இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்! - அமைச்சர் ரகுபதி!

Prasanth Karthick
திங்கள், 2 ஜூன் 2025 (12:38 IST)

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி சார்தான் என விமர்சித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு இன்று 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ‘யார் அந்த சார்?’ என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்,

 

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரகுபதி ”அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள், அதே போல 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை விரைவாகப் பெற்றுத்தருவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் அவர் தலைமையிலான திராவிட மாடல் அரசும் காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

 

அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

 

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன்தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.

 

“அமைச்சர்களுடன் படம் எடுத்ததற்காக முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு எனக் குற்றம்சாட்ட முடியாது” என உயர் நீதிமன்றமே தலையில் கொட்டிய போதும் திருந்தாமல் பெண்களை அச்சுறுத்தி அவர்களது படிப்பை முடக்க வேண்டும் என்பதற்காக  ‘யார் அந்தச் சார்?’ என புரளியை வைத்து மலின அரசியல் செய்து வந்தார் பழனிசாமி

 

உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவும் தனது அறிக்கையிலும் ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை அவனின் செல்போன் ‘flight Mode’ இல் தான் இருந்ததும், அவன் யாருடனும் பேசவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தியது.

 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி

 

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி!

 

தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி!” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்