திருச்சியில் மூளைச்சாவு அடைந்த ஒரு வாலிபரின் உடல் உறுப்புகளை, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த 9 மாதங்களாகவே உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் சிட்டி மருத்துவமனை அறிக்கையும் வெளியிட்டது. அதில், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் ஆகியவை உள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு, அவரை சந்திப்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டதாகவும், கார்த்தியின் கிட்னி மற்றும் கல்லீரலை, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனுக்கு பொருத்த முடியுமா என்பது குறித்த ஆய்வுகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.