த ஞானிகள், அந்தப் புரிதலை, உடன் இருப்பவர்களுக்கு முழுவதுமாக உணரவைக்க முடியாது. சிறு பகுதியைத்தான் வழங்க முடியும். தென்னிந்தியாவில் வாழ்ந்த 63 நாயன்மார்களில், ஒரு பெண் நாயன்மார் உட்பட பலரும் கயிலாயத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

சமூகச் சூழல்கள் காரணமாகத் தங்கள் ஞானச் செல்வத்தை, சுற்றி இருப்பவர்களிடம் அவர்களால் வழங்க முடியவில்லை. எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தன்னை உணர்ந்தவர்கள் கயிலாயம் சென்று, தங்கள் ஞானத்தை சக்தி வடிவமாக அங்கே பதித்து வருகிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த வகையில் கயிலாயம் ஒரு ஞானக் களஞ்சியம்!

அனைத்து ஆன்மிகப் பாரம்பரியங்களில் வந்தவர்களும் தங்கள் ஞானத்தைக் கயிலாயத்தில் பதித்திருக்கிறார்கள். எனவேதான் பௌத்தர்கள், ஜைனர்கள், திபெத்தைச் சேர்ந்த பான் மதத்தினர் மற்றும் இந்துக்கள் அனைவருமே தங்கள் குருமார்கள் அங்கு வாழ்ந்து வருவதாகச் சொல்கின்றனர்.

நீங்கள் ஏற்கனவே ஞானம் அடைந்தவராக இருந்தால், உள் நிலைப் பரிமாணத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் எதை அறிந்துகொள்ள விரும்பினாலும் அதைக் கயிலாயத்தில் அறிந்து கொள்ள முடியும்.

எல்லோரும் என்னைத் தர்க்கரீதியான குருவாகத்தான் அறிந்திருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். சின்ன வயது முதல் யக்ஷர்கள், கணங்கள், முப்பத்து முக்கோடித் தேவர்கள் என்று எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

அந்தக் கதைகளை ரசித்திருக்கிறேனே தவிர நம்பியது இல்லை. வேற்றுலகில் இருந்து பலரும் இந்த உலகுக்கு வந்து போன கதைகளை நம் புராணங்கள் பேசுகின்றன. ஒரு கதைக்குள் பல நூறு கிளைக் கதைகளைக்கொண்டு இருக்கும் மகாபாரதத்துக்கு நிகராக ஒரு கதை இல்லை. இந்தியர்கள் இணையற்ற கதை சொல்லிகள் என்ற அளவில் அவற்றைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், முதல் முறையாக மானசரோவர் போனபோது, அங்கு நிகழும் சூட்சுமமான விஷயங்களைப் பார்த்தபோது, இந்தக் கதைகள் வெறும் கதைகள் அல்ல என்பதை உணர்ந்தேன்.

மண்ணில் வானம் இறங்கி வரும் மகத்துவம், மானசரோவரில் நிகழ்கிறது. அதிகாலை 2.30 முதல் 3.45 வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கு நிகழ்பவை பிரமிப்பூட்டுகிறது.

ஆன்மிகத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் மானசரோவர் பயணம் மகத்தானத் திருப்புமுனையாக அமையும். விவரிக்க முடியாத அற்புதங்களின் விஸ்வரூபம் என்று மானசரோவரைச் சொல்வேன்.

மானசரோவரில் உங்களுக்குள் ஒரு விதை விதைக்கப்படுகிறது. நல்ல வேளையாக அந்த விதையை அழிக்கும் சக்தி உங்களுக்கு இல்லை. என்ன செய்தாலும் அந்த விதை முளைத்திடும். உங்கள் விருப்பு, வெறுப்பு, வேண்டுதல், வேண்டாமை போன்றவற்றைக் கைவிடுவீர்களெனில், அந்த விதை விரைவாய் வளரும். இந்த விதை மரங்களை முளைக்கவைக்கும் விதை அல்ல. ஒரு மலையையே முளைக்கவைக்கும் விதை".

- சத்குரு

ஆன்மிகம் என்று வரும்போது, மிகப் பிரம்மாண்டமான வாய்ப்பாக விரிந்துகிடக்கிறது கைலாஷ் மற்றும் மானசரோவர்.

இனி வாரந்தோறுமசெவ்வாயகிழமைகளிலயாத்திரதொடரும்...

Share this Story:

Follow Webdunia tamil