உலகளவில் ஒருமித்த விழாவாக கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது இனம், மொழி, பண்பாடு என்ற எல்லைகளை எல்லாம் கடந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நாளாக தொன்றுதொட்டு கொண்டாடப்படுகிறது.
2008-ம் ஆண்டை வரவேற்க பலரும் தயாராக உள்ள நிலையில், நாளிதழ்கள் வழக்கம் போல் புத்தாண்டு பலன்களை சுடச்சுட பதிப்பித்துள்ளன. இதனையே சிறப்பு மலராக விளம்பரப்படுத்தி 'கல்லா' கட்டிக் கொள்கின்றன.
இன்னும் ஒருபடி மேலேபோய் சில தமிழ் நாளிதழ்கள், புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவன்ப் பெயர் பொறித்த மாத காலண்டர்களை இலவச இணைப்பாக வழங்கி மக்களுக்கு பெரும் `சேவையாற்றி' வருகின்றன. "இதில் துல்லியமான பஞ்சாங்கக் கணிப்புகள் என்ற பெருமை வேறு".
ஆனால் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறிது சிறிதாக நமது மனதை விட்டு வெகு தூரம் சென்று வருவது கடந்த சில ஆண்டுகளாகவே கண்கூடாக தெரிகிறது.
"பிராந்திய தொலைக்காட்சிகள்" கூட உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வராத படத்தை திரையிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதால், எதிர்காலத்தில் புதுப்பட கொண்டாட்டமே புத்தாண்டாக மாறி விடுமோ என்று எண்ணும் அளவிற்கு தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுபோதாது என்று தற்போது கையடக்கபேசி/ அலைபேசி/ செல்பேசி என பல பெயர்களில் அழைக்கப்படும் செல்போன் விற்பனை கடைகளும், வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளும் புத்தாண்டு சலுகைகளை வாரி வழங்கி தமிழ் மக்களின் மனதை சஞ்சலப்படுத்தி வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் அபரிமித வளர்ச்சி அடைந்துள்ள கால்சென்டர், பிபிஓ மற்று ஐ.டி. நிறுவனங்களும், புத்தாண்டு தினத்திற்காக தங்கள் பணியாளர்களிடம் பல்வேறு போட்டிகளை நடத்தி புதிய அலுவல் கலாசாரத்தை தங்கள் பங்குக்கு உருவாக்கி வருவதை மறுப்பதற்கில்லை.
இது இப்படியிருக்க, உலகளவில் தீவிரவாதமும் தன் பங்கிற்கு பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதை சமீப காலமாக நடந்த அசம்பாவித சம்பவங்கள் பிரதிபலித்துள்ளன.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிக்காமல் இருந்த நாட்கள் தான் குறைவு என்று எண்ணும் அளவுக்கு குண்டுவெடிப்பு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் தனது பெயரை சேர்த்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தை சமீபத்திய ஹைதராபாத், உத்தரபிரதேச தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.
குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை மனதில் பதிய வைப்பதே தீவிரவாதத்தை ஒழிக்க உதவும் என இந்திய குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி வந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமும் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் சர்வதேச அளவில் தீவிரவாதம் மட்டும் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருவது மனதளவில் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது. (குழந்தைகளிடம் கலாம் உருவாக்கிய தாக்கம் எதிர்காலத்தில் ஒருவேளை தீவிரவாதத்தை ஒழிக்க உதவலாம்).
இதற்கிடையில் நிலநடுக்கம், புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் தங்கள் பங்குக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை 2007ல் ஏற்படுத்தியுள்ளது நாளேடுகளின் முக்கிய செய்திகளாக வெளிவந்தன.
இதனை ஈடுசெய்யும் விதமாக இந்த ஆண்டின் நோபல் அமைதி விருதை இந்தியாவைச் சேர்ந்த ராஜேந்திர பச்சோரி, அமெரிக்காவின் அல்கோர் உடன் பகிர்ந்து கொண்டது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், உலக மக்கள் அதனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
எதிர்வரும் 2008ம் ஆண்டில் உலகளவில் தீவிரவாதம் குறையவும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும் உலகநாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் புத்தாண்டு விருப்பமாக இருக்கட்டும்.
இல்லாவிட்டால் தீவிரவாதம் உள்ளிட்ட சீர்கேடுகளை குறிப்பிட்டு 2009ம் ஆண்டிலும் தமிழ் வழி இணையங்களில் மீண்டும் இது போன்றதொரு அபாயகரமான கட்டுரை வெளியிடப்பட்டிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
முற்றும்.