Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவை மீண்டும் சீண்டும் சசிகலா புஷ்பா: பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி என அதிரடி

சசிகலாவை மீண்டும் சீண்டும் சசிகலா புஷ்பா: பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி என அதிரடி
, வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:33 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு  அக்கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நீண்டு வருகிறது. ஒரு பக்கம் ’சின்னம்மா’ சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளராக ஆக வேண்டும் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிக்கைகளிலும் விளம்பரங்கள் ஏகத்துக்கும் கொடுக்கப்பட்டன. இதன் அதீத வெளிப்பாடாக மதுரையில் ‘சசிகலா எனும் நான்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

ஆனால், அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அதிமுக அபிமானிகள் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்பதை விரும்பவில்லை. இதன் வெளிப்பாடாகவே ஆங்காங்கே போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும், சாணி அடிக்கப்படுவதும் நிகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும், சசிகலாவிற்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சசிகலாவின் குடும்பம் ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் ‘ஜெயலலிதா தீபா பேரவை’ என்ற பெயரில் புதிதாக கட்சித் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், ”கட்சியின் எந்த அடிப்படை உறுப்பினருக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில், அதிமுக, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்.

நான் இப்போதும், அதிமுகவில் தான் இருக்கிறேன். மாநிலங்களவையிலும் உறுப்பினராகவே உள்ளேன். என்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், கட்சியின் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது. அதிமுகவில் இருந்து இன்னும் என்னை நீக்கவில்லை.

நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு கடைகளை நம்பி ஆட்சி நடத்தக் கூடாது - கிரண்பேடி அதிரடி