ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர் நலனை கெடுப்பவர் தமக்கே ஆயுள் முழுவதும் சுப தினம் என்ற பாடல் வரிகள் தான் 2007 -ஆம் ஆண்டைக் கடந்து 2008 -ல் அடியெடுத்து வைக்கப் போகும் போது உதடுகள் முணுமுணுக்கும் வைர வரிகளாக உள்ளன! இதனை நம்மால் மாற்ற இயலுமா என்றால் நிச்சயமாக முடியும். எப்படியென்றால் மாற்றங்களை புரிந்துக் கொண்டு பிளவுகள், பிணக்குகள் அற்ற மனித சமுதாயத்தை உருவாக்க இந்த புத்தாண்டு உங்களை அழைக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தையும் வரவேற்பதற்காக மனிதர்கள் நாம் எத்தனை வகையான தயாரிப்புகளை எல்லாம் மேற்கொள்கிறோம். புத்தாடை, புதிய நகைகள், பக்தி முயற்சிகள், விருந்து வைபவங்கள், புத்தாண்டு இலக்குகள், சுய ஆய்வுகள், பெரியவர்களின் ஆசியைப் பெறுதல், தர்ம காரியங்களில் ஈடுபடுதல் என பல்வேறு புத்தாண்டுத் தயாரிப்புகளில் ஈடுபடுகிறோம். இப்படியாக உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை தொடங்கும் நிலையில் அந்த ஆண்டு இறுதியில், நடைப்பெற்ற நிகழ்வுகளைத் சற்று பின்னோக்கி பார்த்தால் அத்தனையுமே வீணாகிப்போன ஒன்றாகத் தான் புலப்படுகிறது. நல்ல சிந்தனைகள், செயல்கள், மனப்பான்மையுடன் தானே தொடங்கினோம், பின்னர் ஏன் இந்த நிலை என்பது மட்டும் ஏனோ நமக்கு விளங்காமல் தேவ இரகசியமாகவே நீடிக்கும் அவல நிலை தான் காலம் காலமாக தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத, இன, மொழி, அரசியல், வட்டாரத் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் தான் தொடங்குகிறது. ஆனால் தொடக்கத்தில் நல்லவனாக உள்ள மனிதன் நாளாக நாளாக தனது இலக்கில் இருந்து தடம் புரளத் தொடங்குகிறான். அவனைத் தடம் புரளச் செய்வது எது என்று பார்த்தால், எது மனிதனை நெறிபடுத்தும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த அமைப்புகள் தான் நம்மை மாற்றுகின்றன.
மனிதச் சமுதாயம் கூடி வாழும் முறையை சார்ந்தது. மேலும் இயற்கை நியதிப்படி ஒரு உயிரினத்தைச் சார்ந்து மற்றொன்று வாழவேண்டும். இந்த அடிப்படையில் மனிதன் குழுக்களாக வாழத் தொடங்கினான். குழுவாக வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் படிப்படியாக சாதி, இனம், நிறம், மதம், மொழி, தேசியம் என பிரித்து வைக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பல்வேறு தத்துவங்கள், நிலைப்பாடுகள் தோன்றின.
பின்னர் அவற்றில் எது சிறந்தது என்ற கேள்வியில் தான் மனிதன் தன்நிலை மறக்கத் தொடங்கினான். தன்னுடைய சாதி, இனம், நிறம், மதம், மொழி, தேசியம் தான் சிறந்தது என மனிதன் வாதம் செய்ய முற்பட்டபோது பிணக்குகளும், பிளவுகளும் உருவாகின. உலகின் கடந்த கால வரலாற்றைத் திருப்பி பார்த்தோமானால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு மதம், இனம், மொழி, நாட்டின் ஆதிக்கம் இருந்து பின்னர் இருந்த அரிச்சுவடே இல்லாமல் போனதையும், சில சிறுத்துப் போயுள்ளதையும் காணமுடியும்.
தற்போது உலகத்தில் உள்ள எல்லோரும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானவை தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான். இந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன? மனிதனின் உரிமைகள் ஒரு சில ஆதிக்க வர்க்கத்தால் மறுக்கப்பட்ட போது உருவானவை என்று சொன்னால் அது மிகையாகாது. நாம் வாழும் வாழ்க்கையில் ஒருவனுக்குச் சரி எனத் தோன்றுவது மற்றவரின் பார்வையில் தவறாகத் தோன்றும். பிரச்சனைகளுக்கான மூலத்தை அறிந்து அதனைக் களையாத வரை எப்படி ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியாதோ அதைப் போன்று தான் தீமைகளுக்கு எதிரான நம்முடைய போராட்டங்கள் எல்லாமே அமைந்துள்ளன. அதனால் தான் நம்முடைய இலக்கை நாம் எட்டாமலே இருந்து வருகிறோம்.எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைத் தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்ற பாடல் வரிகள் இன்றைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகின்றன. தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தை சாதி, இனம், நிறம், மதம், மொழி, தேசியம் எதுவும் தெரியாமல் தான் வந்து பூமியில் பிறக்கிறது. பின்னர் வளர வளர அக்குழந்தை ஒவ்வொன்றாக பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறது. ஆரம்பம் முதலே அவன் சாராத சாதி, இனம், நிறம், மதம், மொழி, தேசியம் பற்றி தவறான தகவல்களை கற்றுக் கொடுத்து விட்டு, பின்னர் அவனிடமிருந்து வேறோன்றை எதிர்பார்த்தால் அது யாருடைய தவறு என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லா மதங்களும் நல்லவற்றைத் தான் மனிதனுக்கு போதிக்கின்றன. ஆனால் மனிதன்தான் போதனைகளை கடைப்பிடிக்காமல், சடங்கு - சம்பிரதாயங்களில் முழ்கிப்போய் ஆன்மிகத்தைக் கைக்கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றான். எந்த மதமும் தீய செயல்களை ஆதரிக்கவில்லை. மதங்களின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாத நிகழ்வுகளுக்கு பின்னால் ஓளிந்து கொண்டு இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.கண்ணால் காண்கிற சகோதரனை அன்பு செய்ய இயலாதவன், கண்ணால் காண இயலாத இறைவனை எங்ஙனம் அன்பு செய்ய முடியும் என்று பைபிளும், ஈடு இணையில்லாத கருணையுள்ளவன் என்று குரானிலும், உலகில் பிறந்த மககள் அனைவருமே இறைவனின் குழந்தைகள் என கீதையிலும் கூறப்பட்டுள்ளது. மதங்கள் இப்படிக் கூறும் நிலையில் மனிதர்களாகிய நாம் மத ரீதியாக மக்களை பிரித்து பார்க்காத ஒரு சமுதாயத்தை நமது மனங்களில் இப்புத்தாண்டு முதல் உருவாக்க விளைவோம். அதுவே இன்றைய பிரச்சனைகளுக்கு எல்லாம் நல்ல தீர்வை தரும்.
பாதை எல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும. மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்து விடும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப மாற்றத்தைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியான மனித சமுதாயத்தை உருவாக்க இப்புத்தாண்டில் உறுதியேற்போமா.