" சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சாம்ப்பா. ரெண்டே வருஷத்துல கார் வாங்கிட்டான், வீடு கட்டிட்டான்... சரியான வளர்ச்சி!" என்று பேசுகிறோம். அதேபோல பதவி அல்லது புகழில் காணும் முன்னேற்றத்தையும் வளர்ச்சி என்கிறோம். "சாதாரண கிளார்க்கா இருந்தான். இப்போ மளமளன்னு முன்னேறி, மேனேஜர் ஆகிட்டான ்" என்றும் பேசுகிறோம்.
இந்தப் பணம், பதவி, புகழ் இதெல்லாம் வளரத்தான் வேண்டும். அப்போதுதான் சரியான வகையில் நம் உழைப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இதெல்லாம் நம் சமூக வாழ்வில் தேவையான, நியாயமான வளர்ச்சி. அதேசமயம் நம் உள்வளர்ச்சி பற்றி சற்று யோசிப்போம். நிம்மதி, மகிழ்ச்சி, பக்குவம், சிந்தனை என எல்லாவற்றிலும் வளர்ச்சி வேண்டுமல்லவா?
சொல்லப் போனால் இந்த உள்நிலை வளர்ச்சிதான் மிக முக்கியமான, அவசியமான, உபயோகமான, உண்மையான வளர்ச்சி!
‘‘நாலு கார் இருக்கு சார். பேங்க்ல நிறையப் பணம் இருக்குங்க. ஆனா, என்ன செய்ய? பத்து வருஷம் முன்னாடி வாடகை வீட்டுல இருந்தேன், சைக்கிள்லதான் போய்க்கிட்டிருந்தேன். அப்ப இருந்த நிம்மதி இப்ப இல்லியே சார்’’ என்கிறார் ஒரு நண்பர். பணம் அதிகமாகும்போது, வாழ்வின் சௌகரியங்கள் அதிகரிக்கின்றன. அதே போல, நிம்மதியும் கூடவே வளர வேண்டுமே. அங்கே பலருக்கு பெருமூச்சு ஏன் வருகிறது? எங்கே கோளாறு?
நூறு கோடிக்கு அதிபர் குளிர்சாதனம் பொருத்திய அறையில் மெத்தையில் உருண்டு கொண்டு உறக்கம் வராமல் அதற்கு மாத்திரை சாப்பிடும்போது... பிளாட்ஃபாரத்தில் ஒரு கூலித் தொழிலாளியால் நிம்மதியாக எப்படி உறங்க முடிகிறது?
ஆக... நிம்மதியும், திருப்தியும், மகிழ்ச்சியும், பணத்திலோ அல்லது அது கொண்டுவரும் பொருள்களிலோ இல்லை. மனநிலையை விடுங்கள். நம் உடல்நிலையிலும் நிம்மதியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அணியில் தான் பலரும் இருக்கிறோம்.
கையில் பொருளில்லாததால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், புரியும். ஆனால், நன்றாகச் சாப்பிட முடியும் என்கிற வசதியான நிலையிலும் சரியாகச் சாப்பிட இயலாத உடல்நிலை நமக்கு இருக்குமானால், அது நாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு நிலை அல்லவா?
நமது உடல் அமைப்பில் பிறப்பிலேயே இருக்கும் குறைபாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான உடல் பிரச்னைகள் நாமே தேடிக்கொள்வதுதானே? நம் உடலின் அலங்காரத்துக்கு நாம் காட்டுகிற அக்கறையை, அதைச் சரியாகப் பராமரிப்பதில் காட்டுகிறோமா? சரியான உணவுப் பழக்க வழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோமா? அதைப் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது?