Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2010 - இந்திய விளையாட்டு வீரர்களின் திறன்

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2010 (20:24 IST)
FILE
நமது நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தங்கள் திறனை சர்வதேச அளவில் நிரூபிக்க இந்த ஆண்டில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஒன்று டெல்லியில் நடந்த காமன்வெல்த், மற்றொன்று சீனத்தின் குவாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.

இந்த இரண்டு போட்டிகளிலும் இதுவரை இப்போட்டிகளில் வென்றதைவிட அதிகமான தங்கப் பதக்கங்களுடனும், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலிலும் மிக அதிகமாக வென்று இந்திய போட்டியாளர்கள் தங்கள் திறனை நிரூபித்துக் காட்டினர்.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பெற்ற ஆஸ்ட்ரேலியாவிற்குப் (ஆஸி. 177 பதக்கங்கள்( பிறகு, இந்தியா 38 தங்கம் + 27 வெள்ளி + 36 வெங்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 101 பதக்கங்களை வென்றது. முதன் முறையாக 100 பதக்கங்களை தாண்டியதும் ஒரு சாதனையே.

காமன்வெல்த் போட்டிகள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் போட்டியல்ல என்றாலும் (இது காமன்வெலத் நாடுகளுக்கிடையிலான நட்பு விளையாட்டுப் போட்டியே), ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்ரிக்கா போன்ற ஒலிம்பிக்கில் நன்கு சோபிக்கும் நாடுகளின் போட்டியாளர்கள் மட்டுமின்றி, விளையாட்டு உலகில் ஆப்ரிக்க சக்திகளான கென்யா, நைஜீரியா, உகாண்டா, பஹாமாஸ், கேமரூன், கானா ஆகியனவும், மேற்கு இந்தியத் தீவுகளின் ஜமைக்கா, டிரினிடாட் அண்ட் டொபாகோ போன்ற நாடுகளின் போட்டியாளர்களும் பங்கேற்றதால் இந்தியப் போட்டியாளர்களின் திறனை சோதிக்க சரியான வாய்ப்பாக அமைந்தது.காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் ஆகிய இரண்டிலும் தங்கள் திறனை அபாரமாக வெளிப்படுத்திய இந்திய வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருராக அலசுவது நன்றாக இருக்கும்.

ககன் சிங்

FILE
துப்பாக்கிச் சுடுதலில் உலக சாம்பியனாக உயர்ந்த இவருடைய திறன் காமன்வெல்த்தில் பெருமளவிற்கு வெளிப்பட்டது. தனியாகவும் அபினவ் பிந்த்ராவுடனும் இணைந்து பல தங்கப் பதக்கங்களை வென்றார். காமன்வெல்த்தில் போட்டிகள் இல்லாததால் இவர் இத்தனை பதக்கங்களை வென்று குவித்தார் என்று கருதிட இடமில்லை. இவருடைய வெற்றிப் புள்ளிகள் யாவும் உலக சாதனையோடு இணைந்து நிற்கும் அளவிற்கு உயர்ந்து நின்றன.

காமன்வெல்த் போட்டிகளில் சோபித்த அளவிற்கு ஆசியப் போட்டிகளில் ககன் சோபிக்கவில்லை. இதற்குக் காரணம், காமன்வெல்த் போட்டிகள் முடிந்து ஒரு மாத இடைவெளி கூட இல்லாத நிலையில் 16வது ஆசியப் போட்டிகள் நடைபெற்றதுதான். துப்பாக்கிச் சுடுதல் போன்ற துல்லியமான விளையாட்டுகளுக்காக ஒரு வீரர் நீண்ட கால பயிற்சியுடனும், ஒரு தளர்வான மன நிலையிலும் இருக்க வேண்டும். அந்த வாய்ப்பு ககன் நரங்கிற்கு இல்லாமல் போனது. இருந்தும் ஒரு தனித்தும், அணியுடனும் சேர்ந்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெங்கலப் பதக்கங்களையும் வென்றார். இவரது சாதனை 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெளிப்படும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

2. மகளிர் வில்வித்தை அணி

டோலா பானர்ஜி, பம்பாய்லா தேவி, தீபிகா குமாரி ஆகியோர் கொண்ட இந்திய மகளில் வில்வித்தை அணி, காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டிலும் கடும் போட்டியைச் சந்தித்தது. காமன்வெல்த் போட்டிகளில் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்ற இந்த அணியால் ஆசிய போட்டிகளில் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம் நாடுகளின் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. காமன்வெல்த்தில் கனடா, ஆஸ்ட்ரேலியா அணிகளும் பெரும் சவாலாக இருந்தன. ஆயினும் ஓராண்டிற்கும் மேலான கடும் பயிற்சி அவர்களுக்கு தங்கத்தைப் பெற்றுத் தந்தது. இவர்கள் தரமான பயிற்சி பெற இந்திய ஒலிம்பிக் சங்கம் (கல்மாடிதான் இன்னமும் தலைவர்) ஏற்பாடு செய்தால், லண்டன் ஒலிம்பிக்சி்ல் நாட்டின் பெருமையை உயர்த்துவார்கள் என்பது நிச்சயம்.

4 x 400 தொடர் ஓட்ட மகளிர் அண ி

FILE
காமன்வெல்த், ஆசிய விளையாட்டு ஆகிய இரண்டிலும் தங்கம் வென்று சாதனை படைத்த அணி. மஞ்சித் கெளர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குஞ்சி, மன்தீப் கெளர் ஆகியோர் தங்கம் வென்றதில் மட்டுமல்ல, அதனை சாதனை நேரத்தில் ஓடி வென்றதுதான் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காமன்வெல்த் போட்டிகளில் பந்தய தூரத்தை 3 நிமிடம் 27.77 நொடிகளில் ஓடி சாதனை படைத்த இந்த அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கசகஸ்தான், சீன அணிகளை பின்னுக்குள் தள்ளிவிட்டு 3 நிமிடம் 29.02 நொடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தது.
உலக சாதனையோடு ஒப்பிடுகையில் 13 நொடிகள் பின்னால் இருக்கிறது இந்திய மகளிர் அணி. முறையான சூழலில் பயிற்சியளித்தால், இவர்களால் நிச்சயம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

சுதா சிங ்

ஆசிய விளையாட்டில் நாம் சற்றும் எதிர்பாராத ஒரு பதக்கம், அதுவும் தங்கப் பதக்கம் கிடைத்ததென்றால், அது 3,000 மீட்டல் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் சுதா சி்ங் பெற்ற பதக்கம்தான். இந்த போட்டியில் இதுவரை இந்தியர் எவரும் பதக்கம் வென்றதில்லை. அதனை சுதா சிங் சாதித்துள்ளார். தடகளத்தில் ஸ்டீபிள் சேஸ் மிக கடுமையான போட்டியாகும். இதில் போட்டியிடுவோர் மிகக் கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும். நீடித்து ஓடும் திறன் அதிகம் பெற்ற ஓட்டப்பந்தய போட்டியாளர்களே இதில் ஈடுபடுவர். அப்படிப்பட்ட போட்டியில், அதுவும் ஆசிய அளவில் கடும் போட்டியுள்ள நிலையில், சுதா சி்ங் பெற்ற வெற்றி வியப்பானதாகும். பந்தய தூரத்தை 9 நிமிடம் 55.67 நொடிகளில் கடந்து, கடும் போட்டியை அளித்த சீனத்தின் யுவான் ஜின்னை வென்றார் சுதா சிங்.

அஸ்வினி சிதானந்தா அக்குஞ்சி

ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் தடையோட்டத்தி்ல் தங்கம் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய மற்றொரு வீராங்கனை அஸ்வினி சிதானந்தா அக்குஞ்சி. பந்தையத்தின் கடைசி 100 மீட்டர்களில் - கடைசி இரண்டு ஹர்டில்களைக் கடக்கும்போது தனது போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றி பெற்றார் அஸ்வினி. பந்தய தூரத்தை 56.61 நொடிகளில் கடந்த இவர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.


விஜேந்தர் சிங ்

FILE
75 கி.கி. குத்துச் சண்டையில் காமன்வெல்த்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை துடைத்தெறிந்து மிகச் சிறப்பாக சண்டையிட்டு தங்கம் வென்ற விஜேந்தர் சிங், கடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்புடைய மிகச் சிறந்த வீரராவார்.

குத்துச் சண்டையில் உலகின் எந்த ஒரு வீரரையும் திறமையுடன் எதிர்கொள்ளும் வல்லமை கொண்ட விஜேந்தர், ஒரே நேரத்தில் பாதுகாப்பையும், தாக்குதலையும் சம நிலையில் தொடுக்கக் கூடியவர். இந்த ஆண்டில் இவரின் திறன் முதலில் மறைக்கப்பட்டு, பிறகு மிளிர்ந்துள்ளது. இவரோடு தங்கப் பதக்கம் பெற்ற கிஷண் விகாஸ் குறிப்பிடத்தக்க சிறந்த பாக்சராகத் திகழ்கிறார்.

பஜ்ரங் லால் தாக்கர ்

படகுப் போட்டியில் தங்கம் என்பது இந்தியர்களாகிய நமக்கு கனவிலும் பார்த்திராத ஒன்று. ஒரு நாள் திடீரென அதனை சாதித்தோடு, அதில் தங்கப் பதக்கம் பெற்ற வியப்பில் ஆழ்த்தியவர் பஜ்ரங் லால் தாக்கர். ஸ்கல்ஸ் எனப்படு்ம ஒற்றையாள் படகுப் போட்டியில் கடும் போட்டிகளுக்கிடையே இவர் வெற்றி பெற்றது மிகப் பெரிய அதிசயமாகும். துவக்கத்தில் இருந்து இறுதிவரை அதற்காக அவர் போராட வேண்டியிருந்தது. 2,000 மீட்டர் தூரத்தை அவர் முதலில் கடந்த முடித்து வெற்றியை அறிவிக்க கையை உயர்த்தியபோது, படகுக் குழாமில் இந்தியாவின் முதல் வெற்றி பதிவாகியிருந்தது. படகுப் போட்டியில் நாமும் சாதிக்கலாம் என்று எண்ணத்தை இந்தியர்களுக்கு அளித்துள்ளது பஜ்ரங் லாலின் வெற்றி.

பஜ்ரங் லால் பெற்ற தங்கம் மட்டுமன்றி, படகுப் போட்டியில் மூன்று வெள்ளிகளையும், ஒரு வெங்கலத்தையும் (மகளிர் அணி) வென்றதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

கீதா சிங்

55 கி.கி. மல்யுத்தப் போட்டியில் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற கனடா நாட்டு வீராங்கனையை வென்று காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்ற கீதா சிங் நிச்சயம் போற்றுதலிற்குரியவராவார். கனடா நாட்டு வீராங்கனைக்கு எதிராக அவர் புள்ளிகளில் அல்ல, முழுமையான வெற்றியைப் பெற்றார். ஆனால், ஆசியப் போட்டிகளில் அவரால் அந்த வெற்றியை தொடர முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் நிச்சயம அவர் மேலும் பல வெற்றிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர் என்பது திண்ணம்.

சுரேஷ் சத்யா

தமிழ்க வீரரான சுரேஷ் சத்யா, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் 4 x 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரஹமத்துல்லா மொல்லா, ஷமீர் மன்சில், அப்துல் நஜிப் குரேஷி ஆகியோருடன் இணைந்து, புதிய காமன்வெல்த் சாதனையுடன் வெங்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றவர். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் களமிறங்கியிருக்க வேணடியவர், ஆனால் என்ன காரணத்தினாலோ தொடர் ஓட்டத்தில் மட்டும் களமிறக்கப்பட்டார். இங்கிலாந்து உள்ளிட்ட தலை சிறந்த ஓட்டப் பந்தய வீரர்களைக் கொண்ட அணிகளுடன் அன்றைக்கு மோதிய இந்திய அணி, மிக குறைந்த வித்தியாசத்தில்தான் மூன்றாவது இடத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் பந்தய தூரத்தை 38.89 நொடிகளில் கடந்தது புதிய தேச சாதனையாகும். குறுகிய எதிர்காலத்தில் உலக அளவில் இந்தியாவின் தடகள வீரர்களும், வீராங்கனைகளும் மிகப் பிரமாதமாக சாதிப்பார்கள் என்பதற்கு இந்த சாதனை ஒரு அத்தாட்சியாகும்.

சாய்னா நேவால ்

FILE
உலக தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் என்றைக்கோ முன்னேறிவிட்ட சாய்னா நேவால், பாட்மின்டன் போட்டிகளில் தலைசிறந்து விளங்கும் இந்தோனேஷியா, சீனா, ஹாங்காங்க், இங்கிலாந்து நாடுகளின் மிகச் சிறந்த வீராங்கனைகளையெல்லாம் பல முறை வென்று தனது திறனை நிரூப்பித்தார். இந்த ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் ஆசியப் போட்டிகளில் தோற்றார். அந்த தோல்வியின் நிழல் மறைவதற்குள் உலக சாம்பியன் தொடர் போட்டியில் மீண்டும் சாம்பியனாகி தனது அபாரத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உடைய இந்திய போட்டியாளர் சாய்னா.

பங்கஜ் அத்வானி

பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் ஆகிய இரண்டிலும் தலைசிறந்த சர்வதேச போட்டியாளராக வளர்ந்துள்ள பங்கஜ் அத்வானி, ஆசியப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார். அபாரமான ஆட்டத்திறனும், அயராத மன வலிமையும் கொண்டவர். இவரும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தங்க கனவை நனவாக்கும் வல்லமை படைத்தவராவார்.

சோம்தேவ் தேவ்வர்மன்

FILE
ஒரே நேரத்தில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் பெருமையை தூக்கி நிறுத்தியதுபோல், இப்போது சோம்தேவ் தேவ்வர்மன் இந்தியாவின் பதக்க நட்சத்திரமாகத் திகழ்கிறார். தனி நபர் பிரிவிலும், இரட்டையர் பிரிவில் ரோஹன் போப்பன்னாவுடனும் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றுத் தந்த இந்த இளம் வீரர், இரட்டையர் போட்டிகளில் மேலும் வலிமையாக முன்னேறி வருகிறார்.

இவர்களைப் போல் இன்னும் பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இந்த ஆண்டில் மிக வலிமையாக தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். வரும் ஆண்டில் இந்த பொன்னான போட்டியாளர்கள் எதிர்பார்க்கும் பயிற்சி வசதிகளை (ஊழலைத் தவிர்த்து) ஏற்படுத்தி, அவர்கள் திறன் வளர இந்திய ஒலிம்பிக் சங்கம் உதவும் என்று எதிர்பார்போமாக.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments