Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழிசையை சுற்றி ஜால்ரா கூட்டம். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட இராமசுப்பிரமணியம்

தமிழிசையை சுற்றி ஜால்ரா கூட்டம். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட இராமசுப்பிரமணியம்
, வியாழன், 22 பிப்ரவரி 2018 (15:26 IST)
சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர் தொலைக்காட்சி விவாதகங்களில் கலந்து கொள்ளும் இராமசுப்பிரமணியன் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது நீக்கம் குறித்தும் தமிழிசை குறித்தும் அவர் மனம் திறந்து சில விஷயங்களை தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

 பொது வெளியில் பதிவு வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால் டாக்டர். தமிழிசை பர்மாவிலிருந்து என்னை பாஜகவிலிருந்து நீக்குவதாக எல்லா ஊடகங்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டார். நான் கம்பெனிகளில் மிக உயர்ந்த பொறுப்புகளில் இருந்தவன். ஊழியர் சரியில்லை என்றால் அவரிடம் நேருக்கு நேர் பேசி அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் பெற்று அவருக்கு சேர வேண்டிய தொகைகளைத் தந்து நல்ல சர்வீஸ் கடிதமும் கொடுத்து அனுப்புவேன். இப்படித்தான் நல்ல கம்பெனிகளின் நடைமுறை.

இப்போது விஷயத்திற்கு வருவோம். நான் 1963-இல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பள்ளிப் பருவத்திலேயே ஷாகாவிற்கு சென்றவன். 1977-இல் ஜனசங்கம் தமிழகத் தலைவரால் (உயர்திரு. நாராயண ராவ்) ஜனசங்க உறுப்பினர் ஆனவன். 1980-இல் பாஜக தமிழக தலைவராக நாராயண ராவ் தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்னை பாஜக உறுப்பினர் ஆக்கினார். பொறுப்புகள் தந்த போது மறுத்துவிட்டேன். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஹெச்பி போன்ற அமைப்புகளுக்கு என்னால் இயன்ற அளவு ஏதோ வகையில் உதவியாக இருந்து வருகிறேன்.

இல கணேசன் அவர்கள் பாஜக பொறுப்புக்கு வந்த பிறகு பெரிய பொறுப்புகளை ஏற்க கேட்டார். நான் மிகப்பெரிய கம்பெனி நிர்வாகியாக இருந்ததால் இயலவில்லை. ஆனால் பாஜகவிற்கு என்னால் இயன்ற அளவில் ஏதோ செய்து கொண்டிருந்தேன். இருப்பினும் இல.கணேசன் அவர்கள் என் மீது மிக்க அன்பு கொண்டவர். ஏதாவது பொறுப்பு ஏற்க வேண்டுமென தொழில் வணிக அமைப்பு மாநில தலைவர், மாநில கல்வி அமைப்பு மாநிலத் தலைவர் என்பன போன்றவற்றையெல்லாம் வழங்கி, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என்பதிலெல்லாம் இணைத்தார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பல பெரிய தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எல்லா வகையான நிகழ்ச்சிகளுக்கும் எனக்கு அழைப்பு விடுப்பார்.

பொன்னார் அவர்கள் என்னை மிக உயர்ந்த நிலையில் வைத்து மிக மரியாதை தருபவர். எனக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணித் தலைவர் என்றெல்லாம் பொறுப்பு அளித்தவர். மாநில செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டாலும் என் உடல்நிலை கருதி இயலவில்லை என்று சொல்லிவிட்டேன். எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் என் பங்கு இருக்க வேண்டும் என்பார். பிறகு மாநில செயற்குழு உறுப்பினர் எனவும் ஆக்கினார். பிறகு வந்தவர் தான் தமிழக பாஜக தலைவராக டாக்டர். தமிழிசை. நல்லவராக இருப்பார் என்று பார்த்தால் அவர் விகார முகம் தான் உண்மை என்று பலரும் சொல்வதை நான் முதலில் நம்பவில்லை.

நான் யாரிடமும் அதிக நெருக்கம் காட்டாதவன். ஆனால் மதிப்பு அளிப்பவன். நான் தொலைக்காட்சிகளில் பொருளாதாரம், கல்வி, சட்டம், சுற்றுச்சூழல், ஆன்மீகம், நிர்வாகம், பங்கு சந்தை, அரசியல் என பல விஷயங்கள் குறித்து 1997-இலிருந்து பேசி வருபவன். பாஜக என சொல்லிக் கொண்டதே இல்லை. ஆனால் தமிழிசை என்னைக் கேட்காமலேயே பாஜக செய்தித் தொடர்பாளர் என ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியது எனக்குத் தெரியாது. அந்தவகையில் நான் பேசுவது என் சுதந்திரம் பறிபோனதாக உணர்ந்தேன்.

தமிழிசை தொலைபேசியில் நான் பாஜக சார்பில் பேச வேண்டுமென கேட்டுக் கொண்டதால் 23 நாட்கள் கழித்து மிகுந்த கவலையுடன் தொலைக்காட்சிகளில் பேச ஆரம்பித்தேன். 2016 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பெரிய ஊழல் நடக்கின்றது என பல பாஜக நண்பர்கள் கவலையுடன் சொன்னதால் அதைப் பற்றி ஒருகடிதம் தமிழிசைக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை திரு.கேசவ விநாயகம், மாநில செயல் பொதுச் செயலாளருக்கும் அனுப்பிவிட்டு நான் அமெரிக்கா சென்றுவிட்டேன்.

திரும்பியதும் தமிழிசையைப் பார்த்து பேச அவர் அறைக்குள் சென்றால் என்னைப் பார்த்து கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மன வேதனையுடன் இல கணேசன் அவர்களிடம் பேசியதும் இண்டர்காமில் கேசவ விநாயகத்திடம் உடனே ராம சுப்ரமணியனுடன் பேசுங்கள் என்றார். நான் விநாயகத்துடன் எல்லாவற்றையும் பற்றி பேசி நான் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என்றேன். அவர் கையைப் பிடித்துக் கொண்டு அப்படி செய்யாதீர்கள் என வேண்டியதால் நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

ஒரு நாள் என்னை செய்தித் தொடர்பாளர் லிஸ்டிலிருந்து எடுத்துவிட்டு அதை ஊடகங்களுக்கு அனுப்பினார் தமிழிசை. பண மதிப்பு இழப்பு பற்றி ஆரம்பத்தில் சாதகமாகப் பேசினாலும் அதன் தவறுகள் பற்றி புரிந்ததால் அதை எதிர்த்துப் பேசினேன், தனியாக. நீட்தேர்வு எதிர்ப்பு என்னுடையது. பட்ஜெட் அறிவிப்புகள் பல செயலில் இல்லை என்றும் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் பேசினேன். தற்போது பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் பற்றி உள்ளது உள்ளபடி தொலைக்காட்சிகளில் பேசினேன்.

சில மாதங்களுக்கு முன்பு பாஜக திரு. S. R. சேகர் " நீங்கள் தொலைக்காட்சி விவாதங்களுக்குப் போகக்கூடாது. அப்படிப் போனால் கட்சியை விட்டு நீக்குவேன் என தமிழிசை சொல்லச் சொன்னார்" என்றார். " நான் பாஜக என்றே போவதில்லை. என் சுதந்திரத்தில் யாரும் தலையிடமுடியாது" என்று பதில் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

உடனே விநாயகத்துடன் தொடர்பு கொண்டு பேசினேன். " ஐயோ! நானே வீட்டுக்கு வந்து பேசுகிறேன் " என்றார். இன்று வரை வரவில்லை.
 பொன்னார் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு இப்படி அவர் பேசியது மிக்க வருத்தமளிக்கிறது. சென்னை வரும்போது என்னைப் பாருங்கள் என்றார். நான் தான் இதுவரை பார்க்கவில்லை. வேறு ஒரு நிகழ்ச்சியில் தமிழிசையிடமே கேட்டபோது அதெல்லாம் ஒன்றுமில்லை. மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.

ராமகோபாலன் ஜி அவர்கள் பத்திரிகை ஒன்றில்,  டாக்டர். தமிழிசை பேட்டி கொடுப்பதை நிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் தான் தமிழக பாஜக உருப்படும் என்று பேட்டி கொடுத்தார். அவர் எவ்வளவு தீர்க்கதரிசி. உங்களைப் போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்க தமிழிசைக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது" என்றார் இந்துமுன்னணி தலைவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில்.

தமிழிசையை சுற்றி ஒரு சிறிய ஜால்ரா கூட்டம் உள்ளது. தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது. ஊடகங்களை மிரட்டுகிறது. ஆக தமிழக பாஜக வளராமல் சீரழிவுப் பாதையைநோக்கி செல்வதற்கு தமிழிசையும் அச்சிறு நரிக்கூட்டமுமே காரணம். ஏதாவது பேரதிசயம் நடந்தால் மட்டுமே தமிழக பாஜக உருப்படும். என்னைப் பொறுத்தவரை " நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்பது எனக்கு நன்கு தெரியும். என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருந்தால் உடனே கொடுத்திருப்பேன். கான்சர் என்பதால் ஒரு நுரையீரல் எடுக்கப்பட்ட நிலையில் என் உடல்நிலையும் சரியில்லை. இப்படிப்பட்ட என்னை கட்சியிலிருந்து நீக்க சங்கத் தொடர்பே இல்லாத தமிழிசை போன்ற வக்கிர புத்தி கொண்டவர்களாலேயே முடியும்.

எனக்கு மிகுந்த சந்தோஷம். விடுதலை. என்னால் ஆன நல்ல காரியங்களை செய்ய அதிக நேரம் கிடைத்தது. இறைவன் கருணை என்மீது பொழிகின்றது. எதிலிருந்து விடுபடுகின்றோமோ அதிலிருந்து துன்பம் இல்லை, துயரம் இல்லை. வள்ளுவர் " யாதலின் யாதலின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் " என்று எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார்!”

இவ்வாறு ராமசுப்பிரமணியன் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...