Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலினை குறிவைத்து தாக்கிய சசிகலா

மு.க.ஸ்டாலினை குறிவைத்து தாக்கிய சசிகலா
, புதன், 4 ஜனவரி 2017 (16:55 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலா இரண்டாவது முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜல்லிக்கட்டு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு; அவர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக் கூறிய நுணுக்கமான வாதங்களை புறம்தள்ளிவிட்டு; அவரின் அரும் செயல்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.  இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் உள்ளது.
 
ஜெயலலிதாவின், ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக்கும் முயற்சி கடந்த தலைமுறைகளின் தந்திரமாக இருந்திருக்கலாம். அனைத்துத் தகவல்களும் ஒரு நொடியில் எல்லோரது விரல் நுணிக்கும் வந்துவிடும் இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப் பிரசாரங்கள் நெடு நேரம் உலவ முடியாது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஜெயலலிதா ஆணையின்படி, உச்ச நீதிமன்றத்தின் தடை ஆணையை மறு பரிசீலனை செய்யக் கேட்டு 19.5.2014 அன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக பலம் வாய்ந்த உறுப்பினராக பங்கு பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 11.7.2011 அன்று காட்சி விலங்குகள் பட்டியலில் புலிகள், கரடிகள் போன்றவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்து ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.  இந்த அறிவிக்கை காரணமாகத் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை செய்தது.  எளிய எடுத்துக்காட்டு மூலம் சொல்வதென்றால், நெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்த ஓர் இரு வழிச் சாலையை திடீரென்று ஒருவழிச் சாலை என்று கூறிவிட்டால், அந்த சாலையில் மறுக்கப்பட்ட திசையில் பயணிப்பது `குற்றம்' என்றாகிவிடுவதைப் போல, ஜல்லிக்கட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஓர் அறிவிக்கையால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு `தடை' என்பது  மத்திய அரசின் ஒரு திடீர் அறிவிப்பால் இப்படித் தான் வந்தது.
 
பிரதமரிடம் 7.8.2015 அன்று ஜெயலலிதா பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது, அதில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு `காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகள் நீக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்திக் கூறினார்.  மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டு 22.12.2015 அன்று கடிதம் ஒன்றினையும் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதி இருந்தார். ஆனால், மத்திய அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் 7.1.2016 அன்று ஒரு காப்புரையை மட்டும் வெளியிட்டதே தவிர, ஜல்லிக்கட்டுக்குத் தடை வரக் காரணமாக இருந்த அம்சத்தைத் தொடவே இல்லை, என்று கூறியுள்ளார்.
 
அதோடு விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960, இதில் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறித்தும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்தும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: சசிகலா தரப்பு கலக்கம்