Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு உற்பத்தி: தன்னிறைவு சாத்தியமில்லையா?

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (17:02 IST)
FILE
நமது நாட்டின் பருப்பு வகைகளின் உற்பத்தி நமது தேவையை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், அயல் நாடுகளில், குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் விவசாய நிலங்களை ஒப்பந்தத்தில் (குத்தகைக்கு) எடுத்து, பருப்பு உற்பத்தி செய்து, அதனைக் கொண்டு நாளும் அதிகரித்துவரும் பருப்பு வகைகளின் தேவையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமையும், ஆதரவும் அளிக்கப்படும் என்று மத்திய தொழில், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

“நமது பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறோம். பருப்பு உற்பத்தியை அதிகரிக்க மேலும் நிலங்களை பருப்புச் சாகுபடிக்கு கொண்டுவருவதற்கு உதவுவோம். இந்தியா ஒரு சந்தை, எனவே விவசாயத்தில் நாம் முதலீடு செய்கிறோம ்” என்று கடந்த 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

அமைச்சர் ஆனந்த் சர்மா கூறும், “மேலும் நிலங்களை பருப்புச் சாகுபடிக்குக் கொண்டு வருவதற்கு உதவுவோம ்” என்பது இங்கல்ல, ஆப்ரிக்க நாடுகளில்! அதனை யார் செய்யப் போவது?

தனியார் செல்பேசி நிறுவனமான பார்த்தி எண்டர்பிரைசஸ், இந்திய அரசு நிறுவனமான மினரல் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய விவசாயிகளுக்கான உர கூட்டுறவு அமைப்பும் (இஃப்கோ) ஆகியவற்றுடன் இணைந்து ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, எத்தியோப்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகிய நாடுகளில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து, அங்குள்ள விவசாய கூலிகளைக் கொண்டு பருப்பு வகைகளை உற்பத்தி செய்து இந்தியாவின் சந்தைக்கு கொண்டுவரப் போகின்றன!

இன்றைய நிலையில் இந்தியாவின் பருப்பு வகைகளின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே 3 முதல் 3.5 மில்லியன் டன்கள் வரை இடைவெளி உள்ளது. இதனை ஈடுகட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

பருப்பு வகைகளே இந்தியாவின் சராசரி மக்களின் புரத சத்துத் தேவையை நிவர்த்தி செய்யும் முக்கிய உணவு வகையாகும். குறிப்பாக நமது நாட்டின் மரக்கறி உணவு உட்கொள்வோரின் புரத சத்துத் தேவையை நிறைவு செய்வது அவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பருப்பு வகைகளேயாகும். பருப்பில் 18 முதல் 25 விழுக்காடு புரதச் சத்து உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவு ஆகும். இந்தியாவின் மைய மற்றும் வட மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு மானாவாரிப் பயிராக (இங்கு தமிழ்நாட்டிலும்தான்) பருப்பு வகைகள் பயிர் செய்யப்படுகிறது.

நமது நாட்டின் பருப்பு உற்பத்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது தேவையைக் காட்டிலும் அதிகம் இருந்துள்ளது. அதனால் ஏற்றுமதியும் ஆகியுள்ளது. ஆனால் மக்கள் தொகை அதிகரித்த அளவிற்கு பருப்பு பயிர் செய்யும் நில அளவு உயராததும், உற்பத்தி அளவு மிகக் குறைவாக இருப்பதுமே இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பருப்பு பற்றாக்குறைக்கும், இறக்குமதிக்கும் காரணங்களாகும் என்று இதுபற்றி ஆய்வு செய்து வேளாண் அமைப்புகள் கூறுகின்றன.

இவ்வாறு இருந்தும் இந்தியாவே பருப்பு உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் உள்ளது. அதாவது உலகின் மொத்த பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 விழுக்காடு. அதே நேரத்தில் நமது பயன்பாடு மொத்தி உற்பத்தியில் 30 விழுக்காடு. அதாவது நாம் உற்பத்தி செய்வதை விட கூடுதலாக 5இல் ஒரு பங்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதுவே 3.5 மில்லியன் டன் பருப்பு வகைகள் இறக்குமதி. நமது உற்பத்தி 15.5 மில்லியன் டன். இந்த ஆண்டு கூடுதலாக 20 ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டிருப்பதால் (சந்தையில் நல்ல விலை கிடைக்குமல்லவா? அந்த எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் கூடுதல் நிலங்களில் பருப்புச் சாகுபடி செய்யப்படுகிறது) உற்பத்தி 16 மில்லியன் டன் அளவிற்கு கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பருப்பு உட்கொள்ளுதலை கணக்கில் கொண்டால், 90களில் நமது நாட்டு மக்கள் சராசரியாக நாள் ஒன்றிற்கு 60 கிராம் பருப்பை உணவாக உட்கொண்டு வந்துள்ளனர். அது 2007ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 36 கிராமாகக் குறைந்துள்ளது. அதாவது நமது மக்கள் தேவையான அளவு பரதச் சத்துப் பெறவில்லை.

இதற்கு மிக முக்கியக் காரணம் பருப்பு வகைகளின் தாறுமாறான விலையேற்றம். இதனை நமது நாட்டின் (பொருளாதார வல்லுனரான) பிரதமரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறது. ஆனால் அது அதிக விலைக்கு சந்தைக்கு வருவதால் சராசரி வாழ்நிலையில் உள்ள மக்களும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களும் அதனை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதுவே புரதச் சத்து உட்கொள்ளுவது குறைந்ததற்கான காரணமாகும்.

இந்த நிலையில்தான், 2017ஆம் ஆண்டில் நமது நாட்டின் பருப்பு வகைகளின் தேவை 32 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றுள்ள உற்பத்தி போன்று இரண்டு மடங்காக நமது தேவை உயரும்.

இதனை நடைமுறைக்கு பொருத்திப் பார்த்தால் தற்போது (இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கணக்கின்படி) 110 இலட்சம் ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்துள்ளோம். இதனை இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது நமது நாட்டின் பருப்பு உற்பத்தியை முறையான சாகுபடி வழிகளைப் பின்பற்றி உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தக் காரணிகள் மிக முக்கியமானவை. இந்தியாவின் பருப்பு பயிர் விளைச்சல் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 638 கிலோ கிராமாக உள்ளது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைச்சல் ஹெக்டேருக்கு 1,900 கி.கி.யாக உள்ளதென நம்பத் தகுந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

FILE
ஆக, நம் முன்னால் உள்ள வழி இரண்ட ு: ஒன்று, சாகுபடிப் பரப்பை இரட்டிப்பாக்குவது, இரண்டாவது விளைச்சல் இரட்டிப்பாக்குவது. இந்த இரண்டு சாத்தியக் கூறுகள் பற்றி நமது நாட்டின் வேளாண் அமைச்சகம் ஏதாவது ஆய்வு செய்ததா என்றால் இல்லை! பருப்பு விலையேற்றத்தை தீப்பொறி பறக்க விவாதித்த போதும் உற்பத்தியைப் பெருக்குவது குறித்த திட்டம் ஏதாவது உள்ளதா என்பதை உணவு அமைச்சர் சரத் பவார் குறிப்பிடாத காரணத்தினால்தான், அவர் பேச வேண்டிய விடயத்தை தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பேசுகிறார்!

இவர்கள் எல்லோரும் இம்போர்ட்டில் ஆர்வம் கொண்டவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவின் உற்பத்தி பெருக்கத்தில் ஆர்வமற்றவர்கள்.

FILE
எனவே இந்த இரண்டு சாத்தியக் கூறுகளும் நமது நாட்டில் உள்ளதா என்ற கேள்வியை தொலைபேசியின் வாயிலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் தமிழ்.வெப்துனியா.காம் கேட்டது.

“நமது தேவைக்கு ஏற்ற அளவிற்கு உற்பத்தியை செய்யவும் முடியும், விளைச்சலை அதிகரிக்கவும் முடியும். இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்ல ை” என்றால் நம்மாழ்வார்.

இன்றைக்கு நாம் இந்த அளவிற்கு பற்றாக்குறையை சந்திப்பதற்கு மூல காரணம் என்னவென்று கேட்டதற்கு, “நாம் கடைபிடித்துவந்த உழவு முறைகள் மாற்றப்பட்டதும், விவசாய நிலங்கள் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு கைக்கொள்ளப்பட்டதும்தான ்” என்று நம்மாழ்வார் கூறினார்.

பருப்புத் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆய்வு செய்த டாடா ஸ்ராட்டிஜிக் மேனேஜிமண்ட் குரூப்பின் பிரதீக் கடாக்கியாவும், ஜெஃப்ரி ஜேக்கப்பும், “இப்போதுள்ள அளவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பருப்பு உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிற்கு உள்ளதென கூறியுள்ளனர்!

அதற்கான சாகுபடித் திட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ள டாடா ஆய்வுக் குழு, அதிக விளைச்சல் தரும் விதைகள், சரியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டைச் செய்தாலே இப்போதுள்ளதை விட நமது உற்பத்தி ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இதோடு உற்பத்திப் பரப்பை மேலும் 25 விழுக்காடு அதிகரித்து, அதோடு முறையாக பாசன வசதியை உறுதி செய்தால் உற்பத்தி இரட்டிப்பு சாத்தியமே என்கிறது.

‘தாளாண்ம ை ’ எனும் இயற்கை வழி வேளாண்மை இதழின் ஆசிரியரான மு.குமரவேல், தமிழ்நாட்டில் பருப்பு வகைகள் உற்பத்தி குறித்துச் சற்று விரிவாக பேசியவர், முக்கியமாக ஒரு விடயத்தைத் தெரிவித்தார்.
அரசு வேளாண் துறையினரின் ஆலோசனையைக் கேட்டு, தாங்கள் தொடர்ந்து கடைபிடித்துவந்த பயிர்செய் முறைகளை கைவிட்டுவிட்டு, ‘அமோக விளைச்சல் தரும ்’, ‘நல்ல விலை கிடைக்கும ்’ போன்ற முழக்கங்களை நம்பி, பயிரிட்டுக் கொண்டிருந்த பருப்பு வகைகளை தவிர்த்துவிட்டு, சந்தைப் பயிர்களுக்கு விவசாயிகள் தாவியது இப்படிப்பட்ட முக்கிய சத்துப் பயிர்ச் சாகுபடி இல்லாமல் போனதற்குக் காரணம் என்று கூறினார்.

துவரை, உளுந்து, பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, மொச்சை, அவரை, கொள்ளு என்று பல்வேறு வகைகளை கலப்புப் பயிர்ச் சாகுபடி செய்துவந்த நமது விவசாயிகள், மக்காச் சோளம் போன்ற பயிர் வகைகளை சாகுபடிச் செய்யத் தொடங்கியதால் வந்த வினை இது என்றார். மக்காச் சோளம் இங்கே கோழிக்கும், அயல் நாட்டில் பன்றிகளுக்கும் ஆன தீவனமே என்றார். இதனால் மேற்கண்ட பயிர்களின் சிறந்த விதைகள் இல்லாமல் போய்விட்டன என்றும் குமரவேல் கூறினார்.

நெடுங்காலமாக நல்ல விளைச்சலையும் தந்து, கிராமப் பொருளாதாரத்திற்கு ஆதாரமாகவும் திகழ்ந்த பல ‘நாட்டு விதை ரகங்கள ்’ இன்று இல்லாமல் போய்விட்டது என்றும், பருப்பு வகைகள் விதைப்பு, பின்பு தானியங்களை விதைப்பதற்கான சத்தை நிலத்திற்கு தந்த காலம் மலையேறிவிட்டது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பருப்பு வகைகள் ஒரு மானாவாரிப் பயிர்களாகத்தான் சாகுபடி செய்யப்பட்டு வந்ததென்பதையும், கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஆடியில் பெய்ய வேண்டிய மழை தள்ளிப் பெய்து வருவதால் அதுவும் இதற்கு ஒரு தடைக்கல்லாகிவிட்டது என்றும் குமரவேல் கூறினார்.

ஆக, நமது நாட்டிற்குத் தேவையான அளவிற்கு பருப்பு வகைகள் உற்பத்தியை எதுவெல்லாம் பாதித்தது என்பதைப் பார்த்தால், பொருளாதார முன்னெற்றக் கூச்சல் போடும் மத்திய, மாநில அரசுகள், இந்நாட்டின் கிராம பொருளாதாரத்திற்கும், இந்த நாட்டின் உணவுப் பொருள் தேவைக்கும் முதுகெலும்பாகத் திகழ்ந்த வேளாண்மையை கண்டு கொள்ளாமல் விட்டதும், நமது நாட்டு விவசாயிகள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்த விவசாய முறைகளை மாற்றி, அவர்கள் செய்து வந்த பயிர்ச் சாகுபடிகளை மாற்றி, அவர்களுக்கு காசு ஆசைக் காட்டி கெடுத்தது குட்டிச் சுவராக்கிவிட்டன என்பதே.

இப்போது பருப்பு தேவைக்காக இறக்குமதி செய்கிறோம் என்றும், அதையும் தாண்டி, ஆப்ரிக்க நாடுகளில் நிலத்தை குத்தகை எடுத்து, கார்பரேட் விவசாயம் செய்து, அதன் மூலம் நமது நாட்டின் பருப்புத் தேவையை, உணவு எண்ணெய்த் தேவையை நிவர்த்தி செய்வோம் என்று கூறியும் ஏமாற்ற முற்பட்டுள்ளன. செல்பேசி சேவை நடுத்தும் தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து அயல் நாட்டில் விவசாயம் செய்து நம் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப்போகின்றன என்று கூறுவது, “கூரை ஏறிக் கோழிப் பிடிக்கத் தெரியாதவன் வைகுண்டத்திற்கு வழிகாட்டினானாம ்” என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது.

வெள்ளையின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து 150 ஆண்டுகள் போராடி இந்த நாடு விடுதலை பெற்றது. நாம் ‘இண்டிபெண்டண்ட ் ’ ஆனோம். ஆரம்பத்தில் தன்னிறைவு என்ற முழக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து, பிறகு பசுமைப் புரட்சி என்று கூறி உரங்களைக் கொண்டு வந்து நிரப்பி உற்பத்தியைப் பெருக்கிய அரசுகள், இன்று தேவையை நிறைவு செய்ய இறக்குமதியை நாடின. இன்று உணவுத் தேவையை நிறைவு செய்ய ஒப்பந்த விவசாயம் ( Corporate farming) என்ற பெயரில் கார்ப்பரேட்டை நாடுகின்றன. நமது நாட்டின் விவசாயிகளை நிர்கதியாக்கி, இண்டிபெண்டட் நாட்டை டிபெண்டண்ட் ஆக்கிவிட்டன.

உலகில் எத்தனையோ நாடுகள் முன்னேறிய நாடுகளாக தங்களை பறைசாற்றிக் கொண்ட போதும், பலமான விவசாயப் பின்னணியைக் கொண்டதாக இந்தியா இருந்ததால், அது தலை நிமிர்ந்து நின்றது. இன்று விவசாயம் சாகடிக்கப்படுகிறது. அது இந்த நாட்டை தலை குனியச் செய்யும், விரைவில் அது நடக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments