Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சாபில் பெண்சிசுகொலை கொடூரம்

பஞ்சாபில் பெண்சிசுகொலை கொடூரம்

Webdunia

அண்மையில்தான் வந்து போயிருக்கிறது மகாகவி பாரதியின் நினைவுநாள். பெண்விடுதலைக்காய் பாடுபட்டவர் பெண்மையை மதிக்கவேண்டும் ஆணுக்கு பெண் சமானம் என்றெல்லாம் தன் கவிதைகளில் வேதனையும் வீரமுமாய் முழங்கியவர், இன்று உயிரோடு இருந்திருந்தால் பெண் சிசுக்கொலை பாதகம் கண்டு உடனேயே, உயிர் துறந்திருப்பார்.. ஆம்! பெண் சிசுவதை இன்னமும் பரவலாக பல இடங்களில் குறிப்பாய் பஞ்சாப்பில் சர்வ சாதாரணமாய் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் வேதனை என்னவென்றால் இந்தக் கொடுரச் செயலில் ஏழைகளைபோல பணக்காரர்களும் சரிபங்கு வகிக்கின்றனர் என்பதுதான்.

மற்ற மாநிலங்களைப் போல பெண்குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்கள் இங்கு அதிகம் இருக்காது. இதைத் தடுக்க அரசு சட்டம் போட்டும் ஒன்றும் பலனில்லை .

இந்தியாவிலேயே பஞ்சாபில்தான் பெண் குழந்தைகளின் விகிதாசாரம் குறைந்த அளவில் உள்ளது. கருவிலேயே பெண்குழந்தையை கலைப்பதும் அப்படியும் மீறி பெண் சிசு பிறந்துவிட்டால் அதைப் பிறந்த உடனேயே ப்ளாஸ்டிக்வாளியில் நீரில் அழுத்தி சாகடிப்பதும் நமக்குக் கேட்க பரிதாபமாயிருக்கலாம் ஆனால் பஞ்சாபில் இது வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொள்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள கிணற்றினை போலிசார் சோதனை செய்தபோது 50 பெண் சிசுக்களும் 300க்கும் மேற்பட்ட கருக்களும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவமனையின் உரிமையாளர்களாகிய அந்த டாக்டர் தம்பதிகளும் போலி டாக்டர்கள் எனத் தெரியவர அவர்களை போலிசார் கைது செய்தனர்.

சாஹிப் மருத்துவமனை என்று பெயர் கொண்ட அதனை நடத்திவந்த இந்த தம்பதியினர் கடந்த 16 வருடங்களாக கருக்கலைப்பு செய்வதையே தொழிலாகக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

ஒரு கருக்கலைப்புக்கு 8000 % முதல் 15000 % வரை வாங்கி இருக்கின்றனர். தங்களிடம் ஆள்கொண்டு விடுவதற்கு ஏஜண்ட்டுகளை ஆங்காங்கே சம்பளத்திற்கு நியமித்திருக்கின்றனர் அதிர்ச்சியான பல தகவல்களை எல்லாம் அங்கு நர்சாக பணி புரிந்த பூஜாராணி என்பவர் போலீசாரிடம் விளக்கி உள்ளார். அதே மாவட்டத்தில் பட்ரன் எனும் சிறு நகரத்தில் கருவில் உள்ள குழந்தையை ஆணா பெண்ணா என அறியகூடிய அல்ட்ரா சௌண்ட் ஸ்கேனிங் செண்டர்கள் சமீபத்தில் சீல் வைக்கப்பட்டன.

பாட்டியாலாவின் துணை போலீஸகமிஷனர் ராக்கேஷ்வர்மா, பட்ரன் நகர் முழுவதும் சோதனை நடத்தி சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டுவந்த மேலும் 12 மருத்துவமனைகளுக்கு "சீல்" வைத்து விட்டதாய் பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு தெரிவித்தார். தனியார் மருத்துவ மனையிலும் பெண்சிசுக்கொலை அக்கிரம் நடைபெறுவதாக தகவல் வருவதால் அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து பட்ரன் நகரத்தை நல்நகரமாய் மாற்ற ஆவனம் செய்வோம் என்று சொல்லி இருக்கிறார்.

சொஹீந்தர்சிங் வஞ்சாரா பேதி என்னும் சாஹித்ய அகாடமி விருது பெற்ற பஞ்சாபி எழுத்தாளர் தனது "பஞ்சாப் நாட்டுப்புற பழக்கங்கள்" எனும் நூலில், நீண்ட காலப் பழக்கமான பெண்சிசு கொலை பற்றி ஒரு குறிப்பில் எழுதி உள்ளதைப் படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

பெண்குழந்தைகளை வளர்ப்பதும் அவர்களுக்கு வரதட்சணைக் கொடுத்து மணமுடிப்பதும் சிரமமென்று நினைத்து, பிறந்ததும் அவர்களைக் கொண்டு காட்டில் விட்டு விடுவார்களாம் அங்கே காட்டு விலங்குகள் அவற்றைக் கடித்துக் குதறி பிறகு ஏதேனும் ஒரு உறுப்பை நகர எல்லைக்குள் கொண்டுவந்து போட்டால் காட்டில் விட்ட தம்பதியினருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்குமென்றும் அப்படி இல்லையெனில் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் மூட நம்பிக்கை இருந்ததாம். சிலர் பெண் சிசுவை காட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டு சவக்குழி மீது பஞ்சும் வெல்லமும் வைத்து "பெண்ணே நீ போய் உன் சகோதரனை அனுப்பு" என பாடிவிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பி இருந்தார்களாம்.

பஞ்சாபில் சில இடங்களில் இந்த ஆண் குழந்தை மோகத்தினை சிலர் தங்களுக்கு சாதகமாய் கருதி தாயத்து, டாலர், மந்திரக் கயிறு எனச் சொல்லி, விற்று ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

15 பக்கங்களே கொண்ட சைனீஸபார்முலா எனும் புத்தகம், அங்கு இப்போது அமோக விற்பனையாம். காரணம் அதில் எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், ஆண் குழந்தை பிறக்கும் என்னும் அரிய தகவல் உள்ளதாம். மக்கள் போட்டிபோட்டு வாங்குகிறார்களாம்.

பஞ்சாப் என்றாலே நமக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. இனி பெண்சிசுகொலை கொடூரமும் சேர்ந்து கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil