தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்வு எப்போது நடத்துவது, முக்கியமான பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.