Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களின் காதலும் வீரமும் காரடையான் நோன்பும்

பெண்களின் காதலும் வீரமும் காரடையான் நோன்பும்

Webdunia

நம் நாட்டில் திருமணமான பெண்கள் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, தங்கள் கணவரின் நல்ல ஆயுளும், திடகாத்திரமும் வேண்டி பல்வேறு பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கர்வா சௌத்:
கேரளாவிலும், உத்தரப் பிரதேசத்திலும் கொண்டாடப்படும் கர்வா சௌத் எனும் பிரசித்தி பெற்ற நோன்பே தமிழ்நாட்டில் காரடையான் நோன்பு என்று பெண்களால் கொண்டாடப்படுகிறது.

மாதம் :
மாசி, பங்குனி என்ற இந்த இரண்டு மாதங்களின் சேர்வில் வரும் நாளன்று இந்த நோன்பு நூற்கப்படுகிறது. அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்நோன்பினை கடைபிடிக்கிறார்கள்.

மஞ்சள் கயிறு :
திருமணமான பெண்கள் பருத்தியினால் ஆன மஞ்சள் கயிற்றை விரதம் இருந்து கழுத்தில் தாலி போல் கட்டிக்கொள்வர்.

ப்ரசாதம் :
விரதம் இருந்த பின்னர் அன்று பிரசாதமாக செய்த நோன்பு அடையை உண்ணுவர். பங்குனி மாத வரவுக்காக காத்திருந்து, அது அந்த நாளில் மதியமோ இரவோ அந்நேரம் வரை விரதமிருந்து

"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா"

என்று மனமுருகி வேண்டி பிரசாதத்தை உண்பார்கள்.

காரடை:
பச்சரிசி, வெல்லம், காராமணி, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்வதாகும்.


புராண பின்னணி :

சத்தியவான் சாவித்ரியின் புராணக்கதையே இந்த காரடையான் நோன்பின் பின்னணியாகும்.

ராஜா அஷ்ரபதியின் மகள் சாவித்ரி. அஷ்ரபதி, மகளின் விருப்பப்படி அவளின் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தார். சாவித்ரி காட்டில் வாழ்ந்த நாடிழந்த ஒரு மன்னனின் மகனான சத்தியவானை தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். இன்னும் ஒரு வருடத்தில் இறக்கப் போகின்ற சத்தியவானை சாவித்ரி மணக்கப் போவதையறிந்த நாரதர், அவள் மனதை மாற்ற எண்ணினார்.

ஆனால் சாவித்ரியோ தான் நினைத்தவனையே மணம் செய்வதில் உறுதியாக இருந்து, மணமும் முடித்தாள். அந்த ஒரு வருடமும் தன் கணவனுக்காகவே விரதமிருந்தாள்.

ஆனால், சரியாக ஒரு வருடம் முடிகையில் யமதர்ம ராஜன் சத்தியவானின் உயிரைக் கவர வந்து விட்டார். சாவித்ரியோ யமதர்மராஜனின் பின்னாலேயே சென்று வேண்டினாள். பதிவிரதையான அவளின் மன உறுதியைக் கண்டு மகிழ்ந்த யமதர்மராஜன், "என்ன வரம் வேண்டும்? கேள்!" என்றார். சாவித்ரியோ மிகவும் சாதுர்யமாக, "என்னுடைய மாமனார், தன் பேரக்குழந்தைகள் தங்கக் கிண்ணங்களில் சாப்பிடுவதைக் கண்டு மகிழ வேண்டும்" என்றாள்.

வரமளித்த யமதர்ம ராஜனும் சத்தியவானின் தந்தையின் நாட்டையும், கண்களையும் மறுபடி பெற்றுத் தந்து, சத்தியவானின் உயிரையும் மீட்டுக் கொடுத்தார்.

கதை, புராணக்கதையாக இருப்பினும், காதல், வீரம், விவேகம் கலந்த இந்த சாவித்ரி மட்டும் இக்கால புதுமைப்பெண்களின் உருவமாகத் தான் தெரிகிறாள் என்பதை யாரும் மறுக்க முடியாது தானே!

எதிர் நீச்சல் போட்டு, துணிச்சலுடன் முன்னேறுகின்ற பல கோடி பெண்களின் பிரதிநிதியான இந்த சாவித்ரி நூற்ற நோன்பே இந்த காரடையான் நோன்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil