தமிழகம் மேலும் மேன்மை பெற வரும் 2008ம் ஆண்டிலும் புதிய திட்டங்களை, வளர்ச்சிப் பணிகளைத் தொடர்வோம்! தொடர்ந்து உழைத்திடுவோம்! தமிழகத்தை உயர்த்திடுவோம்! எனும் உறுதியோடு, தமிழக மக்களுக்கு மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், புத்தாண்டு 2008 பிறக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித் தளமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவதில் உறுதுணையாக அமைந்த 2007ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி, 2008ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்கும் வேளையில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர் ஆகிய பெருமக்களின் கோட்பாடுகளும், கொள்கைகளையும் உறுதுணையாக வந்து தோள் வலிமை தந்திட, கடமையாற்றும் வழியில் கிடக்கும் தடைகளை அகற்றி முன்னேற்றப் பாதையில் என்னருமைத் தமிழ்க் குடிமக்களை வழி நடத்திட வேண்டும் என்னும் உணர்வு உந்த, அல்லும் பகலும் அயராமல் பணியாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது இந்த அரசு.
அதனால் தான் 'காலம் பொன் போன்றது; கடமை கண்போன்றது' என்பதைக் கணந்தோறும் எண்ணி, 2006ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் மிகுந்த முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு, அவற்றின் மூலம் ஏழை, எளியோர் நலன் பெற்று வருதை எல்லோரும் அறிவர்.
அருமைத் தமிழ் மக்கள் மகிழ, தமிழகம் மேலும் மேன்மை பெற வரும் 2008ம் ஆண்டிலும் புதிய திட்டங்களை, வளர்ச்சிப் பணிகளைத் தொடர்வோம்! தொடர்ந்து உழைத்திடுவோம்! தமிழகத்தை உயர்த்திடுவோம்! எனும் உறுதியோடு, தமிழக மக்களுக்கு மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.