சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. துவக்க வீரர் ஸ்ட்ராஸ் தனது 14 -வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
நேற்றைய 3ம் நாள் ஆட்டம் நேர இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்து, இந்திய அணியை விட 247 ரன்கள் முன்னிலை வகித்தது. ஸ்ட்ராஸ் 73 ரன், காலிங்வுட் 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 4 -ஆம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. இந்திய பவுலர்களின் பந்து வீச்சு இன்றும் எடுபடாததால், ஸ்ட்ராஸ் மற்றும் காலிங்வுட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஸ்ட்ராஸ், 2-வது இன்னிங்சிலும் ஆதிக்கம் செலுத்தி தனது 14-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
தற்போது உணவு இடைவேளைவரை ஸ்ட்ராஸ் 102 ரன்களும், காலிங்வுட் 93 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்து அணி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 316 ரன்களும், இந்தியா 241 ரன்களும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.