ரியல் எஸ்டேட்!இந்தியாவில் சமீப காலங்களில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த காலங்களை விட 2007 ரியல் எஸ்டேட் துறைக்கு பொன்னான காலம் எனலாம். இந்தியாவில் மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமில்லாமல், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டது. புதிய நவீன பாணி அலுவலகம், ஆடம்பர வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. சிமென்ட் விலை, மணல், செங்கள், இரும்பு கம்பி போன்ற கட்டுமானத்துறைக்கு தேவையான அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்தாலும், இதன் தாக்கத்தை ரியல் எஸ்டேட் துறையும், கட்டுமானத் துறையும் தாங்கி வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் ரியல் எஸ்டேட் துறையும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி பிரமாண்டமானதாக இருக்கும். ஏனெனில் இந்த துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதி அதிகப்படுத்தப்பட உள்ளது. இதில் மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. இதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படவுடன் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை பெரும் பாய்ச்சலில் வளர்ச்சி அடையும் என்பதில் சநதேகமில்லை. உள்கட்டமைப்பு.
இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதி போதிய அளவில் அல்லது தேவையான அளவிற்கு இல்லை என்பது எல்லா பிரிவு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையே. இது சர்வதேச தரத்தில் இல்லை என்பதுடன், தேவையை நிறைவு செய்யும் அளவிற்கும் இல்லை. கடந்த பத்து வருடங்கள் உள்கட்டமைப்பு துறையின் மறுமலர்ச்சி காலம் எனலாம்.
மத்திய அரசு, மாநில அரசுகள், குறிப்பாக மத்திய திட்டக்குழு உள்கட்டமைப்பு துறையில் அதிக கவனம் செலுத்த துவங்கியது. சாலை, துறைமுகம், விமான நிலையம் போன்ற மிக அத்தியாவசிய உள்கட்டமைப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது அரசுக்கு மட்டும் உள்ள கடமை என்ற மனநிலை மாற துவங்கியது. இதில் தனியார் துறையையும் ஈடுபடுத்த வேண்டும், இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ஒட்டு மொத்த பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, பயன் படுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தாலும் பரவலாக வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இந்தியாவின் எல்லா துறைமுகங்கள், முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்சக்கர நெடுஞ்சாலை திட்டத்தின் 93 விழுக்காடு வேலைகள் நவம்பர் மாதம் வரை நிறைவேறியுள்ளது. இது அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு பெற்று விடும்.
இதற்கடுத்து பயனை மக்கள் குறிப்பாக சரக்கு போக்குவரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த வருடம் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. இனி அடுத்த ஆண்டுகளிலும் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி மிகப் பெருமளவில் இருக்கும் என்று உறுதியாக கூறலாம். ஏனெனில் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12 ) மத்திய அரசு சாலை, ரயில் பாதை, விமானம் மற்றும் கடல், உள்நாட்டு ஆறுகள் வழி போக்குவரத்து, மின் உற்பத்தி, மின் விநியோகம், குடிநீர் விநியோகம், பாசன வசதி மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு ஒதுக்குவது என முடிவு எடுத்துள்ளது. இவைகளுக்கு தற்போது 4.6 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது.
இது போன்ற காரணங்களினால் எதிர்காலத்தில் பல்வேறு தொழில்களின் வளர்ச்சி பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
இதே போல் உயிரி தொழில் நுட்பம், உணவு பதப்படுத்தும் துறை, மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், அயல் நிர்வாக பணி, அயல் நிறுவன சேவை, மருத்துவ வசதி, மருத்துவ சுற்றுலா, விவசாயம் இயந்திரமயமாதல், உரம் பூச்சி மருந்து பயன்படுத்தாமல் செய்யப்படும் இயற்கை விவசாயம், விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி உட்பட பல துறைகளின் வளர்ச்சி அடுத்த ஆண்டுகளில் சிற்ப்பாக இருக்கும்.
உலக அரங்கில் 21 ம் நூற்றாண்டின் நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியா திகழும். இது பொருளாதாரம், தொழில் நுட்பம், மனித ஆற்றல், உற்பத்தி, முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி உட்பட எல்லா துறைகளிலும் நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ச்சி பெறும். இதற்கு இந்த ஆண்டை விட, அடுத்த ஆண்டில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.