காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையிலான இந்தக் குழு கடந்த ஆண்டு அக்டோபரில் தயாரித்து அளித்த சட்ட வரைவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்த நிபுணர் குழு, போதுமான உணவுப் பொருட்கள் அரசின் கையிருப்பில் இலலை என்று கூறி நிராகரித்தது.
அதைத் தொடர்ந்து தற்போது உருவாக்கப்பட்டுவரும் புதிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவின் படி, கிராமப்புறங்களில் வாழும் 46 விழுக்காடு ‘முன்னுரிமைக் குழ ு’ மக்களுக்கும், நகரத்தில் வாழும் 28 விழுக்காடு மக்களுக்கும் மாதத்திற்கு கிலோ ரூ.3க்கு அரிசியும், ரூ.2க்கு கோதுமையும், ரூ.1க்கு இதர தானிங்களும் பெறுவதை சட்டப் பூர்வ உரிமையாக்குகிறது.
இதுமட்டுமின்றி, 'பொதுப் பிரிவ ி' ன் கீழ் கிராமப்புறங்களில் வாழும் 44 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 22 விழுக்காடு மக்களுக்கும் மாதத்திற்கு 20 கிலோ உணவு, தானியங்களை அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையில் பாதி விலைக்கு வழங்கவதையும் அடிப்படை சட்டப்பூர்வமாக்குகிறது.
ஆக, ஒட்டுமொத்தமாக கிராமப்புறங்களில் வாழும் 90 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 50 விழுக்காடு மக்களுக்கும் சேர்த்து, நாட்டின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினருக்கு குறைந்த விலையில் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதை சட்டப்பூர்வமாக்குகிறது உணவுப் பாதுகாப்பு சட்டமாகும்.
தேச ஆலோசனைக் குழுவின் இந்த பரிந்துரை பொதுமக்களின் கருத்திற்காக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது பொருளாதார நிபுணரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி.ரங்கராஜன் உள்ளிட்ட நிபுணர்களின் கருத்தையும் தேச ஆலோசனைக் குழு எதிர்ப்பார்க்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகையில் முன்னுரிமைக் குழு, பொதுப் பிரிவு ஆகியவற்றை எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்வது என்பதையும் கூறுமாறு மத்திய அரசை தேச ஆலோசனைக் குழு கேட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தங்களுடைய முன்னுரிமைக் குழு மக்கள் பிரிவில் தாழ்த்தப்பட்ட, ஆதிவாசிகள் அனைவரையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பிரிவில் கொண்டுவருமாறு ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தையும் தேச ஆலோசனைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்காக தேச ஆலோசனைக் குழு உருவாக்கும் திட்டத்திற்கு 2011 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ஆண்டிற்கு 7.4 கோடி மெட்ரிக் டன் உணவு இருப்பு தேவைப்படுகிறது. ஆனால், தற்போதுள்ள கொள்முதல் படி, 5.6 முதல் 5.7 கோடி டன் வரைதான் இத்திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய அளவிற்கு மத்திய அரசிடன் உணவுப் பொருள் இருக்கும் என்ற நிலை உள்ளதென கூறப்படுகிறது.