மானுட ஒற்றுமை என்பதே இயற்கையின் இறுதித் திட்டத்தின் நிச்சயமான ஒரு அங்கமாகும், அது நடந்தே ஆகவேண்டும். மானுட இனத்தின் வேரான அதன் உயிர்த்துடிப்பினையும், செழுமைமிக்க வேறுபாடுகளைக் கொண்ட அதன் ஒற்றுமையையும் பாதுகாத்து, அதற்குறிய சூழலில் அது நிறைவேறியே தீரும். ஸ்ரீ அரவிந்தர்.எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் தங்களது தனி மனித, சமூக, உலக வாழ்க்கையில் கடந்த ஓராண்டில் சந்தித்த மானுட இனம், சற்றும் மனம் தளராமல் புது நம்பிக்கைகளுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது. புத்தாண்டு பிறப்பும், அது தொடர்பான வழமையான விழாக்களும் ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படும் (உலகளாவிய) சம்பிரதாயமாக தெரிந்தாலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்கின்ற மானுடத்தின் வேட்கையை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது.இருபதாவது நூற்றாண்டிலிருந்து இருபத்தியொன்றாவது நூற்றாண்டில் உலகம் அடியெடுத்து வைத்தபோது இந்த வேட்கை மிக உச்ச கட்டமாக இருந்தது. இன, மத, மொழி பேதங்களின்றி அனைவரும், நாட்காட்டியுடன் நிகழ்ந்த அந்த கால மாற்றத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், புத்தாயிரம் ஆண்டு பிறந்து 8 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், உலக வாழ்வில் ஏற்பட்ட (விரும்பத்தகாத) பல நிகழ்வுகள், மிகவும் ஆவலுடன் மானுடம் எதிர்பார்த்த மாற்றங்களுக்கு நேர் மாறாக பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.
அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் நமது அன்றாட வாழ்க்கையில் ஏராளமான வசதிகளை அளித்தன. இந்த மேம்பாடுகள் அனைத்தும் சமூகத்தின் இடைத்தட்டு, மேல்தட்டு மக்களின் வணிக, அலுவலக செயல்திறனைத்தான் மேம்படுத்தினவே தவிர, விவசாயிகள் உள்ளிட்ட சமூக வாழ்வின் ஆதாரமாகத் திகழும் அடித்தட்டு மக்களுக்கு எந்த வித்த்திலும் உதவிடவில்லை. பொருளாதார வாழ்விலும் கடைத்தட்டு மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அறிவியல் ரீதியான சாதனை என்று பறைசாற்றப்பட்டு உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட வீறிய விதைகள் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு மாறாக அவர்களின் வாழ்விற்கே உலைவைத்தது. இருபதாவது நூற்றாண்டின் இறுதியில் நடைமுறைக்கு வந்த உயிரியல் தொழில்நுட்ப பயங்கரத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமையை இறக்கிவைக்க அரசுகளும் முன்வரவில்லை. நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அவர்களுக்கு உதவியிருக்க வேண்டிய உயர் (உயிரி) தொழில்நுட்பம் உயிரைக் குடித்தது.
எனவே பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டப்படும் குறியீடுகள் சமூக யதார்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இந்த நிலை இந்திய நாட்டை மட்டுமே சார்ந்ததன்று, உலக அளவில் கிராம வாழ்க்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறதென்றும், இயற்கை சார்ந்த தொழில்களைத் துறந்துவிட்டு, பிழைப்புத் தேடி நகரத்தை நோக்கிவரும் மக்கட்தொகை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் ஐ.நா.வின் மக்கள் தொகை உயர்வு தொடர்பான அறிக்கை கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், இந்த மானுட பெயர்தல் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்காவிலும் அதிகமிருக்கும் என்றும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
மக்களின் அடிப்படை வாழ்க்கை அதீத அழுத்தத்தற்கும், பொருளாதார வளர்ச்சியை(?) உந்தித் தள்ளும் அரசின் திட்டங்களினால் நெருக்கடிக்கு உட்பட்டுவரும் அதேவேளையில், பயங்கரவாதமும், கொள்கைத் தீவிரவாத வன்செயல்களும் உலக வாழ்விற்கும், ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பெரும் சவாலாக உருவாகிவாகி, வலுப்பெற்றும் வருகின்றன. 2001 செப்டம்பர் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் தனியாகவும், ஆங்காங்கு மற்ற நாடுகளுடன் இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளும் - அந்நாடுகளின் பொருளாதார, அரசியல் ஆதாயங்களை உள்ளடக்கியதாக இருந்ததால் - எந்த பலனையும் தரவில்லை. பயங்கரவாத ஒழிப்பு என்றச் சொல் இன்று அரசியல் முழக்கமாகவே ஆகிவிட்டது.
காஷ்மீர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ நகரங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களிலும், ஜார்க்கண்ட், சட்டீஸ்கார் மாநிலங்களில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் உயிரிழந்தோர் அப்பாவி மக்களே!
லண்டன், மாட்ரிட், துருக்கியில் நடந்த தாக்குதல்களிலும் உயிரைவிட்டவர்கள் பொதுமக்களே. எனவே மானுட வாழ்வு எதிர்கொண்டுவரும் இந்தக் கடுமையான சவாலை முறியடிக்க அரசுகள் - அவை எப்படிப்பட்ட வல்லரசுகள் ஆனாலும் - முழுமையாக தோல்வியடைந்துவிட்டன.
உலக நாடுகளை ஆளும் அனைத்து அரசுகளும் - அவை எப்படிபட்ட கொள்கைச் சார்புடைய அரசுகள் ஆனாலும் - மக்களின் இயல்பான எதிர்பார்புக்களை நிறைவேற்றுவதில் முழுமையாக தோற்றுவிட்டன. இவைகள் கடைபிடிக்கும் கொள்கைகளும், அணுகுமுறைகளும் அந்தக் கால மன்னராட்சி நிர்வாக முறைகளிலிருந்து சற்றே மாறுபட்டனவாகத்தான் உள்ளனவே தவிர, மானுட வாழ்வின் மேம்பாட்டை குறிக்கோளாக்க் கொண்டவையாக இல்லை. ஒவ்வொரு நாளும் தனது அன்றாட வாழ்க்கைக்காக உணவிலிருந்து, உயிரை பாதுகாத்துக் கொள்வது வரை மானுட இனம் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
இந்தப் போராட்டத்திலிருந்து விடுபட வழி? நாம் சிந்திக்க வேண்டும். உலகின் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களின் தேவையும், எதிர்பார்ப்பும் ஒன்றுதான். அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலைகொண்ட வாழ்க்கை! இந்த வாழ்வை, அற்புதமான இந்த எதிர்பார்ப்பை அரசுகளால் தரமுடியாது. ஏனெனில், சராசரி மனிதனைப்போல அவைகளும் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. நமக்காகவே போராடிக் கொண்டிருப்பதாக அவைகள் கூறிக்கொள்கின்றன! அப்படிக் கூறிக்கொண்டே ஏதாவது ஒரு பெயரில் நம்மை பிளக்கின்றன, வேறு வழியில்லை என்றும் கூறுகின்றன. இவைகளின் போக்கு இயற்கையின் இயல்பான போக்கிற்கு முற்றிலும் முரண்பட்டது. அதனால்தான், இன்று இயற்கையில் கூட மாறுதல் ஏற்பட்டு மானுட வாழ்விற்கு அச்சுறுத்தல் ஆகிவிட்டது.
எனவே இதற்கு ஒரே மாற்று, மானுட ஒற்றுமை. இயற்கையின் இயல்பில் அது உள்ளது. எல்லா விதத்திலும் உள்ளது. அதனையே அடிப்படையாகக் கொண்டு அந்த உன்னத ஒற்றுமைக்கு வழிகாண வேண்டும். அதனைச் சிந்திப்போம். ஆழமாக சிந்திப்போம். இதற்குமேலும் நாட்டு நிர்வாகிகளிடம் நமது சிந்தனையை ஒப்படைப்பதைத் தவிர்ப்போம்.
மானுட ஒற்றுமையிலேயே அற்புதமான அந்த அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் திறவு உள்ளது. புதியதொரு புத்தாண்டுப் பிறப்பில் சிறக்கட்டும் நமது சிந்தனை... மானுடத்தின் புது வாழ்வை நோக்கி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.