Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. ஸ்டாலின்

தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. ஸ்டாலின்
, வெள்ளி, 30 ஜூன் 2017 (04:05 IST)
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவோ அதில் சமரசம் செய்து கொள்வதோ என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திராவிட இயக்கத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்றும் திமுக செயல்தலைவர் அறிக்கை ஒன்றில் ஆவேசமாக கூறியுள்ளார்.



 
 
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு: 'தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமாக நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். 
 
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.
 
இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு, சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்தச் சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை. 
 
தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. 
 
அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது-சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்க்கும் குடும்பம் - அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்?